Published : 13 Feb 2021 12:05 PM
Last Updated : 13 Feb 2021 12:05 PM
ஓசூர் வனக்கோட்டம் மற்றும் அதை ஒட்டியுள்ள தருமபுரி வனப்பகுதிகளிலும் 2021-ம் ஆண்டுக்கான வன உயிரினங்கள் கணக்கெடுப்புப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது.
இந்த வனஉயிரினங்கள் கணக்கெடுப்புப் பணிகளை முன்னிட்டு 11, 12-ம் தேதி ஆகிய இரண்டுநாட்கள் நடைபெற்ற பயிற்சி முகாம் மாவட்ட வன அலுவலர் செ.பிரபு முன்னிலையில் தருமபுரி வன மண்டல வனப்பாதுகாவலர் தீபக் பில்கி தலைமையில் நடைபெற்றது.
இப்பயிற்சி முகாமில் உதவி ஆட்சியர்கள் (பயிற்சி) பூமா.கே.செல்வி, ஏ.அபிநயா மற்றும் ஓசூர் வனக்கோட்ட வனச்சரக அலுவலர்கள் மற்றும் கவுரவ வனஉயிரினக் காப்பாளர் சஞ்சீவ்குமார், ஓசூர் வனக்கோட்டம் வனக் கால்நடை உதவி மருத்துவர் பிரகாஷ், தேனி மாவட்டம் தேவாரம் கால்நடை உதவி மருத்துவர் என்.கலைவாணன், கோயம்புத்தூர் டபிள்யூ.டபிள்யூ.எப் மருத்துவர் பூமிநாதன் மற்றும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டு வனஉயிரினக் கணக்கெடுப்பு குறித்து உரையாற்றினார்கள்.
இதில் மாவட்ட வனஅலுவலர் பிரபு பேசியதாவது:
''கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பரப்பளவு 5143 சதுர கி.மீ. ஆகும். இதில் ஓசூர் வனக்கோட்டமானது 121 காப்புக் காடுகளுடன் 1,501 சதுர கி.மீ. வனப்பரப்பளவைக் கொண்டு மாவட்டம் முழுவதும் பரவலாக அமைந்துள்ளது. இது மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவில் 29 சதவீதம் ஆகும். இந்த வனப்பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 12 அன்று 504 சதுர கி.மீ. பரப்பளவு உள்ள வனப்பகுதி காவேரி வடக்கு வனஉயிரினச் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த வனப்பகுதிகளில் பல்வகைத் தாவரங்களுடன் அரிய வகைத் தாவரங்களான சந்தனம், உசில், தேக்கு, ஈட்டி, குங்கிலியம், பொரசு மற்றும் இதர மர வகைகள் உள்ளன. அதேபோன்று இந்த வனப்பகுதிகளில் யானைகள், சிறுத்தைகள், கரடிகள், காட்டெருமைகள், புள்ளிமான்கள், மயில்கள் மற்றும் இதரப் பறவை இனங்கள் போன்ற அரிய வன விலங்குகள் வசிக்கின்றன. எனவே அவற்றின் எண்ணிக்கை, இனங்கள், எந்தப் பகுதிகளில் எவ்வகையான வன உயிரினங்கள் வாழ்கின்றன என்பன போன்ற தகவல்களைக் கணக்கெடுத்து, அரிய வகை இனங்கள் காணப்பட்டால் அவைகளை அழிவிலிருந்து பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
ஏற்கனவே 2017-ம் ஆண்டில் ஓசூர் வனக்கோட்டத்தில் யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பிறகு 4 ஆண்டுகள் கழித்து வனஉயிரினங்கள் கணக்கெடுப்புப் பணி தற்போது நடைபெறுகிறது. பிப்ரவரி 11-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெறும் இந்த கணக்கெடுப்புப் பணியில் கென்னத் ஆண்டர்சன் நேச்சர் சொசைட்டி, தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர், ஓசூர் டைட்டான் நிறுவனம், ஓசூர் டிஎன்பிஎஸ், கோயம்புத்தூர் மற்றும் டபிஸ்யூ.டபிள்யூ.எப் ஆகியோரது உதவியுடன் வனஉயிரினக் கணக்கெடுப்புப் பணிகள் திட்டமிடப்பட்டு தொடங்கி உள்ளது. இதில் கென்னத் ஆண்டர்சன் நேச்சர் சொசைட்டி, தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர், பல்வேறு துறைகளில் பணியாற்றும் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து இக்கணக்கெடுப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வனஉயிரின கணக்கெடுப்புப் பணிக்காக இரண்டு நாட்கள் நடைபெற்ற பயிற்சியில் வனஉயிரினக் கணக்கெடுப்பில் முன் அனுபவம் மற்றும் பயிற்சி பெற்ற அலுவலர்கள் மூலம் வனப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு வனஉயிரினக் கணக்கெடுப்பு முறைகள் பற்றிய பயிற்சி மற்றும் கணக்கெடுப்பின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்புப் பணியில் வனப்பணியாளர்கள் 200 பேரும், தன்னார்வலர்கள் 300 பேரும் பங்கேற்கும் 83 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் வனப்பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்குள்ள முகாம்களில் தங்கியிருந்து வனவிலங்குகள் கணக்கெடுப்பில் ஈடுபடுகின்றனர்''.
இவ்வாறு வனஅலுவலர் பிரபு தெரிவித்தார்.
பயிற்சி முகாமில் கணக்கெடுப்புப் பணியின்போது அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து கணக்கெடுப்புக் குழுக்களுக்கும் முதலுதவிப் பெட்டிகள் வழங்கப்பட்டன. அத்துடன் ஓசூர் டைட்டன் நிறுவனம் சார்பில் கணக்கெடுப்பின்போது சாப்பிடுவதற்கு அனைத்துக் குழுவினருக்கும் பிஸ்கட் போன்ற உணவுப் பண்டங்கள் அடங்கிய பொட்டலங்கள் வழங்கப்பட்டன. மேலும் அவசர மருத்துவ முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவர்கள் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT