Published : 13 Feb 2021 05:19 PM
Last Updated : 13 Feb 2021 05:19 PM
திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வந்தால் சேர்த்துக்கொள்வோம், ஆனால், அதிக இடங்கள் கேட்கக்கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
மதுரையில் இன்று முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
மத்திய பாஜக அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிரான, அரசியலமைப்பிற்கு எதிரான சட்டங்களை இயற்றிவருகிறது.
ஜனநாயக வழிமுறையைக் கைவிட்டு பாசிச போக்கோடு செயல்படுகிறது.மத்திய அரசின் அனைத்து தீங்கான திட்டங்களையும் தமிழக அரசு ஆதரிக்கிறது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கொண்டுவர வேண்டும் என்பதற்காக பிப்.18ம் தேதி தமிழகத்தை மீட்போம் என்ற மாநாட்டை மதுரையில் நடத்துகிறோம்.
விவசாயக் கடனை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்தபோதும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபோதும் அதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. தற்போது தேர்தலுக்காக பயிர்க்கடன் ரத்து என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.1 கோடி நிதி வழங்க வேண்டும். தமிழக அரசின் நிதி பல கோடி ரூபாயை விளம்பரத்திற்கு பயன்படுத்துவதாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்தும் பதில் வரவில்லை.
இதனால், தேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கை குறையும் என்பதால் தேர்தல் ஆணையம் நியாயமாக செயல்பட வேண்டும்.
திமுகவுடனான கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் நலக்கூட்டணி போன்ற கூட்டணியை நாங்கள் ஏற்படுத்த விரும்பவில்லை.
திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கும் பாஜக கூட்டணியை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதும், அதனை தோற்கடிப்பதும் எங்களது கொள்கை எங்களது கூட்டணியில் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளோம்.
நாங்கள் 3வது அணி அல்ல, ஒரே அணிதான். திமுக கூட்டணிக்கு புதிதாக யார் வந்தாலும் சேர்த்துக்கொள்வோம், ஆனால், அதிக இடங்கள் கேட்கக்கூடாது.
சசிகலா தன்னை முதலில் நிலைநிறுத்திகொள்ளட்டும், தற்பாது அவர் நிர்க்கதியாய் நிற்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT