Published : 13 Feb 2021 12:53 PM
Last Updated : 13 Feb 2021 12:53 PM
தருமபுரி மாவட்டத்தில் முதன்முறையாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது.
தருமபுரி அடுத்த சோகத்தூர் ஊராட்சி பகுதியில் டிஎன்சி மைதானத்தில் தருமபுரி மாவட்ட நிர்வாகமும், தருமபுரி மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவையும் இணைந்து பிரம்மாண்ட ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துகின்றன.
போட்டியை இன்று (பிப். 13) காலை 8.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். தமிழகம் முழுவதிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
மிரட்டலான காளைகள் வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றை அடக்கிட மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டிக் கொண்டுள்ளனர்.
பெரும்பாலான காளைகளை மாடுபிடி வீரர்களால் தொட்டுக்கூடப் பார்க்க முடியவில்லை. இதுபோன்ற காளைகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உடனுக்குடன் எவர்சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
ஜல்லிக்கட்டுப் போட்டியைக் கண்டு ரசிக்கவும், புகைப்படம், வீடியோ மூலம் ஆவணப்படுத்தும் நோக்கத்திலும் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் தருமபுரி ஜல்லிக்கட்டு மைதானத்தில் திரண்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT