Published : 14 Feb 2021 05:10 PM
Last Updated : 14 Feb 2021 05:10 PM
மெட்ரோ ரயில் சேவை தற்போது 30 சதவீதப் பயணிகளுடன் மட்டுமே இயங்குகிறது. இதனால் திட்டமிட்ட இலக்கை மெட்ரோ ரயில் எட்டவில்லை. ஆகவே, மெட்ரோ ரயில் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என தன்னார்வ அமைப்பு பிரதமரிடம் மனு அளித்துள்ளது.
இதுகுறித்து பொதுமக்களுக்கான போக்குவரத்து விழிப்புணர்வு மற்றும் நல மையம் என்ற தன்னார்வ நிறுவனம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“பொதுமக்களுக்கான போக்குவரத்துகளான தரைவழி மற்றும் இருப்புப்பாதை போக்குவரத்து விழிப்புணர்வு மற்றும் நலன் குறித்து எங்கள் தன்னார்வல அமைப்பு செயல்பட்டு வருகிறது என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். குறிப்பாக பெருகி வரும் நகரமயமாக்கல் காரணமாக வேகமாக உயர்ந்துவரும் போக்குவரத்து குறித்து ஆய்வுகள் மேற்கொள்வது மற்றும் கருத்துப் பட்டறைகள் நடத்துவது ஆகிய பணிகளிலும் ஈடுபட்டு வருகிறோம்.
இதனால் சாலைகளின் தரத்தை உயர்த்துவது வாகனங்களின் தேவையை உயர்த்துவது மற்றும் சாலையோரத்தில் நடந்து சொல்வோர் நலன் குறித்தும் அரசுக்குப் பல ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கியுள்ளோம். பொதுப் போக்குவரத்தைப் பெருமளவு உயர்த்துவதன் மூலம் தற்போதைய போக்குவரத்து நெரிசலைப் பெருமளவு குறைக்க முடியும் என்பன போன்ற ஆக்கபூர்வமான ஆலோசனையாகத் தெரிவித்துள்ளோம்.
எனவே, தற்போது அரசு மேற்கொண்டு வரும் மெட்ரோ ரயில் திட்டத்தை நாங்கள் முழுமையாக ஆதரிப்பதுடன் விடுபட்ட பகுதிகளுக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் வைக்கிறோம். 2016-ல் இத்திட்டம் கோயம்பேடு வரை ரயில் பாதை அமைக்கத் திட்டமிட்டபோது நாளொன்றுக்கு 3 லட்சம் பேர் பயணிப்பார்கள் என்று கணிக்கப்பட்டது. பின்னர் இத்திட்டம் வண்ணாரப்பேட்டை, கிண்டி, தேனாம்பேட்டை, அண்ணா சாலை வரை நீட்டிக்கப்பட்டபோது நாளொன்றுக்கு 7 லட்சம் பேர் பயணிப்பார்கள் என்று கணிக்கப்பட்டது.
ஆனால், கணிப்பிற்கு மாறாக நாளொன்றுக்கு 2 லட்சம் பேர்தான் பயணிக்கிறார்கள். திட்டமிடலுக்கு மாறாக 30 சதவீதம் பேர்தான் மெட்ரோ ரயிலில் பயணிக்கிறார்கள். போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாது பயணிக்கலாம் என்றபோது பல நேரங்களில் ஒரு முறை செல்லும் மெட்ரோ ரயிலில் 4 பெட்டிகளில் 1200 பேர் மட்டுமே பயணிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதிக அளவு செலவு செய்து உருவாக்கப்பட்ட மெட்ரோ ரயிலில் குறைந்த அளவு பயணிகளே செல்வதற்கான காரணம் என்ன?
இதுகுறித்து எங்கள் அமைப்பு பொதுமக்களை வீடுகள், போக்குவரத்து நிறுத்தங்கள், பொது சந்திப்பு முனைகள் ஆகிய இடங்களில் சந்தித்து கையெழுத்து இயக்கம் நடத்தியதுடன் மெட்ரோ ரயிலில் போகாமல் இருப்பதற்கான காரணம் குறித்தும் கருத்துக் கணிப்பு நடத்தினோம். ஏனைய பொது போக்குவரத்துச் சேவைகள் மிகக்குறைந்த கட்டணத்தில் கிடைக்கும்போது அதிக கட்டணம் செலுத்தி மெட்ரோ ரயிலில் பயணிக்க விரும்பவில்லை என்ற கருத்து பரவலாக அதிகமான மக்களால் கூறப்பட்டது.
சமீபத்தில் தமிழக அரசு பேருந்துக் கட்டணத்தை 30 சதவீதம் உயர்த்தியபோது பொதுமக்கள் அதை விட குறைந்த கட்டணத்தில் இயங்கும் புறநகர் ரயிலுக்கு மாறினார்கள். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களின் மாத ஊதியம் ரூ.10,000/-க்கும் குறைவே என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். பொருளாதார வரத்துக் குறைவு என்பதால் அவர்கள் குறைந்த கட்டணத்தில் இயங்கும் பொதுப் போக்குவரத்தையே விரும்புகிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.
அரசின் எந்த ஒரு திட்டமானாலும் மக்களின் முழுமையான ஆதரவைப் பெறவில்லையெனறால் அது தோல்வியடையும் என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றே. நமது நகரங்கள் பல்வேறு பொருளாதாரப் பின்புலத்தைக் கொண்ட மக்களைக் கொண்டது என்பதால் பொதுமக்களுக்கான சேவைகள் ஒவ்வொருவரையும் சென்றடையும் வகையில் கட்டணங்களைத் தகவமைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். குறிப்பாக பொதுப் போக்குவரத்துக் கட்டணங்களை நிர்ணயிக்கும்போது கட்டணம் குறித்து தெளிவான திட்டம் என்பது மிக மிக அவசியமே.
கொல்கத்தா மாநகரில் ஒரு நாளைக்கு 7 லட்சம் பேர் ரயில் பயணம் செய்கிறார்கள். டெல்லியில் தொடக்க நாட்களில் குறைவாக இருந்த பயணிகளின் எண்ணிக்கை தற்போதைய கணக்கெடுப்பின்படி மே-ஜூன் 2019-ல் 47 லட்சம் பயணிகளைக் கையாண்டுள்ளது. காரணம் குறைந்த கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளதுதான்.
பராமரிப்பு மற்றும் இயக்குவதற்கான செலவு என்பது 10 சதவீதமாக இருந்தாலும் 100 சதவீதமாக இருந்தாலும் ஒன்றேதான் என்பதை நிர்வாகம் புரிந்துகொண்டு கட்டணத்தைச் சீரமைக்க வேண்டும். நஷ்டத்தில் இயக்குவதை விட லாபகரமாக அதேசமயம் பொதுமக்களுக்குப் பயன் தரும் வகையில் இயக்குவது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் சிந்திக்க வேண்டும்.
சி.எம்.ஆர்.எல் மெட்ரோ சேவை தற்போது 30 சதவீதப் பயணிகளுடன் மட்டுமே இயங்குகிறது என்பதும், இதனால் இத்திட்டத்திற்காக மத்திய, மாநில அரசுகள் வழங்கியுள்ள நிலங்களின் பயன்பாடு தனது இலக்கை அடையாதது, தனிநபர் வாகனப் போக்குவரத்து உபயோகித்தலைக் குறைப்பது, சுற்றுச்சூழலில் கார்பன் வெளிப்படுதலைக் குறைப்பது, பொதுப் போக்குவரத்தை உபயோகப்படுத்த பொதுமக்களை ஊக்கப்படுத்துவது ஆகிய இறுதியான இலக்குகளை அடைய இயலாது”.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT