Published : 16 Jun 2014 04:42 PM
Last Updated : 16 Jun 2014 04:42 PM
தமிழகத்தில் ஆண்கள் வயிற்று புற்றுநோயாலும், பெண்கள் மார்பக புற்றுநோயாலும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை அடையார் புற்றுநோய் மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் 60-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மருத்துவ மாணவர்களுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடந்தது. இதில் மருத்துவர் சுவாமிநாதன் கூறியதாவது:
புகையிலை, குட்கா
புகை பிடிப்பது, குட்கா பழக்கத்தினால்தான் ஆண்கள் வயிறு புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். உணவு பழக்கமும் சில நேரம் காரணமாக இருக்கலாம். எண்ணெயில் நன்கு பொரித்த உணவு, அதிக கொழுப்புச் சத்துள்ள உணவு ஆகியவற்றை அடிக்கடி உட்கொண்டால், புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம். பெண்கள் தாமதமாக குழந்தை பெற்றுக்கொள்வது மார்பக புற்றுநோய்க்கான காரணங்களில் முக்கியமானது.
இவ்வாறு மருத்துவர் சுவாமிநாதன் கூறினார்.
புற்றுநோய் பாதிப்பு தொடர்பாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனை நடத்திய ஆய்வு அறிக்கை விரைவில் வெளிவரவிருக்கிறது. 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆய்வில், 2016-ம் ஆண்டு வரை தமிழகத்தில் எந்த புற்றுநோய் அதிகம் இருக்கும், அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூறப்பட்டுள்ளது.
காரணம் என்ன?
வயிற்று புற்றுநோய்க்கான காரணங்களை ஆராய அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, திரிபுரா மாநிலம் அகர்தலாவில் உள்ள அரசு புற்றுநோய் மருத்துவமனை இணைந்து ஒர் ஆய்வை மேற்கொண்டு வருகின்றன. சென்னையில் மருத்துவர் ராஜ்குமார் தலைமையிலும் அகர்தலாவில் மருத்துவர் கவுதம் மஜும்தார் தலைமையிலும் இந்த ஆய்வு நடந்து வருகிறது.
இதுபற்றி மருத்துவர் சுவாமிநாதன் கூறுகையில், ‘‘புகை பிடிக்கும் எல்லோருக்கும் புற்றுநோய் வருவதில்லையே. புகை பழக்கம் இல்லாதவர்களுக்கும் புற்றுநோய் வருகிறதே என்று பலரும் கேட்பார்கள். இதற்கு திட்டவட்டமாக பதில் கூற முடியவில்லை. இந்த ஆய்வு அதற்கு பதில் கூறும். சென்னையில் 300 பேரும், அகர்தலாவில் 300 பேரும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவார்கள்’’ என்றார்.
மருத்துவம் என்பது கலை, அறிவியல்
புற்றுநோய் மருத்துவமனை தலைவர் வி.சாந்தா பேசும்போது, ‘‘நோயாளிகள் கூறுவதை மருத்துவர்கள் பொறுமையாக கவனிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கான சரியான மருந்தை அளிக்க முடியும். மருத்துவம் என்பது கலை, அதே நேரம் அறிவியல். ஆனால், தற்போது இது கலை என்பதை விட அறிவியலாக மட்டுமே பார்க்கப்படுகிறது’’ என்றார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு மருத்துவ கல்லூரிகளின் இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT