Published : 14 Feb 2021 03:17 AM
Last Updated : 14 Feb 2021 03:17 AM
கடந்த 2011-ம் சட்டப்பேரவைத் தேர்தலில் கிங் மேக்கராக இருந்த தேமுதிக, வரும் தேர்தலில் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்குமா? என கேள்வி எழுந்துள்ளது.
தேமுதிக 2006-ம் ஆண்டு முதல் முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டது. மொத்தம் 232 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு 8.38 சதவீத வாக்குகளை பெற்றது. அந்த தேர்தலில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் மட்டுமே வென்றார். 2009-ம் நாடாளுமன்ற தேர்தலில் தனித்துபோட்டியிட்டு 10.3 சதவீத வாக்குகளை பெற்றது. பின்னர், 2011-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில்அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, 41 தொகுதிகளில் போட்டியிட்டு, 29 இடங்களில் வெற்றி பெற்றுதேமுதிக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.
அதன்பிறகு, அடுத்தடுத்த தேர்தல்களில் தேமுதிக தோல்வியை தழுவியது. இதனால், தேமுதிகவின் வாக்கு சதவீதம் 2.19 ஆக குறைந்திருப்பது அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. உடல் நலக்குறைவால் மருத்துவ சிகிச்சை பெற்று ஓய்வில்இருக்கும் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், முழு நேர அரசியல் பணியில் ஈடுபட முடியவில்லை. இருப்பினும், கட்சியின் முக்கிய நிகழ்வுகளில் மட்டுமே அவர் பங்கேற்று வருகிறார்.
ஆனால், கட்சியின் பணிகளை தேமுதிக பொருளாளர் பிரேமலதா மூத்த நிர்வாகிகளுடன் இணைந்து கவனித்து வருகிறார். அதிமுக கூட்டணியில் தேமுதிக நீட்டித்து வந்தாலும் இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில் இருக்கிறது. தேமுதிக மற்றொருபுறம் தனது தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. இதற்கிடையே, நீண்டநாட்களுக்கு பிறகு திறந்தவெளி வேனில் நேற்றுமுன்தினம் கட்சி தலைமை அலுவலகம் வந்த விஜயகாந்த், கோயம்பேட்டில் கட்சி கொடியை ஏற்றி, தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். ஆனால், அவர் தொண்டர்கள் மத்தியில் பேச முடியாதது, கவலையை ஏற்படுத்தியது.
வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் தொடர நினைக்கும் தேமுதிக 41 இடங்களை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதிமுக தரப்பில் அதிகபட்சமாக 14 இடங்கள் வரை மட்டுமே ஒதுக்க சம்மதிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இவர்களுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டால், பாமக உள்ளிட்ட மற்ற கூட்டணி கட்சிகளுக்கும் கூடுதல் இடங்களை ஒதுக்க நிர்பந்தம் ஏற்படும் என அதிமுக கருதுகிறது. சசிகலா தனது அடுத்தகட்ட அரசியல் பயணம் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டு வருவதால், அதிமுகவுடன் உடன்பாடு ஏற்படாவிட்டால் சசிகலாவுடன் கூட்டணி சேர வாய்ப்பு இருப்பதாக தேமுதிக நிர்வாகிகள் கருதுகின்றனர்.
இதுதொடர்பாக தேமுதிக மூத்த நிர்வாகிகளிடம் கேட்ட போது, ‘‘தமிழகம் முழுவதும் கணிசமாக வாக்குகளை கொண்ட கட்சியாக தேமுதிக இருந்து வருகிறது. இதற்கு முன்பு கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, சிறப்பான வெற்றியை பெற்றது. அதேபோல், இந்த முறையும் கூட்டணி அமைக்க வேண்டுமென தேமுதிக விரும்புகிறது. ஆனால், அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தாமதித்து வருகிறது. எனவே, அடுத்தகட்ட நடவடிக்கைகளை தேமுதிக அறிவிக்கும். கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டு நாங்கள் தேர்தல் பணியை ஆற்றுவோம்’’என்றனர்.
தொண்டர்கள் சொல்வது என்ன?
தேமுதிக தொண்டர்கள் சிலர் கூறும்போது, ‘‘தமிழக அரசியலில் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் கட்சியாக தேமுதிக இருந்து வருகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலத்தோடு இருக்கும்போது தமிழக அரசியலில் கூட்டணி பேச்சுவார்த்தையின் தொடக்கமாக தேமுதிகதான் இருக்கும். தற்போது, இந்த நிலை மாறிவிட்டது.
கடந்த தேர்தல்களில் ஏற்பட்ட தோல்விகளுக்கு, கூட்டணி குழப்பங்களும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது. கட்சி தலைவர் விரைவில் தனது கம்பீர குரலால் மீண்டும் பேசுவார். இந்த நிலை மாறும் என நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். வரும் தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் கூட்டணி கட்சியாக தேமுதிக இருக்கும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT