Published : 12 Feb 2021 10:38 PM
Last Updated : 12 Feb 2021 10:38 PM
172 ஆண்டுகள் பழமையான புதுச்சேரி குபேர் அங்காடி மணிக்கூண்டை அதை கட்டியவரின் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுதாரர் தனது சொந்த செலவில் புதுப்பித்துள்ளார். இனி ஒவ்வொரு மணி நேரமும் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சில் திருக்குறள் கேட்கலாம்.
புதுச்சேரி மிக முக்கியமான பகுதியான குபேர் அங்காடியில் உள்ள மணிக்கூண்டு கடந்த 1849ல் கட்டப்பட்டது. அக்கூண்டு பராமரிக்கப்படாமல் பழுதடைந்து இருந்தது. தற்போது 172 ஆண்டுகளுக்கு பிறகு இக்கூண்டை அவரது குடும்பத்தை சேர்ந்த வாரிசுதாரர் புதுப்பித்துள்ளனர்.
இப்பணியை தனது சொந்த செலவில் செய்த சாமுவேல் தியாகு கூறியதாவது:
புதுச்சேரியின் முதல் துபாஷ் லசாரோ தெ மொத்தா தானப்ப முதலியாரின் பேரனின் பேரனான தியாகு முதலியாரால் குபேர் அங்காடி மணிக்கூண்டு கடந்த 1849ல் கட்டப்பட்டது.
அப்போது தியாகு முதலியார் கடலூர் சரஸ்ட்டதார் பணியில் இருந்தார். இந்த மணிக்கூண்டு வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இதில் உள்ள கடிகாரத்தின் இயந்திர பாகங்கள் பிரான்ஸ் ஜெ. வாக்னரால் வடிவமைத்து எடுத்து வந்து பொருத்தப்பட்டது.
இரண்டு நூற்றாண்டு மேலாக புதுச்சேரியின் சின்னமாக அமைந்திருந்த இக்கூண்டு பல ஆண்டுகளாக பாழடைந்திருந்தது. இதையடுத்து அரசு அனுமதியுடன் தியாகு முதலியாரின் கொள்ளு பேரனுக்கும் பேரனான நான் புதுப்பிக்க துவங்கினேன்.
முதலில் உள்ளேயிருந்த படிகள், வெளிப்புற சுவர்கள் அவற்றை சீரமைத்து வர்ணம் பூசினோம். பின்னர் கடிகாரத்தையும் சீரமைத்தோம். தற்போது ஒவ்வொரு மணி நேரத்துக்கும் தேதி மற்றும் நேரத்தை இனி கேட்கலாம்.
அத்துடன் திருக்குறளையும் தமிழ், பிரெஞ்சு ஆங்கிலத்திலும் சொல்லும் வகையில் வடிமைத்துள்ளோம் தியாகுவின் 241வது பிறந்தநாளையொட்டி திறந்துள்ளோம். இப்பணிகளுக்கு ரூ. 5 லட்சம் செலவானது" என்று தெரிவித்தார்.
புதுப்பிக்க மணிக்கூண்டை முதல்வர் நாராயணசாமி, எம்எல்ஏ சிவா ஆகியோர் இணைந்து திறந்து வைத்துள்ளனர். இனி மணி தோறும் மூன்று மொழிகளில் திருக்குறள் கேட்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT