Published : 13 Feb 2021 03:10 AM
Last Updated : 13 Feb 2021 03:10 AM

சட்டப்பேரவை தேர்தலில் ராமநாதபுரத்தில் போட்டியிடுவாரா கமல்?

சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன், தனது சொந்த மண்ணான ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் அக்கட்சி பொதுக் குழு கூட்டத்தில் வலியுறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கி 4 ஆண்டுகள் கடந்த நிலையில், அக்கட்சியின் முதல் பொதுக் குழு கூட்டம் சென்னையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது, வேட்பாளர் தேர்வு உட்பட அனைத்தையும் முடிவெடுக்கும் அதிகாரத்தை கமலுக்கு அளித்தும், முதல்வராக அவரைப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதற்கிடையே கமல்ஹாசன் தனது சொந்த மாவட்டமான ராமநாதபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என அவரது தொண்டர்கள் பொதுக் குழுவில் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகளிடம் பேசியபோது, ‘‘கமல்ஹாசன் தான் பிறந்த ராமநாதபுரம் மண்ணில் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இல்லத்திலிருந்து 21.02.2019 அன்று தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். கட்சியைத் தொடங்கிய உடன் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து கிராமசபைக் கூட்டங்களை முதன்முதலில் கமல்ஹாசன்தான் நடத்தினார்.

மேலும் கல்லூரிகளுக்குச் சென்று மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். இதனால் 2019 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் சுமார் 4 சதவீத வாக்குகளை மக்கள் நீதிமய்யம் பெற்றது. இதில் சில தொகுதிகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளையும், மேலும் சில தொகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளையும் பெற்றது.

பரமக்குடி தனித் தொகுதி என்பதால் அவரது சொந்த மாவட்டமான ராமநாதபுரம் தொகுதியிலேயே போட்டியிடும்படி நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளோம். அதே முனைப்புடன் தொகுதியில் கட்சியினர் வாக்கு சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் ’’என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x