Published : 13 Feb 2021 01:09 PM
Last Updated : 13 Feb 2021 01:09 PM
பிரதமர் மோடி சென்னை வருவதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. என்னென்ன மாற்றம் என்பது குறித்து சென்னை காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பிரதமர் மோடி நாளை சென்னை வர உள்ளார். காலை 11.30 மணிக்கு விமான நிலையம் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ் அடையாறுக்குச் என்று அங்கிருந்து கார் மூலம் நேரு ஸ்டேடியம் வந்தடைகிறார். 12 மணி அளவில் சென்னை மெட்ரோ ரயில் வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் வழித்தடத்தைத் தொடங்கி வைக்கும் அவர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மீண்டும் 1 மணி அடையாறு விமான தளத்தை அடைந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் விமான நிலையம் செல்கிறார். பிரதமர் தரை மார்க்கமாக பெரியமேடு நேரு ஸ்டேடியத்திற்கு வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“பிரதமர் மோடியின் சென்னை வருகையையொட்டி நாளை (14.02.2021) காலை 8 மணி முதல் மதியம் 1 மணிவரை கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றியமைக்கப்பட உள்ளது.
* கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் சென்னை பெருநகர எல்லைக்குள் வர அனுமதி இல்லை
* மாநகரப் பேருந்துகள் மற்றும் பொதுமக்கள் வாகனங்கள் கீழ்க்கண்டபடி திருப்பி விடப்படும்
* கோயம்பேட்டில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் நாயர் பாலத்தின் வழியாக பாந்தியன் ரவுண்டானா, சித்ரா பாயிண்ட் வழியாக அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
* ராயபுரத்தில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் இப்ராகிம் சாலை மின்ட் சந்திப்பு, பேசின் பாலம், எருக்கஞ்சேரி ரோடு, அம்பேத்கர் சாலை, புரசைவாக்கம் வழியாக தங்கள் இலக்கைச் சென்று அடையலாம்.
* அண்ணா சாலையிலிருந்து ராயபுரம் நோக்கி வரும் வாகனங்கள் ஸ்பென்ஸர் பென்னி ரோடு, மார்ஸல் ரோடு, நாயர் பாலம், டவுட்டன் வழியாகத் தங்கள் இலக்கைச் சென்று அடையலாம்.
* சவுத்கெனால் ரோட்டில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கைச் சென்றடையலாம்.
வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”.
இவ்வாறு சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT