Published : 12 Feb 2021 04:09 PM
Last Updated : 12 Feb 2021 04:09 PM
பேனர், பிளக்ஸ், பட்டாசு, சால்வை, புகைப்படம் ஆகியவற்றை தவிர்த்துவிட்டு, தனக்கு புத்தகங்களைத் தருமாறு, திமுக நிர்வாகிகள், தொண்டர்களை அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக, அவர் இன்று (பிப். 12) வெளியிட்ட அறிக்கை:
"அடிமை ஆட்சியாளர்களால் இருளில் உள்ள தமிழகத்துக்கு விடியல் தரவுள்ள திமுக தலைவரின் எண்ணங்களை மக்கள் மனதில் விதைக்கும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ளேன். செல்லும் இடங்களிலெல்லாம் மக்களிடம் உள்ள எழுச்சியைப் பார்க்கையில் திமுக அரசு அமைவது உறுதி என்பது தெளிவாகத் தெரிகிறது.
இவ்வளவு மகிழ்ச்சியான சூழலில் சில தர்மசங்கடங்களையும் எதிர்கொள்ள நேரிடுகிறது. உற்சாக மிகுதியில் திமுக நிர்வாகிகள் சிலர் என்னை வரவேற்று பிளக்ஸ், பேனர்கள் வைப்பதைக் காண முடிகிறது. தயவுசெய்து அவற்றை அறவே தவிர்த்திடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இதேபோல், சுவரொட்டிகளில் என் படங்களைப் பயன்படுத்தக்கூடாது. திமுகவைக் கட்டமைத்த பெரியார், அண்ணா, கருணாநிதி, நம்மை வழிநடத்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகிய நான்கு தலைவர்களின் புகைப்படங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், என்னை வரவேற்கும் வகையில் பல இடங்களில் பட்டாசு வெடிக்கிறீர்கள். இதையும் அறவே தவிர்க்க வேண்டும்.
எனக்கு நினைவுப் பரிசுத் தரும் தோழர்கள் சால்வைகள், பூங்கொத்துகள், மாலைகள் போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு புத்தகங்களைப் பரிசளிக்குமாறு வேண்டுகிறேன்.
ஏற்கெனவே அப்படி நீங்கள் எனக்கு அளித்த புத்தகங்களை அரியலூரில் அனிதாவின் பெயரில் இயங்கும் நூலகம் உட்பட பல்வேறு நூலகங்களுக்கு வழங்கினேன். இப்படி நீங்கள் தரும் புத்தகங்கள் பலர் பயன்பெறும் வகையில் நூலகங்களுக்கு வழங்க ஏதுவாக இருக்கும்.
எளிமையே வலிமை என்பதை உணர்ந்து இணைந்து செயல்படுவோம். திமுக தலைவர் தலைமையில் திமுக அரசை அமைப்போம். தமிழகத்தைச் சூழ்ந்துள்ள ஆதிக்க, அடிமை கூட்டணி இருளை அடித்து விரட்டும் வரை விடியலை நோக்கிய நம் பிரச்சாரப் பயணம் தொடரும்".
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT