Published : 13 Feb 2021 04:52 PM
Last Updated : 13 Feb 2021 04:52 PM
கூட்டணியில் தங்கள் செல்வாக்கை நிரூபித்து, அதிக சீட்டுகளைப் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் மாநாடுகள், பொதுக்கூட்டங்களை நடத்தி அதிக கூட்டத்தைக் காட்டுவது என்பது பல்வேறு கட்சிகளுக்கும் கைவந்த கலை.
இதுவே தேர்தல் கால வழக்கம். இச்சூழலில் தேர்தலுக்குமுன் போராட்டங்களை முன்னெடுத்து அரசுக்கு நெருக்குதல் கொடுத்து கோரிக்கைகளை நிறைவேற்ற பல்வேறு அமைப்புகள் களமாடுவது, அந்த வழக்கத்தில் கூடுதலாக சேர்ந்திருக்கிறது.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களும் இப்போது போராட்டகளமாக மாறியிருப்பை பார்க்கலாம்.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெறாத நாட்களே இல்லை என்னும் அளவுக்கு தினமும் 4 அல்லது 5 போராட்டங்களாவது மாவட்டங்களில் முக்கிய இடங்களில் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
பல்வேறு சங்கத்தினரும் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார்கள். கோரிக்கைகளுக்காக போராடி ஓய்ந்தவர்களும் தேர்தல் காலத்தில் மீண்டும் போராட்ட களத்துக்கு வந்திருக்கிறார்கள். அரசு ஊழியர்கள், அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார்கள்.
அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம், வாக்கு சேகரிப்பு, செயல்வீரர்கள் கூட்டங்களுக்கு மத்தியில் இத்தகைய தொடர் போராட்டங்கள், திடீர் போராட்டங்களும் போலீஸாரையும் திக்குமுக்காட செய்திருக்கிறது. பாதுகாப்பு பணிக்காக அங்குமிங்குமாய் செல்கிறார்கள்.
தேர்தல் தேதி அறிவிக்கும்முன் வாக்கு வங்கியை எண்ணிப்பார்த்து ஆளும் தரப்பிலிருந்து தங்கள் கோரிக்கைகளில் சிலவாவது நிறைவேற்றப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையில் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற இந்த நேரத்திலாவது அரசு முன்வரும் என்று சங்க நிர்வாகிகள் எதிர்பார்க்கிறார்கள். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள், சாலைப் பணியாளர்களும் நீண்ட இடைவேளைக்குப்பின் இப்போது வீதிக்குவந்து போராடுகிறார்கள்.
போராட்டங்கள் கடல் அலையைப்போன்று தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். ஆனால் இந்த தேர்தல் காலத்தில் அது பேரலைகளாக உருவெடுத்திருக்கின்றன
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT