Published : 14 Feb 2021 11:23 AM
Last Updated : 14 Feb 2021 11:23 AM

அழிந்து வரும் கழுதைகள் இனம்: ராமேசுவரம் தீவில் சரணாலயம் அமைக்கப்படுமா?

தமிழகத்தில் அழிந்து வரும் கழுதைகள் இனத்தைப் பாதுகாக்க ராமேசுவரம் தீவில் சரணாலயம் அமைக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழர்கள் வளர்க்கும் கால்நடைகளில் கழுதைக்கு முக்கியப் பங்குண்டு. சங்க இலக்கியங்களில் இவ்விலங்கு பொறைமலி கழுதை, நெடுஞ்செவிக் கழுதை என அகநானூற்றுப் பாடல்க ளிலும், வெள்வாய்க் கழுதைப் புல் லினம் என புறநானூற்றுப் பாடல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மிளகு, உப்பு மூட்டைகளை கழுதை களின் மீது வணிகர்கள் ஏற்றிச் சென்றதை பொருநராற்றுப் படையும் (77-82), அகநானூறும் (207:5-6) குறிப்பிட்டுள்ளது.

நாட்டார் தெய்வ வழிபாட்டில் கழுதைகளுக்கு என்று தனி இடமுண்டு. அமிர்தம் எடுப்பதற்கு பாற் கடலை கடைந்தபோது அதிலிருந்து முதலாவதாக வந்த தெய்வம் ஜேஷ்டை. ஜேஷ்டை என்றால் மூத்த, முதலாவது என்று பொருள். தமிழில் மூத்த தேவி (மூதேவி) என்றழைக்கப்படும் இந்த தெய்வத்தின் வாகனம் கழுதையாகும். கழுதைகள் குறுக்கே செல்வதும், கணைப்பதும் நல்ல சகுனமாக நம்பப்படுகிறது.

ராமேசுவரம், தனுஷ்கோடி கழுதைகள் ராமேசுவரம் தீவு பகுதியில் பாண்டிய மன்னர்கள் காலத்தில் முத்து குளித்த முத்துக்களை மூட்டைகளாகக் கட்டி பொதி சுமக்கப் பயன்படும் வாகனங்களாக கழுதைகளே பயன்படுத்தப்பட்டன. மேலும் தனுஷ்கோடியிலிருந்து தலை மன்னாருக்கு கப்பல் போக்குவரத்து இருந்த காலகட்டத்தில் பயணிகளின் பொதிகளைச் சுமப்பதற்கும் அதிகளவில் கழுதைகள் ஈடுபடுத்தப்பட்டன.

மனிதர்களுடன் ஆயிரம் ஆண் டுகளுக்கும் மேலாக நெருக்கமாக கழுதைகள் வாழ்ந்து வந்தாலும் அறி வியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி சரக்கு வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியதன் காரணமாக கழுதைகள் பயன்பாடு முற்றிலும் குறைந்து போயின.

கழுதைகளை அதிகளவில் வளர்த்து வந்த சலவைத் தொழிலாளர்கள் கூட தற்போது கழுதைகள் வளர்ப்பதை நிறுத்தி விட்டனர். இதனால் மனிதர் களுக்கும், கழுதைகளுக்கும் இடையில் இருந்த நெருக்கமான பிணைப்பு அறுந்து போனது. இந்தநிலையில், தமிழ கத்தில் கழுதை களின் எண்ணிக்கை 1,000-க்கும் கீழே வந்து விட்டதாகக் கால்நடை மருத்துவத்துறை சமீபத்தில் அறிவித்ததுடன் மட்டுமின்றி கழுதை இனத்தைப் பாதுகாக்கவும், பெருக்கவும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறி வியல் பல்கலைக்கழகம் மூலம் புதிய திட்டத்தையும் அறிவித்தது.

இந்தத் திட்டத்துக்காக வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், திருச்சி, திண்டுக்கல், தேனி மற்றும் தூத்துக்குடி ஆகிய 8 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 கழுதை வளர்ப்போர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பொது மேலாண்மை மற்றும் நோய் பராமரிப்பு குறித்து செயல்திறன் பயிற்சி அளிக்கப்படுவதடன் இந்தப் பயனாளிகளுக்கு குடற்புழு மருந்து, தடுப்பூசிகள், தாது உப்புக் கலவை, கட்டும் கயிறுகள், குளம்பு வெட்டும் கருவி, முதலுதவிப் பெட்டி ஆகியவை வழங்கப்படுகிறது.

இது குறித்து இயற்கை ஆர்வலர் முகவை முனிஸ் கூறியதாவது, ராமேசுவரம் தீவில் ஆயிரம் ஆண் டுகளுக்கும் மேலாக கழுதைகள் வாழ்ந்து வருகின்றன. இந்த கழுதைகளை மக்கள் கால்நடைகளாக வளர்த்து சுமை தூக்கப் பயன்படுத்தி வந்தனர். சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் ராமேசுவரம் தீவின் கடற்புரங்களில் சுற்றித் திரியும் கழுதைகளை காப்பதற்கு தனுஷ்கோடி அல்லது ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் ஒன்றில் கழுதை கள் சரணாலயம் அமைக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x