Last Updated : 12 Feb, 2021 09:08 PM

1  

Published : 12 Feb 2021 09:08 PM
Last Updated : 12 Feb 2021 09:08 PM

மாநகராட்சி தூய்மைப் பணியாளர் காலிப்பணியிடத்துக்கு நேர்காணல்: பட்டதாரிகள், வேலைக்குச் செல்பவர்கள் குவிந்தனர்

கோவை

கோவை மாநகராட்சி நிர்வாகத்தினர், தூய்மைப் பணியாளர் காலியிடத்துக்கு கடந்த இரண்டு நாட்களாக நடந்து வரும் நேர்காணலில் பட்டதாரிகள், வேலைக்கு செல்பவர்கள் கலந்து கொண்டனர்.

கோவை மாநகராட்சி நிர்வாகத்தில் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் 4,500-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சாலைகளை சுத்தம் செய்தல், சாக்கடைகளை சுத்தம் செய்தல், வீடு வீடாக சென்று குப்பை சேகரித்தல் போன்ற திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

மாநகராட்சி நிர்வாகத்தில் நிரந்தர தூய்மைப் பணியாளர்கள் காலிப்பணியிடம் அதிகளவில் இருந்தது. இப்பணியிடங்களை நிரப்ப முடிவு செய்த மாநகராட்சி நிர்வாகத்தினர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டனர். அதில், ‘ கிரேடு-1 தூய்மைப் பணியாளர் காலிப்பணியிடத்துக்கு 530 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழில் எழுதி, படிக்கத் தெரிந்த, 21 வயது பூர்த்தியடைந்த, தாழ்த்தப்பட்ட வகுப்பினர், அருந்ததியினர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், இதர வகுப்பினங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்,’’ என அறிவிக்கப்பட்டிருந்தது.

6,900 பேர் விண்ணப்பிப்பு

இதைத் தொடர்ந்து 6,900 பேர் மேற்கண்ட 530 பணியிடத்துக்கு விண்ணப்பித்தனர். இவர்களை விண்ணப்பங்களை பரிசீலனை செய்த மாநகராட்சி அதிகாரிகள், 11-ம் தேதி, 12-ம் தேதி, 13-ம் தேதி ஆகிய மூன்று நாட்கள் நேர்காணல் நடத்த முடிவு செய்தனர். கடந்தாண்டு இதேபோல் ஆட்களை தேர்வு செய்ய மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நேர்காணல் நடத்தப்பட்டது. அப்போது ஒரே இடத்தில் அதிகம் பேர் திரண்டதால் நெரிசல் ஏற்பட்டது.

தற்போது கரோனா வைரஸ் தொற்று அச்சம் இருப்பதால், உரிய தனிநபர் இடைவெளியை கடைபிடித்து நேர்காணல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதனால், தற்போது ஒரே இடத்தில் நேர்காணல் நடத்தாமல், மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்கு உட்பட்ட மாநகராட்சிப் பள்ளி வளாகத்தில் நேர்காணல் நடத்த முடிவு செய்யப்பட்டது. 9 முதல் 11 மணி வரை, 11 முதல் ஒரு மணி வரை, 2 முதல் 4 மணி வரை என மூன்று ஷிப்டுகளாக பிரித்து நேர்காணல் நடத்தப்பட்டது.

எந்தெந்த தேதியில், எந்த ஷிப்டில், எந்த பள்ளியில் யார் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்டவர்களுக்கு கடிதம் மூலம் மாநகராட்சி நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர். அதன்படி, கடந்த 11-ம் தேதி (நேற்று) மேற்கண்ட 5 இடங்களிலும் நேர்காணல் நடத்தப்பட்டது. 2-வது நாளாக இன்றும்(12-ம் தேதி) மேற்கண்ட 5 இடங்களிலும் நேர்காணல் நடந்தது. பத்தாம் வகுப்புக்கு கீழ் படித்தவர்கள், பட்டதாரிகள், தினக்கூலி தொழிலாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என ஏராளமானோர், ஆர்வத்துடன் இந்த நேர்காணலில் கலந்து கொண்டனர்.

5 இடங்களில் நேர்காணல்

இதுதொடர்பாக மாநகராட்சி உயர் அதிகாரிகள் கூறும்போது,‘‘ கிழக்கு மண்டலத்தில் ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மேற்கு மண்டலத்தில் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வடக்கு மண்டலத்தில் பீளமேடு பயனீர் மில் சாலை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, தெற்கு மண்டலத்தில் குனியமுத்தூர் அரசு பள்ளி, மத்திய மண்டலத்தில் டாடாபாத் அழகேசன் சாலையில் உள்ள மாநகராட்சி இடைநிலைப் பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் நேர்காணல் நடந்து வருகின்றன.

ஒரு மையத்தில் 500 பேர் என 5 மையங்களிலும் நாள் ஒன்றுக்கு 2,500 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். இந்த நேர்காணலில் அவர்களது சான்றிழ்கள், ஆவணங்கள் சரியாக உள்ளதா என சரிபார்க்கப்பட்டது. அவர்களது வேலை வாய்ப்பு அலுவலக முன்பதிவும் சரி பார்க்கப்பட்டது. இதன் இறுதியில் தகுதி வாய்ந்தவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும்,’’ என்றனர்.

நேர்காணலில் பங்கேற்றவர்கள்

அழகேசன் சாலையில் உள்ள மாநகராட்சி இடைநிலைப்பள்ளியில் நேர்காணலுக்கு வந்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் பட்டதாரி இளைஞர் பிரபு(31) கூறும்போது,‘‘ நான் எம்.எஸ்சி படித்துள்ளேன்.

தூய்மைப் பணி என்பதை அறிந்து தான் விண்ணப்பித்துள்ளேன். தூய்மைப் பணியாக இருந்தாலும் அரசுப் பணியாகும். எந்த பணி என்பது முக்கியம் அல்ல. எவ்வாறு பணிபுரிகிறோம் என்பதே முக்கியம். எனக்கு பணி கிடைத்தால் தூய்மைப் பணியை சிறப்பாக மேற்கொள்வேன்,’’ என்றார்.

ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கலந்தாய்வுக்கு வந்த உமா மகேஸ்வரி(35) கூறும்போது,‘‘ நான் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். தினக்கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறேன். மாநகராட்சியின் அறிவிப்பைப் பார்த்து விண்ணப்பித்தேன். தற்போது நேர்காணலுக்கு அழைத்துள்ளனர். எனக்கு பணி வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக பணிபுரிவேன்,’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x