Published : 14 Feb 2021 03:18 AM
Last Updated : 14 Feb 2021 03:18 AM
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.73.98கோடியில் கொளவாய் ஏரி புனரமைக்கும் பணி உள்ளிட்ட புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டினார். மேலும், 39.88 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு திட்டங்களை முதல்வர் பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த 7 புதியதிட்டங்களை, முதல்வர் பழனிசாமிநேற்று தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, வேளாண் துறை, காவல் துறை உள்ளிட்ட துறைகள் சார்ந்த புதிய திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. மேலும் பணிகள் நிறைவடைந்த திட்டங்களும் தொடங்கி வைக்கப்பட்டன. காணொலி காட்சி மூலம்,புதிய திட்டங்களை முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.
பொதுப்பணித் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், செம்பூண்டி கிராமம் அருகே கிளையாறு ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணி (ரூ. 5 கோடியே 56 லட்சம்), தாம்பரம் அருகே ஒட்டியம்பாக்கம் கிராமத்தில் மதுரைபாக்கம் ஓடையின் குறுக்கே படுக்கை அணை மற்றும் வெள்ள தடுப்பு பணி (ரூ.3 கோடியே 42 லட்சம்) ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. செங்கல்பட்டு கொளவாய் ஏரி ரூபாய் 60 கோடியில் புனரமைப்பு பணி மற்றும் கோட்டையை சீரமைத்து கோட்டையைச் சுற்றியுள்ள அகழிகள் பழைய நிலைக்கு மாற்றப்பட உள்ளன. செங்கல்பட்டு சிறப்புகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட உள்ளது.
மேலும், கொளவாய் ஏரி புதுப்பொலிவைப் பெற்று ஒரு சுற்றுலாத் தலமாக மீண்டும் மாறும் என்று எதிர்பார்க்கலாம். இதேபோல் 5 கோடியில் வண்டலூர் அருகே மேலகோட்டையூரில் காவல் பள்ளி உள்ளிட்ட திட்டங்களை அடிக்கல் நாட்டினார்.
மேலும், பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் கோவிலம்பாக்கம் ஊராட்சி, ஈச்சங்காடு பகுதியில் 64 கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதில் ரூ. 29 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் ஒரு பகுதி முடிவடைந்ததால் அதை திறந்து வைத்தார்.
இதேபோல் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் பொதுமக்கள் சாலையைக் கடக்கும் வகையில் நகரும் படிக்கட்டு வசதியுடன் ரூ. 9 கோடியே42 லட்சம் மதிப்பீட்டிலான நடைமேம்பாலத்தை தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும். மேலும் வேளாண் துறை சார்பில் 96 லட்சத்தில் கிராமப்புற சந்தையைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அ.ஜான் லூயிஸ் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT