Published : 14 Nov 2015 05:30 PM
Last Updated : 14 Nov 2015 05:30 PM
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விசூர் வாசிகள் தங்கள் வீடுகளையும் தங்கள் வாழ்வாதாரத்துக்கான விளைநிலங்களை இழந்து வீதியில் நிற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அண்மையில் பெய்த காற்றுடன் பெய்த கனமழையால் பண்ருட்டி வட்டம் பெரியக்காட்டுப்பாளையம் மற்றும் விசூர் ஆகிய கிராமங்கள் பெரும் சேதத்துக்குள்ளானது. இதில் பெரியக்காட்டுப்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். இது தவிர்த்து விசூர் கிராமத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர்.
பல வீடுகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டத்தில் வீடுகள் இருந்த சுவடே தெரியாமல் மணல்மேடாக காட்சியளிக்கிறது. சாலைகள் துண்டிக்கப்பட்டும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளானவர்கள் அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உணவு வழங்கப்படுகிறது.
இந்த மழை வெள்ளத்தால் கடும் பாதிப்புக்குள்ளாகியிருப்பது விசூர் கிராமம் என்றால் மிகையல்ல. விசூர் கிராமத்தில் குடியிருப்புகள் மட்டுமல்ல விளை நிலங்களும் பெரும் சேதத்துக்குள்ளாகியிருக்கிறது.குடிசைகள் மட்டுமின்றி கட்டிட வீடுகளும் அடியோடு வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டிருப்பது வினோதமாக உள்ளது.
ஏதோ ஒரு மணல் திட்டுக்குள் இருக்கின்ற உணர்வோடு தான் தற்போது தங்களுக்கு இருப்பதாக அப்பகுதி மக்கள் கவலையுடன் தெரிவித்தனர். அந்த அளவுக்கு ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் 3 அடி உயரத்துக்கு மணல் படிந்துள்ளது. கான்கிரீட் சாலைகளை தேடவேண்டிய நிலை உள்ளது. வீட்டுக்குள்ளும், வெளியேயும் சரிசமமான அளவுக்கு மணல் உள்ளதால், அந்த மணலை வாரி எங்கே கொட்டுவது என்ற கேள்வி அவர்களிடம் எழுகிறது.
விசூர் கிராமத்தைப் பொறுத்தவரை உயிர் பலி குறைவு என்றாலும், உடமைகள் சேதம் அதிகமாக உள்ளது. மொத்தமுள்ள சுமார் 610 குடும்பங்களில் 143 வீடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மாற்றுத் துணி கூட இல்லாமல், உடமைகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், அடுத்த வேளை உணவுக்கும் அரசின் நிவாரண உதவியை எதிர் நோக்கிக் காத்திருக்கின்றனர்.
(படம் 1: மனைவி, மகளை பறிகொடுத்த உக்கிரவேல், படம் 2: உணவை உட்கார்ந்து சாப்பிடக்கூட இடம் இல்லாமல் தவிக்கும் பெண்கள். படம் 3: தன் குழந்தையுடன் எங்கு செல்வது என தெரியாமல் ஏக்கத்துடன் நிற்கும் தாய் )
இந்த நிலையில் தனது மகள் மற்றும் மனைவியை இழந்து நிற்கும் உக்கிரவேல் என்பவர் கூறும்போது, ''எனது வாழ்நாளில் இது போன்ற வெள்ளத்தை நான் பார்த்ததில்லை.இந்த அளவுக்கு மழை வரும் என நாங்கள் நினைக்கவும் இல்லை. என் கண் முன்னே மனைவியும், மகளும் அடித்துச் செல்லும்போது, அவர்களை காப்பாற்ற முயன்றும் தோல்வியடைந்துவிட்டேன். வீட்டிலிருந்த உடமைகள், நகைகள் என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது.எஞ்சியிருப்பது எனது இரு மகன்கள் மட்டுமே. தற்போது அரசு நிவாரணத் தொகை கிடைத்துள்ளது.தற்போது ஊரின் புவியமைப்பே மாறியுள்ள நிலையில் எப்படி எதிர்காலத்தை இங்கு கழிக்கப்போகிறோம் என்பது கேள்விக்குறியாகி விட்டது'' என்றார்.
அதேகிராமத்தைச் சேர்ந்த அன்னலட்சுமி என்ற பெண் கூறும்போது, ''வீடுகள் ஒரு புறம் சேதமடைந்திருந்தாலும், எங்கள் வாழ்வாதாரத்துக்கான விளை நிலங்களும் சேதமடைந்துள்ளது தற்போது விளை நிலங்களில் படிந்திருக்கும் மணலை அப்புறப்படுத்த ஏக்கருக்கு ரூ.2 லட்சம் செலவாகும். அதை எப்படி சீரமைத்து, மறுபடியும் முன்பிருந்த மகசூலை பார்க்க முடியுமா என்பது சந்தேகமே'' என்றார்.
அதேகிராமத்தைச் சேர்ந்த சாந்தா என்ற பெண் கூறும்போது, ''அரசும், அரசியல் கட்சிகளும் தற்போது மாறிமாறி தற்காலிகத்துக்கான நடவடிக்கைகளைதான் செய்து வருகிறதே தவிர, நிரந்தர தீர்வுக்கு வழி ஏற்படுத்தவில்லை. இது யாரும் எதிர்பாரதவிதமாக நடைபெற்ற பேரிழப்பு, அதற்குத் தகுந்தவாறு நிவாரணப் பணிகளை முடுக்கிவிடுவதோடு, எங்களின் எதிர்கால வாழ்வைக் கருத்தில் கொண்டு அனைவருக்கும் மாற்று இடம் வழங்கவேண்டும்'' என்றார்.
இதனிடையே புதைந்து போன கான்கிரீட் சாலைகளை மீட்பது, மின்கம்பங்கள் அமைப்பது, துண்டிக்கப்பட்ட சாலைகளை சீரமைப்பது போன்ற அரசின் நிவாரணப் பணிகள் துரிதகதியில் நடைபெற்றாலும், அவை பாதிப்புக்குள்ளான மக்களுக்கு தொலைந்து போன வாழ்க்கையை மீட்டு மறுவாழ்வை மீட்டுத் தருமா என்ற கவலை அனைவரிடத்திலும் காணமுடிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT