Published : 13 Feb 2021 05:25 PM
Last Updated : 13 Feb 2021 05:25 PM

சென்னையை அடுத்து கோவை, சேலத்திலும் ஸ்மார்ட் சிட்டி: மத்திய நகர்ப்புற விவகாரத்துறை செயலாளர் பேட்டி

சென்னை

மத்திய நகர்ப்புற விவகாரத்துறை செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா சென்னை மாநகராட்சியில் அமைக்கப்பட்டிருந்த ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தைப் பார்வையிட்டார். சென்னையில் ஸ்மார்ட் சிட்டி அமைக்கப்பட்டது போன்று கோவை, சேலத்திலும் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு மத்திய நகர்ப்புற விவகாரத்துறை செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா அளித்த பேட்டி:

“சென்னை மாநகராட்சியில் அமைக்கப்பட்டிருந்த ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை நான் பார்வையிட்டேன். இந்தக் கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் நகரத்திலுள்ள அனைத்துப் பணிகளையும் செயல்படுத்துதல், கண்காணிக்க முடியும். இது இந்த நகரின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

உதாரணமாக மழை வெள்ள பாதிப்புகளை சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு மற்றும் நீர் மட்ட அளவு மற்றும் அதை வெளியேறும் விதம் ஆகியவை கண்காணிக்கப்படுகிறது. இவை மட்டுமல்லாது இந்த ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் நகரில் போக்குவரத்து நெரிசல் மக்கள் நெரிசல் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைப் பெறமுடியும். இதன்மூலம் சென்னை நகர மக்களுக்குச் சிறப்பான பயன்களை அடைய இது வழிவகை செய்கிறது.

இதுபோன்று தமிழகத்தில் மேலும் 10 நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படவுள்ளது. நாட்டிலேயே உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு நகரமயமாக்கல் அதிகமாக உள்ள மாநிலமாகும். 2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் 50 சதவீதம் நகரமயமாகி உள்ளது. இது அடுத்த 2 ஆண்டுகளில் இந்த சதவீதமானவை மேலும் அதிகரிக்கும்.

மக்களுக்கு குடியிருக்க வீடு மற்றும் சுகாதாரமான குடிநீர் வீட்டுவசதி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் தமிழகத்திற்கு அதிகம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு வருடங்களில் தமிழகத்தில் 1.6 லட்சம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன.

அம்ருத் திட்டத்தின் மூலம் 12 லட்சம் கோடி ரூபாய் சுத்தமான குடிநீர், கழிவுநீர் அகற்றுதல் பாதாள சாக்கடை திட்டம், பசுமையாக்கும் நடவடிக்கை உள்ளிட்டவற்றுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. 11 நகரங்களில் உள்ள மக்களுக்கு நாள்தோறும் 135 லிட்டர் வழங்கப்பட்டு வருகிறது. 12 நகரங்களில் உள்ள மக்களுக்கு கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை நகரில் மத்திய அரசின் திட்டங்கள் மூலம் பல்வேறு நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாகவும், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை நாளை நான் ஆய்வு செய்ய உள்ளேன்.

12 லட்சம் கோடிக்கும் அதிகமாக ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது நாலு லட்சம் கோடி ரூபாயில் அதற்கான பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. மேலும் பல்வேறு இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது சென்னையில் பாண்டி பஜாரில் செயல்படுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டம் மக்களுக்கு மிகுந்த பயனை அளித்துள்ளது. இதன் மூலம் எளிதாக நடைப்பயிற்சி செய்தல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டமானது பயனுள்ளதாக உள்ளது. மேலும் கோவை மற்றும் சேலத்திற்கு இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மிகுந்த பயனளிக்கும்.

இதுபோன்ற ஸ்மார்ட் சிட்டி திட்டங்களின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும். இதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகளும் உயரும். இதன் மூலம் நெருக்கடியான பகுதியில் வசிக்கக்கூடிய மக்களின் வாழ்வாதாரச் செயல்பாடுகள் மேம்பாடு அடையும்”.

இவ்வாறு துர்கா சங்கர் மிஸ்ரா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x