Last Updated : 13 Feb, 2021 05:40 PM

1  

Published : 13 Feb 2021 05:40 PM
Last Updated : 13 Feb 2021 05:40 PM

தேர்தலில் திமுக, காங்., கூட்டணிக்கு ஆளும்கட்சிகளின் மிருக பணபலம் சவாலாக இருக்கும்: ப.சிதம்பரம் பேட்டி

காரைக்குடி

‘‘தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, காங்., கூட்டணிக்கு ஆளும்கட்சிகளின் மிருக பணபலம் சவாலாக இருக்கும்,’’ என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

அவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய நிதி அமைச்சர் பட்ஜெட் குறித்து பேசியதைவிட என்னைப் பற்றி பேசியது தான் அதிகம். பெட்ரோல், டீசலுக்கு கலால் வரியைக் குறைத்து செஸ் வரியை உயர்த்தி உள்ளனர்.

இதனால் பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது. இதற்கு நிதியமைச்சரிடம் பதில் இல்லை.

3.5 கோடி சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டன. இந்தாண்டு 12 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். 2.80 கோடி பேர் வேலை கேட்டு பதிவு செய்துள்ளனர். நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு ரூ.228 லட்சம் கோடி. ஆனால் உற்பத்தி துறைக்கு ரூ.ஒரு லட்சம் கோடி மட்டும் ஒதுக்கியிருப்பது யானைப் பசிக்கு சோளப்பொறி போன்றது.

மத்திய அரசின் கணக்கில் பிழை உள்ளது. ரூ.10 லட்சம் கோடி கூடுதலாக கடன் வாங்கி உள்ளதாகக் கூறுகின்றனர். எதற்காக செலவழித்தீர்கள் என்று கேட்டால் பதில் இல்லை. அரசு வங்கியை தனியாருக்கு தாரை வார்ப்பதை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது. ஏழு துறைமுகங்கள், 2 வங்கிகள், ஒரு காப்பீட்டு நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்கின்றனர்.

தனியாருக்குக புதிதாக அனுமதி கொடுக்கலாம். அதை விடுத்து பொதுத்துறையை தாரை வார்ப்பது நல்லதல்ல. நீங்கள் எடுக்கும் நடவடிக்கையால் அடுத்த ஆண்டு வருவாய் மதிப்பீடு கிடைக்காது. வருவாய் செலவு மதிப்பீட்டுக்குள் அடங்காது. குறிப்பிட்ட முதலாளிகளுக்காகத் தான் இந்த அரசு செயல்படுகிறது.

வாஜ்பாய் காலத்தில் எதிர்கட்சிகளிடம் கருத்துகளை கேட்டு முடிவு செய்தனர். ஆனால் மோடி எதிர் கட்சிகளை எதிரி கட்சியாக பார்க்கிறார். பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதை சரி செய்ய பணப்பரிமாற்றம் இருக்க வேண்டும். 25 சதவீத ஏழை மக்களுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் ஆறு மாதங்களுக்காகவது வழங்க வேண்டும். வீணாகும் உணவு தானியங்களை ரேஷனில் இலவசமாக வழங்க வேண்டும்.

தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு முதல்வர் அறிவிப்பது எல்லாம் வெறும் மத்தாப்பு தான். சர்வாதிகார ஆட்சி நோக்கி மோடி அரசு பயணிக்கிறது.

பாஜகவுடன் கூட்டணி வைக்கும் கட்சி தேர்தலில் தோல்வியை தான் சந்திக்கும். வருகின்ற சட்டபேரவைத் தேர்தலில் திமுக., காங்கிரஸ் கூட்டணிக்கு உள்ள ஒரே சவால் ஆளும்கட்சிகளின் மிருக பண பலம் தான்.

பணத்தை கொடுத்து நாம் ஜெயித்து விடுவோம் என ஒரு கட்சி சொல்வது மக்களை துச்சமாக மதிக்கும் செயல். சசிகலா வருகை பற்றி காங்.-க்கு கவலை இல்லை.

அதிமுக இனை ஒருங்கிணைப்பாளருக்கு தான் கவலை. சட்டபேரவைத் தேர்தலில் தேர்தல் ஆணையம் நடுநிலமையோடு இருக்குமா? என்பது தெரியவில்லை.

ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா நடந்தது என்று தேர்தல் ஆணையமே கூறியது. ஆனால் என்ன நடவடிக்கை எடுத்தது என்று சொல்லவில்லை. குடியுரிமை சட்டம் கொடுமையான சட்டம். குடியை பறிக்கும் செயல். தேர்தலில் எங்கள் கூட்டணியின் இலக்கு 234 -ம் வெற்றி என்பது தான், என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x