Published : 13 Feb 2021 04:14 PM
Last Updated : 13 Feb 2021 04:14 PM
’’20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அரசியல் இப்போது இல்லை, திமுக கூட்டணில் நமக்குக் குறைந்த இடங்கள்தான் கிடைக்கக்கூடும், அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்’’ என்று மதுரையில் இன்று நடந்த மதிமுக தேர்தல் நிதியளிப்பு கூட்டத்தில் அக்கட்சிப்பொதுச்செயலாளர் வைகோ உருக்கமாகப் பேசினார்.
மதுரை அழகர்கோவில்சாலையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் மதிமுக சார்பில் தேர்தல் நிதி அளிப்பு விழா நடந்தது. மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் புதூர் பூமிநாதன் தலைமை வகித்தார்.
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோவிடம் ரூ.1 கோடியே 1 லட்சத்து 55 ஆயிரம் தேர்தல் நிதி வழங்கினர்.
அதன்பின் வைகோ நிர்வாகிகள் மத்தியில் பேசியதாவது:
தேர்தலுக்காக பொதுமக்களிடம் நிதி வசூலிக்கும் ஒரே கட்சி மதிமுகதான். மற்ற கட்சிகளுக்கு நிதி வசூலிக்க வேண்டிய தேவையில்லை. அவர்களிடம் நிதி குவிந்து கிடக்கிறது. நம்மிடம் பணம் இல்லை. ஆனால், லட்சியங்களுக்காக, கொள்கைகளுக்காக போராடும் எண்ணம் இருக்கிறது.
அதனால், கூச்சமில்லாமல், நானம் இல்லாமல் தலைநிமிர்ந்து சென்று மக்களிடம் நிதி வசூலிக்கும் தகுதி நமக்கு மட்டுமே இருக்கிறது. நிதி கேட்க வரும் மதிமுகவினரை மக்களும் மதிக்கிறார்கள். அவர்கள் கொடுக்கிற தொகை சிறியதாக இருந்தாலும் அன்போடு வழங்குகிறார்கள். இந்துத்துவ சக்திகள் தமிழகத்தில் திராவிட இயக்கத்தை சிதைக்க பார்க்கின்றன.
அதைத் தடுக்கவே திமுகவுடன் மதிமுக இணைந்து போராடுவது என்ற முடிவில் உறுதியாக இருக்கிறோம். தொண்டர்கள், நிர்வாகிகள் யாரும் எதையும் எதிர்பார்த்து இந்தக் கட்சியில் இருக்கவில்லை. எம்எல்ஏவாக, கவுன்சிலர்களாக ஆக வேண்டும் என்றும் நினைக்கவில்லை.
ஆனால், கொள்கை உறுதியோடு இருக்கிறார்கள், இன்னும் இருப்பார்கள். தற்போது திமுக கூட்டணியில் குறைந்த இடங்கள்தான் கிடைக்கக்கூடும்.
அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் கட்சிக்கு இத்தனை சீட்டுதானே என்று நாலு பேர் நம்மை பேசுவார்களே என்று நினைக்க வேண்டாம்.
அவர்கள் நமக்கு அதிக எண்ணக்கையில் ‘சீட்’ கிடைக்கவில்லை என்ற ஆசையில் சொல்வதில்லை. இந்தக் கட்டத்தை கடந்து விட வேண்டும். இந்த ஒரு கட்டம். இதை கடந்தபிறகு பொதுக்குழு நடத்த திட்டமிட்டுள்ளேன்.
அதில் சில திட்டங்களை அறிவிக்க இருக்கிறேன். அது கட்சிக்கு புத்துயிரை கொடுக்கும். சில கட்சிகள், ஒரு தொகுதிக்கு ரூ.20 கோடி செலவு செய்ய திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நாம் ரூ.20 லட்சம் செலவு செய்வதற்கு யோசிக்கிற நிலையில் உள்ளோம். நமது பொருளாதாரம் அப்படித்தான். இதை தமிழக முழுவதும் உள்ள நிர்வாகிகள், தொண்டர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.
நம்முடைய பொருளாதார நிலைமை என்ன என்பது உங்களுக்கு தெரியும். 20 ஆண்டிற்கு முன்பு இருந்த அரசியல் தற்போது இல்லை. ஆனால், காலம் இப்படியே இருக்காது.
காலம் மாறும். மாற்றங்களைக் கொடுக்கும். லட்சிய தாகங்கள் கொண்ட இளைஞர்களை உருவாக்க வேண்டும். எதையெல்லாம் நாம் முன்பு சொன்னமோ, எதற்கெல்லாம் போராடினோமோ அதை மற்றவர்கள் இன்று செய்கிறார்கள்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணிகளை மற்ற கட்சிகள் அமைக்கின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஸ்டெர்லைட் போராட்டத்தை மதிமுக முன்னின்று நடத்தியது.
ஹைட்ரோ கார்பன் போராட்டத்தை மதிமுக நடத்தியது. 7 பேர் விடுதலைக்காக நாம்தான் ஆரம்பம் முதலே போராடினோம். அவர்களுடைய தூக்கு தண்டனை ரத்து செய்து கொடுத்த கட்சி மதிமுக.
நாம் சாதித்து இருக்கின்றோம். இந்த சாதனைகளை எண்ணி நம்மை நாமே ஆறுதல்படுத்திக் கொள்வது மட்டுமில்லை, இனி வரும் காலத்தில் இயக்கத்திற்கு புதிய உறுப்பினர்களைக் கொண்டு வந்து சேர்த்து புத்துயிர் கொடுக்க வேண்டும்.
புதிய சக்தியை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.எதையும் எதிர்பாராமல் உள்ளவர்கள் கட்சி மதிமுகதான். நாம் ஜெயிக்கவில்லையே, நிறைய ‘சீட்’ கிடைக்கவில்லையே என்ற கவலை இருக்கும்.
ஆனால், விலகிச் செல்கிற எண்ணமே நம்மிடம் இல்லை. செல்ல வேண்டியவர்கள் சென்றுவிட்டார்கள். தற்போது இருப்பவர்கள், யாருமே எதையும் எதிர்பார்க்காமல் உள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT