Published : 13 Feb 2021 01:53 PM
Last Updated : 13 Feb 2021 01:53 PM

2 எம்.டெக்., படிப்புகள் நிறுத்தம்; தாமதப்படுத்தும் துணைவேந்தர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை

2 எம்.டெக்., படிப்புகள் நிறுத்தப்பட்ட விவகாரத்தில் உயர் நீதிமன்றம் கொடுத்த அறிவுறுத்தலைப் பின்பற்றாமல் பிடிவாதம் காட்டும் அண்ணா பல்கலை. விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உச்ச நீதிமன்றத்தை அணுகலாம். அலட்சியம் காட்டும் துணைவேந்தர் சுரப்பா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

''சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீட்டுப் பிரச்சினை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரு எம்.டெக்., படிப்புகளின் மாணவர் சேர்க்கையை மீண்டும் தொடங்க உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியும் அதை ஏற்க அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்திருக்கிறது. மாணவர்களின் நலனைப் பாதிக்கக் கூடிய அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக்., பயோ டெக்னாலஜி, எம்.டெக், கம்ப்யுடேசனல் டெக்னாலஜி ஆகிய இரு படிப்புகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை உதவியுடன் நடத்தப்பட்டு வந்தன. இந்தப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு முறையைக் கடைப்பிடிப்பதா அல்லது மாநில அரசின் இட ஒதுக்கீட்டு முறையைக் கடைப்பிடிப்பதா என்பது தொடர்பான சர்ச்சை எழுந்ததை அடுத்து இந்த இரு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கு விசாரணையின்போது தமிழக அரசின் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் ஒப்புக்கொண்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள விதிகளின்படி இந்த இரு எம்.டெக்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 2020-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்தின் தவறான அணுகுமுறை காரணமாக மாணவர் சேர்க்கை இன்றுவரை நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதியரசர் புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றத்தை அணுகி கூடுதல் கால அவகாசம் பெற்று மாணவர் சேர்க்கையை நடத்தும்படி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியது.

இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்று என்ற முறையில் மாணவர் நலனில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அக்கறை இருந்திருந்தால் உச்ச நீதிமன்றத்தை அணுகி கூடுதல் அவகாசம் பெற்று மாணவர் சேர்க்கையை நடத்தியிருந்திருக்க வேண்டும். ஆனால், அண்ணா பல்கலைக்கழகம் அவ்வாறு செய்யாமல் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுதான் உச்ச நீதிமன்றத்தை அணுகி கூடுதல் கால அவகாசம் பெற்றுத் தரவேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

இது முழுக்க முழுக்க தவறானது. இரு எம்.டெக்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டதில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இரு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையைத் தன்னிச்சையாக நிறுத்தியது அண்ணா பல்கலைக்கழகம்தான்.

அதனால் மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைப் போக்கவேண்டிய கடமையும் பொறுப்பும் அண்ணா பல்கலைக்கழகத்திற்குதான் உண்டு. இந்தப் பொறுப்பை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவிடம் ஒப்படைத்துவிட்டு அண்ணா பல்கலைக்கழகம் அதன் கடமையிலிருந்து விலகி இருக்க முடியாது.

உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை இடங்கள் யாருக்கும் பயன்படாமல் வீணாவதை உச்ச நீதிமன்றம் விரும்புவது இல்லை. அண்மையில் கூட மருத்துவம், பல் மருத்துவம் சார்ந்த படிப்புகள் போதிய மாணவர்கள் இல்லாததால் நிரப்பப்படாமல் இருப்பது தொடர்பான தகவல் உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டபோது அப்படிப்புகளுக்கான கல்வித் தகுதியைத் தளர்த்தியாவது காலியாக உள்ள இடங்களை நிரப்பும்படி இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.

மாணவர் சேர்க்கை இடங்கள் வீணாகிவிடக் கூடாது என்பதில் இந்த அளவுக்கு அக்கறை காட்டும் உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அவகாசம் முடிந்துவிட்டது தொடர்பான சிக்கல் கொண்டு செல்லப்பட்டிருந்தால் நிச்சயமாக அதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைத்திருந்திருக்கும்.

ஆனால், அதற்கு மாறாக உச்ச நீதிமன்றத்தை நாங்கள் அணுகமாட்டோம்; அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுதான் அணுக வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் கூறிவருவது ஏற்றுக்கொள்ளவே முடியாத அணுகுமுறை ஆகும்.

இந்த அணுகுமுறையால் இரு எம்.டெக்., படிப்புகளில் சேர விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை யாராலும் ஈடு செய்யமுடியாது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சுரப்பா நியமிக்கப்பட்ட பிறகுதான் அந்தப் பல்கலைக்கழகம் மாணவர்கள் நலனில் அக்கறை இல்லாமல் இத்தகைய அணுகுமுறைகளைக் கடைப்பிடித்து வருகிறது.

மாணவர்களின் நலன் சார்ந்த இந்த விஷயத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அதன் பிடிவாதத்தைத் தளர்த்திக் கொண்டு உச்ச நீதிமன்றத்தை அணுகி கூடுதல் அவகாசம் பெற்று மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தமிழக அரசே உச்ச நீதிமன்றத்தை அணுகி கூடுதல் கால அவகாசம் பெற்று இரு எம்.டெக்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அடுத்த ஒரு மாதத்திற்குள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்''.

இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x