Last Updated : 14 Feb, 2021 03:18 AM

 

Published : 14 Feb 2021 03:18 AM
Last Updated : 14 Feb 2021 03:18 AM

நாம் கடந்து போகும் பாதையில் காண கிடைக்கும் சாவித்திரிகள்

ஊர்கள் தோறும் சாலையோரங்களில் சற்று மனபிறழ்வுடன் அமர்ந்திருப்போரை அவசர கதியில் பார்த்தபடி, உள்வாங்கியும் வாங்காமலும் நாம் கடந்து செல்வதுண்டு.

அப்படியான ஒரு பெண் கடந்தாண்டு, மார்ச் மாதம் மத்தியில் மயிலாடுதுறை தொடர் வண்டி நிலையத்தின் அருகில் அமர்ந்திருக்க, அங்கு வந்த சிலர் அந்தப் பெண்ணை விரட்ட, பயந்து போன அவர் தொடர்வண்டி நிலையத்திற்குள்ளேயே புகுந்திருக்கிறார்.

மிரட்சியுடன் அங்கிருந்த அவரை, ஆசுவாசப்படுத்தி அரசு மனநல காப்பகத்திற்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும்.

ஆனால், அப்படிச் செய்யவில்லை. அங்கிருந்த ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் லத்தியில், அந்தப் பெண்ணை சரமாரியாக தாக்க, தலையில் ரத்தம் வழிந்தபடி மீண்டும் சாலைக்கு ஓடி வந்திருக்கிறார்.

இதைக் கண்ட அங்கிருந்தவர்களில் சிலர், ரயில்வே காவல் துறையினரைக் கடிந்து கொண்டு, அந்தப் பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். அங்கு ஆசுவாசப்படுத்தி பேச்சுக் கொடுத்திருக்கின்றனர்.

அந்தப் பெண், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவர் பெயர் சாவித்திரி என்பதும் தெரிய வந்திருக்கிறது.

அதன் பிறகு மயிலாடுதுறையில் இயங்கும் ‘அறம் செய்’ என்ற சமூக நல அமைப்பின் உதவியோடு, அந்தப் பெண், முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மனநலப் பிரிவில் சேர்க்கப்படுகிறார். படிப்படியாக அங்கு அவருக்கான உளவியல் ஆற்றுப்படுத்துதல் அளிக்கப்படுகிறது. தாக்கப்பட்டதால் ஏற்பட்ட தலைக் காயத்தோடு, தலைக்கு உள்ளேயும் நாள்பட்டிருக்கும் ரணத்திற்கும் மருந்தளிக்கின்றனர்.

படிப்படியாக பயம் அகல, மனம் தெளிகிறது.

“இப்போதெல்லாம் சாவித்திரி கூடைப் பின்னுதல், மருத்துவமனை வளாகத் தோட்டத்தைப் பேணுதல் என சிறுசிறு வேலைகளைச் செய்யத் தொடங்கியிருக்கிறார்” என்கிறார் சாவித்திரியை விழுப்புரம் மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து வந்த ‘அறம்’ அமைப்பைச் சேர்ந்த சிவா.

சாவித்திரிக்கு சிகிச்சை அளித்து வரும் மனநல மருத்துவர் மணிகண்டனிடம் பேசினோம்.

“எங்கள் பணி காலத்தில் நிறைய பேருக்கு இதுபோல ஆற்றுப்படுத்துதலை அளித்திருக்கிறோம். நமது விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மட்டுமே இதுவரையிலும் 250க்கும் மேற்பட்டோருக்கு இப்படியான சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. அதில், 100 பேருக்கு மேல் சிகிச்சை முடிந்து, குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அதில், குணமடையும் விகிதாச்சாரங்கள் நபருக்கு நபர் மாறுபடலாம். மனபிறழ்வு உடைய ஒரு நபர் குறைந்தபட்ச தெளிவு பெற்றாலும் கூட எங்கள் அளவில்அது வெற்றியே... சாவித்திரி விஷயத்தில் எதிர்பார்த்ததை விட நல்ல ‘ரெக்கவர்’ கிடைத்திருக்கிறது. எங்கள் குழுவிற்கே அது திருப்தியைத் தந்திருக்கிறது” என்றார்.

அவர் குரலில் அவ்வளவு சாந்தம்... சற்று நிறுத்திப் பேச்சைத் தொடர்கிறார்...

“எங்கள் கண்காணிப்பில் உள்ளவர்களில், நல்ல நிலையில் இருப்போர் சில கைவினைப் பொருட்களைச் செய்து வருகின்றனர். அதை விற்பனை செய்ய மருத்துவமனை வளாகத்திலேயே அங்காடி ஒன்றை அமைக்கலாமா என ஆலோசித்து வருகிறோம்” என்றார்.

“சூப்பர் சார்” என்று சொல்லியபடி விடை பெற்றோம்.

இப்போதெல்லாம், சாலையோரங்களில் இம்மாதிரி யான நபர்களை பார்க்கும் போதெல்லாம், சன நேரத்தில் சாவித்திரி வந்து போகிறார். சாவித்திரிகளை மீட்டெடுக்க சில சேவை அமைப்புகள் கை கொடுக்கலாம்; மன நல மருத்துவர்கள் பக்கத் துணையாய் இருந்து அவர்களை மீட்டெடுக்கலாம். அதையெல்லாவற்றையும் விட மேலானது சாவித்திரிகள் உருவாகாமல் இச்சமூகத்தை வைத்திருப்பது...

அது நம் அனைவரின் கையிலும் இருக்கிறது. ஆக்ஷன் 1

சாவித்திரியைத் தாக்கிய ரயில்வே பாதுகாப்பு படை வீரர் கிருஷ்ணமூர்த்தியை பணியிடை நீக்கம் செய்து, திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார். ஆக்ஷன் 2

அடுத்த கட்ட சிகிச்சைக்குப் பின், இன்னும் நல்ல முறையில் தேற்றப்பட்டு, சாவித்திரியை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க இருக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x