Last Updated : 12 Feb, 2021 05:16 PM

 

Published : 12 Feb 2021 05:16 PM
Last Updated : 12 Feb 2021 05:16 PM

புதுச்சேரி-தமிழகத்தில் ஒரே நாளில் தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தகவல்

தேர்தல் விழிப்புணர்வு புத்தகம் வெளியீடு | படம்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி

தமிழகம் மற்றும் புதுச்சேரி ஒருங்கிணைந்து இருப்பதால் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பொருத்தமாக இருக்கும். அதனால் ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.

தமிழகம், கேரளா, புதுவை உட்பட 5 மாநிலத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் கமிஷன் முடுக்கிவிட்டுள்ளது. தமிழகத்தில் ஆலோசனையை முடித்துக்கொண்டு, புதுச்சேரியில் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் தேர்தல் ஆணையர்கள் சுசில் சந்த்ரா, ராஜீவ்குமார், கூடுதல் டைரக்டர் ஜெனரல் ஷேபாலி சரண், பொதுச்செயலாளர் உமேஷ் சின்ஹா, துணை தேர்தல் ஆணையர் சந்திர பூஷன்குமார், இயக்குநர் பங்கஜ் ஸ்ரீவத்ஸவா, செயலாளர் மலேய் மாலிக் ஆகியோர் வந்தனர்.

ராஜீவ் காந்தி சிக்னல் அருகேயுள்ள நட்சத்திர உணவகத்தில் தங்கி, பல்வேறு துறை அதிகாரிகளுடனும், அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனும் ஆலோசனை நடத்தினர்.

இன்று (பிப். 12) காலை அரவிந்தர் ஆசிரமம் சென்றனர். அதைத் தொடர்ந்து, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"புதுச்சேரியில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 84.08 சதவீதம் வாக்குப்பதிவும், மக்களவைத் தேர்தலில் 81 சதவீதமும் பதிவானது. எழுத்தறிவு சதவீதமும், விழிப்புணர்வும் அதிகம் என்பதால் வாக்கு சதவீதம் புதுச்சேரியில் அதிகமாக இருக்கும். எவ்வித பாரபட்சமும் இல்லாமல் வெளிப்படைத் தன்மையுடன் தேர்தலை நடத்துவோம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் தொடர்பாக 7 நாட்கள் அவகாசம் அளித்து சரிசெய்ய வேண்டும். உள்ளூர் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்ட பிறகே சரிசெய்ய வேண்டும். தமிழகம் மற்றும் புதுச்சேரி ஒருங்கிணைந்து இருப்பதால் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பொருத்தமாக இருக்கும். அதனால் ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும்.

கரோனாவால் அனைத்து வாக்குச்சாவடிகளும் ஒரே மாதிரியாக இருக்க அறிவுறுத்தியுள்ளோம். கரோனா காரணமாக புதுச்சேரியில் உள்ள 952 வாக்குச்சாவடிகளை 1,564 ஆக உயர்த்தியுள்ளோம். தேர்தல் பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை தந்து கரோனா தடுப்பூசி போட உத்தரவிடப்பட்டுள்ளது. அதைச் செயல்படுத்த தலைமைச் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

புதுச்சேரியிலும், தமிழகத்திலும் தற்போது மதுவிலையில் மாற்றமில்லை. அண்டை மாவட்டங்களுக்கு புதுச்சேரியில் இருந்து மது மற்றும் சாராயம் கடத்தப்படுவதைத் தடுக்க கிடங்குகளில் மது வகைகள், இலவசப் பொருட்கள், வேட்டி, சேலை, பரிசுப்பொருட்கள் ஆகியவை பதுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். அதற்காக கலால்துறை, மத்திய அமலாக்கத்துறை மற்றும் இது தொடர்பான துறை அதிகாரிகளிடம் தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பணம், பரிசுப் பொருள் தந்ததற்காக தமிழகத்தில் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. பணம், பரிசுப் பொருள் விநியோகத்தைத் தடுக்க கடும் நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் எடுக்கும்.

அடுத்து கேரளத்துக்குச் சென்று கூட்டங்கள் நடத்துகிறோம். டெல்லிக்குச் சென்ற பிறகு வரும் பிப்ரவரி 16-ம் தேதி மத்திய வருமான வரித்துறை, சுங்கத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ஐந்து மாநிலத் தேர்தலில் செய்ய வேண்டிய முடிவுகள் எடுக்கப்படும்" .

இவ்வாறு சுனில் அரோரா தெரிவித்தார்.

இதையடுத்து, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

சிறிய மாநிலமான புதுச்சேரியில் ஒவ்வொரு தொகுதியிலும் 30 ஆயிரம் சராசரி வாக்காளர்களே உள்ளனர். அதில், 15 ஆயிரம் வாக்காளர்களை விலை கொடுத்து வாங்கிவிட்டால் எளிதாக வென்று தேர்தல் முடிவு ஒருதலைப்பட்சமாகிவிடுமே?

வடகிழக்கு மாநிலங்களில் 200 வாக்காளர்கள் கொண்ட தொகுதிகள் கூட உள்ளன. அங்கு பாரபட்சமில்லாமல் நேர்மையாகத் தேர்தலை நடத்தியுள்ளோம். புதுச்சேரியில் இது பெரிய விஷயமில்லை.

வேட்பாளர் செலவுத் தொகை அதிகரிக்கப்படுமா?

வேட்பாளர் செலவுத்தொகை ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.22 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சுனில் அரோரா பதில் அளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x