Published : 12 Jun 2014 04:20 PM
Last Updated : 12 Jun 2014 04:20 PM

ரூ.12 லட்சம் பரிசு விழுந்துள்ளது- டுபாக்கூர் எஸ்.எம்.எஸ். தகவலால் ரூ.80,000-ஐ இழந்த அரசப்பன்

ரூ.12 லட்சம் பரிசு விழுந்துள்ளதாக வந்த எஸ்.எம்.எஸ். தகவலால் ரூ. 80 ஆயிரத்தை இழந்துள்ளார் அரசப்பன்.

நவீன தகவல் தொடர்பால் எத்தனையோ மோசடிகள் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. இம்மோசடிகளைத் தடுக்க சைபர் கிரைம் என்று ஒரு துறையே இயங்கி வருகிறது. ஆனால், பொதுமக்களிடம் இம்மோசடிகள் குறித்து தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தாததால் பலே கில்லாடி பேர்வழிகளிடம் சிக்கி, அப்பாவிகள் ஆயிரக்கணக்கான ரூபாய்களை இழந்து வருவது தொடர்கதையாகி வருகிறது.

மதுரை அலங்காநல்லூர் அருகே சேந்தமங்கலத்தைச் சேர்ந்தவர் அரசப்பன். இவரது செல்போனுக்கு, கடந்த ஜூன் 6-ம் தேதி ஒரு எஸ்.எம்.எஸ். வந்துள்ளது. அதில், குலுக்கலில் உங்களுக்கு ரூ.12 லட்சம் கிடைத்திருப்பதாகவும், அந்தப் பணத்தை உடனே பெற ரூ.80 ஆயிரத்தை குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைப் பார்த்ததும், ஆனந்த அதிர்ச்சி அடைந்த அரசப்பன் உடனே எஸ்.எம்.எஸ். வந்த செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டுள்ளார். அதில் ஒரு நபர் தெரிவித்த மும்பையைச் சேர்ந்த வங்கிக் கணக்கில் அரசப்பன் ரூ.80 ஆயிரத்தை செலுத்தினார்.

ரூ.12 லட்சம் வரும் வரும் என ஒருவாரம் காத்திருந்த அரசப்பன், ஒன்றுமே வராததால் ஒருவாரம் கழித்து எஸ்.எம்.எஸ். வந்த எண்ணைத் தொடர்பு கொண்டார். அப்போது அந்த செல்போன் எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

அதிர்ச்சி அடைந்த அரசப்பன், இந்த நூதன மோசடி குறித்து பாலமேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x