Published : 15 Feb 2021 03:12 AM
Last Updated : 15 Feb 2021 03:12 AM
அஞ்சலகங்களில் முதிர்வு பெற்ற பிறகும் திரும்பப் பெறாத வைப்புத் தொகையை பெறுவதற்கு விண்ணப்பிக்க 4 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளதால், உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, அஞ்சல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
அஞ்சலகங்களில் உள்ள கிசான் விகாஸ், பொது சேமநல நிதி (பிபிஎஃப்), தேசிய சேமிப்பு பத்திரம், டைம் டெபாசிட் உள்ளிட்ட பல்வேறு சேமிப்புத் திட்டங்களில் டெபாசிட் செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல், கோரப்படாமல் உள்ள வைப்புத் தொகையை திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 11 லட்சம் டெபாசிட்டுகள் கோரப்படாமல் உள்ளன. இந்தக் கணக்குகளை தொடங்கியவர்கள், தாங்கள் கணக்குத் தொடங்கிய அஞ்சல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு பணத்தைக் கோரலாம். கணக்குத் தொடங்கியவர்கள் இறந்திருக்கும் பட்சத்தில், அவரது நாமினிகள் இறந்தவரின் பெயரில் உள்ள ஆவணங்களை காண்பித்து பணத்தைப் பெறலாம்.
ஒருவேளை டெபாசிட்தாரர், நியமனதாரரின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், அஞ்சலகத்தில் பணம் வழங்கும் அதிகாரிக்கு நியமனதாரர் மீது திருப்தி ஏற்படும் பட்சத்தில் ரூ.5 லட்சம் வரையிலான வைப்புத் தொகையை வழங்கலாம். நியமனதாரர்களும் இறந்திருக்கும்பட்சத்தில், டெபாசிட் செய்தவரின் வாரிசுகள் அதைக் கோர உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
வைப்புத் தொகை எந்த அஞ்சலகத்தில் செய்யப்பட்டதோ, அந்தஅஞ்சலகத்தில்தான் விண்ணப்பித்து பெற வேண்டும் என்றில்லை. தற்போது வசிக்கும் ஊரில் உள்ள அஞ்சலகத்தில்கூட விண்ணப்பித்து பணத்தைப் பெறலாம். பொதுவாக, சேமிப்புக் கணக்குகள் தொடர்ந்து 3 ஆண்டுகள் பரிவர்த்தனை இல்லாமல் இருந்தால், அந்தக் கணக்கு செயல்பாடற்ற கணக்காக மாறி விடும். அதன் பிறகும், அந்தக் கணக்கில் 7 ஆண்டுகளுக்கு எவ்வித பரிவர்த்தனையும் மேற்கொள்ளாமலும், புதுப்பிக்காமல் இருந்தால் அந்தக் கணக்கில் உள்ள தொகை மூத்தக் குடிமக்கள் நிதியத்துக்குச் சென்று விடும்.
இதன்படி, வரும் 18-ம் தேதிக்குள் விண்ணப்பித்து பெறாத வைப்புத் தொகை கணக்குகளில் உள்ளபணம் மூத்தக் குடிமக்கள் நிதியத்துக்குச் சென்று விடும். அங்கு 25 ஆண்டுகள் வரை அப்பணத்தைப் பெறலாம். எனினும், பணம் அங்குசென்ற பிறகு அதைப் பெற கடுமையான விதிமுறைகள் உள்ளதால், பணத்தைப் பெறுவது என்பது சற்று கடினமான செயலாக இருக்கும். எனவே, அஞ்சலகத்தில் உடனடியாக விண்ணப்பித்து பணத்தைப் பெறுவதே எளிதாக இருக்கும். இவ்வாறு கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT