Last Updated : 14 Feb, 2021 03:17 AM

1  

Published : 14 Feb 2021 03:17 AM
Last Updated : 14 Feb 2021 03:17 AM

நாட்டின் பாதுகாப்புக்கு பொருளாதார வளர்ச்சி முக்கியம்: தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு உறுப்பினர் ஸ்ரீதர் வேம்பு கருத்து

ஸ்ரீதர் வேம்பு

தென்காசி

``நாட்டின் பாதுகாப்புக்கு பொருளாதார வளர்ச்சி முக்கியமானது” என்று தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு உறுப்பினர் ஸ்ரீதர் வேம்பு கூறினார்

பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, சமீபத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அவர், ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த சிறப்புப் பேட்டி:

உங்கள் வெற்றிக்கு முக்கியமான காரணமாக எதை கருதுகிறீர்கள்?

எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் அர்ப்பணிப்பான உழைப்புதான் எனது வெற்றிக்கு காரணம்.

பத்மஸ்ரீ விருது, தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு உறுப்பினர் பதவிஆகியவற்றை பெற்றதை எப்படி கருதுகிறீர்கள்?

எங்கள் நிறுவன பணியாளர்களின் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாகத்தான் பத்மஸ்ரீ விருதை கருதுகிறேன். என்னால் இந்த தேசத்துக்கு என்ன திருப்பிச்செய்ய முடியுமோ, அதைச் செய்வதற்குக் கிடைத்த வாய்ப்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு உறுப்பினர் பொறுப்பை கருதுகிறேன்.

தொழில்துறை, பாதுகாப்புத் துறை முன்னேற்றத்துக்கு நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?

அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும், நம்நாட்டிலேயே உருவாக்க வேண்டும். அதற்குத் தேவையான தொழில்நுட்பங்கள், செய்முறைகளை நம் நாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். இதன்மூலம், வேலைவாய்ப்பு உருவாகும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் மேம்படும். நாட்டின் பாதுகாப்புக்கு பொருளாதார வளர்ச்சி முக்கியம்.

கிராமப்புற முன்னேற்றத்துக்கு அரசு என்ன செய்ய வேண்டும் என்றுஎதிர்பார்க்கிறீர்கள்?

கிராமப்புறங்களில் ‘பிராட்பேண்ட்’ இணைப்பு சேவையை விரிவுபடுத்த வேண்டும். இதற்கான திட்டத்தை குடியரசு தின விழாவில் பிரதமர் அறிவித்துள்ளார். கிராமப்புறங்களுக்கு இணைப்புச் சாலை வசதி முக்கியம். இவை இருந்தால் கிராமப்புறங்களில் படிப்படியாக வளர்ச்சிகள், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.

நீங்கள் யாரை முன்மாதிரியாக கொண்டுள்ளீர்கள்?

விவேகானந்தரின் கொள்கைகளை நிறைய படிக்கிறேன். குடியரசுமுன்னாள் தலைவர் அப்துல்கலாம், கிராமப்புற முன்னேற்றத்துக்கு பெரிதும் அக்கறை காட்டினார்.

இளைஞர்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?

எந்த துறையில் சாதிக்க விரும்பினாலும் ஆழமான ஈடுபாட்டுடன் நுட்பமாக கற்றுக்கொண்டு செயல்படவேண்டும். நுனிப்புல் மேய்வதுபோல் மேலோட்டமாக செயல்படக் கூடாது.

தென்காசி மாவட்டம், மத்தளம்பாறையை நீங்கள் வசிப்பதற்கான இடமாக தேர்வு செய்ய காரணம் என்ன?

எப்போதுமே எனக்கு கிராமத்து வாழ்க்கைதான் பிடிக்கும். மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் இந்த இடம் மிகவும் அழகாக இருந்ததால் இங்கு வந்துவிட்டேன்.

உங்களின் எதிர்கால லட்சியம்?

அடுத்த 10 ஆண்டுகளில் zoho நிறுவனத்தை உலகின் சிறந்த 5 தொழில்நுட்ப நிறுவனங்களுக்குள் கொண்டுவர வேண்டும். தென்காசி அல்லது தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறந்த வளர்ச்சியைக் கொண்டுவர வேண்டும். இதுதான் எனது அடுத்த 10 ஆண்டு குறிக்கோளாக உள்ளது. தொழில்நுட்பங்களை கிராமப்புறங்களை நோக்கி கொண்டுசெல்ல வேண்டும். அவை அனைத்தையும் தமிழிலேயே கொண்டுசெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்.

கூகுளில் நிறையபேர் உங்கள் ஜாதியைத் தேடியுள்ளார்கள். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

ஒரு சிலர் இதில் ஆர்வம் காட்டுவார்கள். அதற்காக எல்லோரையும் தவறாக எடைபோடக் கூடாது. இதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு கூறி னார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x