Published : 13 Feb 2021 08:34 PM
Last Updated : 13 Feb 2021 08:34 PM

அரசுப் பணியில் ஓய்வுபெறும் வயது வரம்பை உயர்த்தக்கூடாது: தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

அரசுப் பணியில் ஓய்வுபெறும் வயது வரம்பை உயர்த்தக்கூடாது என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் படித்து பட்டம் பெற்று, ஆண்டுக்கணக்கில் வேலையின்றி காத்திருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுள்ளன.

அரசு வேலை கேட்டு, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்போர் எண்ணிக்கை சுமார் 1 கோடிக்கும் (ஆண்களும் - பெண்களுமாக) மேல் உள்ளது. பதிவு செய்தாலும் வேலை கிடைக்காது என அதிருப்தியில் பதிவு செய்யாமல் இருப்போரும் பல லட்சம் பேர் இருப்பர்.

மத்திய - மாநில அரசுகள், அரசுப் பணிகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் நேரடி வேலைவாய்ப்பைத் தருவதற்கு மாறாகவும், இட ஒதுக்கீட்டை முற்றிலும் ஒழித்துக் கட்டவும் திட்டமிட்டு தனியாருக்கு பொதுத்துறை நிறுவனங்களை தாரை வார்ப்பதோடு - அரசுப் பணிகளில் அவுட்சோர்சிங் முறையை ஊக்குவித்தும், ஒப்பந்த முறையில் குறைந்த ஊதியத்தில் ஊழியர்களை பணியமர்த்தியும் வருகின்றன.

இதனை எதிர்த்து நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், வாலிபர், மாணவர், மாதர் இயக்கங்களும், பொதுமக்களும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் அரசுப் பணியில் குறிப்பாக, பல்துறைச் சார்ந்த பணிகளிலும், ஆசிரியர் பணியிடங்களிலும் மொத்தமாக 5 லட்சத்திற்கும் மேலாக காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் இவற்றை பூர்த்தி செய்வதற்கு மாறாக, ஏற்கெனவே பணியிலுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயது வரம்பை கடந்த ஆண்டு 58லிருந்து 59ஆக உயர்த்தியதை சமூக அக்கறையுள்ள செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்த்ததை தமிழக அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

ஓரிரு மாதங்களில் தமிழகம், சட்டப் பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில், வாக்கு வங்கியை மனதிற்கு கொண்டு பல்துறைச் சார்ந்த அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை 59லிருந்து 60 ஆக உயர்த்திட தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக ஊடக செய்திகள் மூலமாக அறிய முடிகிறது.

இது காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்ய மறுப்பது மட்டுமின்றி, வேலையில்லாமல் தவிக்கும் தமிழக இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் அதிமுக அரசு இழைக்கும் மற்றொரு அநீதியாகும்.

அதிமுக அரசின் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
ஓய்வுபெறும் ஊழியர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணப் பயன்களை காலத்தே கொடுப்பதற்கு அரசின் கஜானாவில் பணம் இல்லையென்ற காரணத்திற்காகவே ஓய்வு பெறும் வயது வரம்பை தமிழக அரசு உயர்த்தி உத்தரவிட்டது என்பதை அரசு மறுக்க இயலாது.

அதேபோல போக்குவரத்துத் துறையில் பணியாற்றி ஓய்வுப்பெற்ற தொழிலாளர்களுக்கு இன்று வரையில் ஓய்வூதிய பலன்கள் அளிக்கப்படாமல் பல ஆண்டுகள் இழுத்தடித்து கொண்டுள்ளனர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது வரம்பை தமிழக அரசு உயர்த்திக் கொண்டே போகும் போது, ஒருகட்டத்தில் ஓய்வுபெறும் போது ஓய்வு கால பலன்கள் கிடைக்குமா, கிடைக்காதா என்ற அச்சமும் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எனவே, தமிழக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் எதிர்கால நலன் கருதி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பணி ஓய்வு வயதை உயர்த்தும் தமிழக அரசின் உத்தேச வயது வரம்பு முடிவை உடனடியாக கைவிட வேண்டுமெனவும், கடந்தாண்டு ஓய்வு பெறும் வயது வரம்பை 59 ஆக உயர்த்தப்பட்டுள்ளவர்கள் அனைவரையும் பணி ஓய்வு செய்வதோடு, அவர்களுக்கு சேர வேண்டிய ஓய்வு கால பலன்களை நிலுவையில்லாமல் வழங்கிட வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

மேலும், அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டுமெனவும், மதிப்பூதியம், தொகுப்பூதியத்தில் பணிபுரியும் அனைவரையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x