Published : 13 Jun 2014 10:35 AM
Last Updated : 13 Jun 2014 10:35 AM

சூரியசக்தி திட்ட மானியத்தை தாமதிக்காமல் வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு எரிசக்தி மேம்பாட்டு முகமை வேண்டுகோள்

தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை சார்பில் மரபுசாரா எரிசக்தி குறித்த 3 நாள் சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. மாநாட்டை தமிழக மின் துறை அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன் தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து மரபுசாரா எரிசக்தி குறித்த சிறப்புக் கருத்தரங்கம், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை தலைவர் சுதீப் ஜெயின் தலைமையில் நடந்தது.

இதில், தமிழ்நாடு தலைமை மின் ஆய்வாளர் எஸ்.அப்பாவு, இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கஸ்தூரி ரங்கையன், விழுப்புரம் ஆரோவில் நிறுவன இணை நிறுவனர் டொயின்வென் மேஜென், ரீஜென் பவர் டெக் நிறுவனத்தின் மதுசூதன் கெம்கா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கருத்தரங்கில் சூரியசக்தி உபகரண மின் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் பங்கேற்று பல்வேறு சந்தேகங்கள் கேட்டனர்.

கருத்தரங்கில் சுதீப் ஜெயின் பேசியதாவது:

மின்சார தேவையின் அளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. வருங்கால மின் தேவையை சமாளிக்க பல்வேறு மின் சக்திகளைப் பயன்படுத்த வேண்டும். மரபுசாரா எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பதில் தமிழகம் தொடர் முன்னேற்ற மடைந்து வருகிறது.

தமிழக அரசின் சூரியசக்தி மின் கொள்கை மூலம் பல்வேறு திட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.

மேற்கூரை சூரியசக்தி திட்டத்தில் மத்திய அரசின் மானியம், விண்ணப்பித்த ஒரு மாதத்துக்குள் கிடைக்க மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மானியம் கிடைப்பதிலோ, சூரியசக்தி அமைப்புகளைப் பொருத்துவதிலோ ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் அதுபற்றி தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமைக்கு 56161 என்ற எண்ணில் குறுஞ்செய்தி அனுப்பியோ, ஆன்லைன் மூலமோ அல்லது நேரிலோ அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாநாட்டு கண்காட்சியில் பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த மரபுசாரா எரிசக்தி பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்று ஸ்டால்கள் அமைத்துள்ளன. மரபுசாரா எரிசக்திகளான காற்றாலை, சூரியசக்தி உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு மற்றும் சட்ட ரீதியான சலுகைகள் குறித்த கருத்தரங்குகளும் நடக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x