Published : 17 Nov 2015 04:04 PM
Last Updated : 17 Nov 2015 04:04 PM
'நோய்களை பரப்பிவரும் நாய் களை அடித்தால்கூட கேட்பதற்கு ஆள்கள் வருகின்றனர். ஆனால் திருநங்கைகளுக்கு குரல் கொடுக்க யாரும் வருவதில்லை' என உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. 'தாங்கள் திருநங்கைகள் என தைரியமாக வெளியில் வருவோரை ஆதரிக்க மறுக்கக் கூடாது' என நீதிபதிகள் தெரிவித்தனர்.
தேனி மாவட்டம், சின்னமனூரை சேர்ந்த எம்.பாக்கியம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
என் 2-வது மகன் சதீஷ்குமார் (17) 25.9.2015-ல் மாயமானார். அவரை அல்லிநகரத்தைச் சேர்ந்த திருநங்கைகள் பானு, கனகா ஆகியோர் கடத்தி வைத்துள்ளனர். இது தொடர்பாக சின்னமனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தும், என் மக னைக் கண்டுபி டிக்கவில்லை. சதீஷ்குமாரை கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் பி.ஆர்.சிவகுமார், வி.எஸ்.ரவி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சுசிகுமார், திருநங்கைகள் சார்பில் வழக்கறிஞர் ரஜினி, அரசு வழக்கறிஞர் மோகன் வாதிட்டனர்.
நீதிமன்றத்தில் திருநங்கைகள் பானு, கனகா ஆகியோர் ஆஜராகியிருந்தனர். அவர்கள் நீதிபதிகளிடம் கூறியது: குடும்பத்தால் புறக்கணிப்பட்ட திருநங்கைகள் 50-க்கும் மேற்பட்டோர் அல்லிநகரத்தில் இரு வீடுகளை வாடகைக்கு எடுத்து வசித்துவருகிறோம். ஒன்றாகவே சமைத்து சாப்பிடுகிறோம். கிராமிய கலைநிகழ்ச்சிகளுக்கு சென்று சம்பாதிக்கிறோம். மனுதாரர் மகன் பெண் தன்மை காரணமாக, ஜூன் மாதம் எங்களைத் தேடி வந்தார். நாங்கள் அவரை போலீஸாரிடம் ஒப்படைத்துவிட்டோம். தற்போது அவர் மாயமானதற்கும் எங்களு க்கும் தொடர்பு இல்லை. இருப் பினும் மனுதாரரின் உறவினர்கள் வீடு புகுந்து தாக்கி பொருள்களை சூறையாடினர். தற்போது வீட்டில் ஒரு பொருளும் இல்லை. இந்த சம்பவத்தால் வீட்டை காலி செய்யுமாறு உரிமையாளர் கூறுகிறார். திருநங்கைகளுக்கு வீடு கிடைப்பது கடினம். பாதுகாப்பில்லாமல் இருக்கிறோம் என கண்ணீர்விட்டனர்.
இதையடுத்து நீதிபதிகள் கூறியது: திருநங்கைகளுக்கு 3-ம் பாலினமாக உலகம் முழுவதும் அங்கீகாரம் அளிக்கப் பட்டுள்ளது. மற்றவர்களைவிட திருநங்கைகளில் அதிக திறமை உள்ளவர்கள் ஏராளமானோர் உள்ளனர். பார்வை யற்ற, கேட்கும் திறனற்ற, ஊனத் துடன் பிறப்பவர்களை புறக்கணிப்பதில்லை. ஆனால் திருநங்கைகளை புறக்கணிக்கி ன்றனர். நோய் பரப்பும் நாய்களை அடித்தால்கூட கேட்பதற்கு ஆள்கள் வருகின்றனர். ஆனால் திருநங்கைகளுக்கு குரல் கொடுக்க யாரும் வருவதில்லை. அவர்களை சமூகத்தில் இழிவாக பார்க்கின்றனர்.
திருநங்கையாக இருக்கும் பலர் வெளியில் சொல்லாமல் உள்ளனர். ஆனால் நாங்கள் திருநங்கைகள்தான் என தைரியமாக வெளியே வருவோரை ஆதரிக்க மறுக்கக்கூடாது. திரு நங்கைகளின் திறமையை வெளிக் கொண்டு வர வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றனர்.
பின்னர், சிறுவன் மாயமான வழக்கு, திருநங்கைகள் தாக்க ப்பட்ட வழக்கின் விசாரணையை தேனி ஏ.டி.எஸ்.பி. கண்காணித்து, 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். திருநங்கைகளுக்கு போலீஸார் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். திருநங்கைகள் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT