Published : 13 Feb 2021 03:10 AM
Last Updated : 13 Feb 2021 03:10 AM
திமுக பிரச்சாரத்தை முறியடிக்க 2 லட்சம் வாட்ஸ்அப் குழுக்கள், 1.2 லட்சம் ஊழியர்களுடன் களமிறங்கியுள்ளது அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி.
இதுகுறித்து அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் அஸ்பயர் கே.சுவாமிநாதன் "இந்து தமிழ்" நாளிதழுக்கு அளித்த பேட்டி:-
கேள்வி: அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி எப்போது தொடங்கப்பட்டது?
பதில்: வேறு எந்த அரசியல் கட்சியும் ஐடி அணி பற்றி சிந்தித்துப் பார்க்காத நிலையில், 2014-ம் ஆண்டு அதிமுகவில் தகவல் தொழில்நுட்ப அணியை மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடங்கினார். அதனால், 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2016 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்றதில் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் பங்கு அளப்பறியது.
கேள்வி: அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயல்பாடுகள் பற்றி கூறுங்கள்?
பதில்: தமிழ்நாட்டில் மாநிலத்தில் தொடங்கி, மண்டலம், மாவட்டம், வாக்குச்சாவடி வரை சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் ஐடி அணி ஊழியர்களாக உள்ளனர். மாநிலம் முழுவதும் 90 ஆயிரம் வாக்குச்சாவடிகள் இருக்கின்றன. ஒரு வாக்குச்சாவடிக்கு 2 குழுக்கள் வீதம் 1 லட்சத்து 80 ஆயிரம் குழுக்களும், இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட பிற அணிகளைச் சேர்ந்த குழுக்களையும் சேர்த்தால் ஆக மொத்தம் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் குழுக்கள் செயல்படுகின்றன.
கேள்வி: சமூக வலைத்தளங்களில் உங்கள் யுக்தி?
பதில்: அதிமுக ஆட்சியின் சாதனைகளை முதன்மையாகப் பதிவிடுகிறோம். இரண்டாவதாக எதிர்க்கட்சியினர் பரப்பும் அவதூறுகளை முறியடிக்கிறோம். மூன்றாவதாக எதிர்க்கட்சியினரின் வெற்றுப் பேச்சுகள், போலி வாக்குறுதிகள், நகைப்புக்குரிய செயல்களைத் தோலுரிக்கும் வகையில் "மீம்ஸ்"களைப் பதிவிடுகிறோம். இவ்வாறு மூன்று விதமான யுக்திகள் பின்பற்றப்படுகின்றன.
கேள்வி: வரும் தேர்தல் பிரச்சாரத்திற்காக புதிதாக எதையாவது அறிமுகம் செய்துள்ளீர்களா?
பதில்: "அம்மா" என்ற பெயரில் வாட்ஸ்அப் குழு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதை அறிமுகம் செய்த ஒருவாரத்திற்குள் 37 லட்சம் பேர் இணைந்துள்ளனர். கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்கள் குறிப்பாக ஜெயலலிதாவின் அபிமானிகள், எம்.ஜி.ஆர். ரசிகர்கள் என ஏராளமான பேர் இணைந்துள்ளனர். இவர்களில் 6 லட்சத்து 57 ஆயிரம் பேர் இந்தியாவிற்கு வெளியே வசிப்பவர்கள் ஆவர். 83002 34234 என்ற எண்ணுக்கு AMMA என டைப் செய்து அனுப்பி, அதில் கேட்கும் விவரங்களைக் கொடுத்தால் அவரது தொகுதி மற்றும் வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதிகளில் செய்யப்பட்டுள்ள அரசு திட்டப்பணிகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பெறலாம்.
கேள்வி: தினமும் குறைந்தபட்சம் எத்தனை பதிவுகள் இருக்கும்?
பதில்: சமூக வலைத்தளங்களில் அதிகம் பதிவிட்டாலும் மக்கள் விரும்புவதில்லை. அதனால் தினமும் குறைந்தபட்சம் இரண்டு பதிவுகள் வரை பதிவிடப்படும். அனைவருக்குமான பதிவாக அரசின் சாதனைகள் பதிவிடப்படும். அந்தந்த மாவட்டத்தில் முடிக்கப்பட்டுள்ள அரசுத் திட்டப் பணிகள், இதுவரை வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகள் மாவட்ட பதிவாக இடம்பெறும். வாக்குச்சாவடி வாரியான அரசு சாதனைகள் பதிவிடப்படுகின்றன. குறிப்பாக சாலை வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள், அம்மா மருத்துவ காப்பீடு என்பன போன்ற பதிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். மொத்தத்தில் மக்களுக்கு தேவையான அத்தனை அம்சங்களும் எங்கள் பதிவில் இடம்பெறுகின்றன.
கேள்வி: அதிமுக ஐடி அணியில் தனித்துவ அடையாளமாக எதைக் குறிப்பிடுவீர்கள்?
பதில்: "மைக்ரோ டார்க்கெட்டிங்" என்ற புதிய முறையைக் கூறலாம். கடந்த 8 ஆண்டுகளாக உழைத்து சுமார் 2 லட்சம் வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கியுள்ளோம். வயது, தொகுதி, வாக்குச்சாவடி வாரியாக மட்டுமல்லாமல் ஆண், பெண் எனவும் வாட்ஸ்அப் குழுக்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு பற்றி முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டால், அந்த செய்தியை 18 முதல் 24 வரையிலான இளைஞர்கள் உள்ள வாட்ஸ்அப் குழுவுக்கு அனுப்புவோம். விவசாயிகள் கடன் ரத்து என்பன போன்ற தகவல்கள் விவசாயிகள் குழுவுக்கு அனுப்பப்படும். சுய உதவிக் குழுக்கள் என குழுக்களின் பட்டியல் நீள்கிறது. அவற்றின் மூலம் அதிமுக ஆட்சியின் சாதனைகள் அந்தந்த பிரிவினருக்கு சென்றடைய வழிவகை செய்திருக்கிறோம். இதுதான் இப்புதிய முறையின் தனித்துவ அடையாளம் ஆகும்.
இவ்வாறு சுவாமிநாதன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT