Published : 12 Feb 2021 12:59 PM
Last Updated : 12 Feb 2021 12:59 PM
அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பான அணுகுமுறையோடு கையாள வேண்டும், என மதுரை மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன் தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உயிரினங்களைப் பிடிக்கும்போது கையாள வேண்டிய நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் மடீட்சியா அரங்கில் மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன் தலைமையில் நேற்று நடந்தது.
அதில் மாநகராட்சி ஆணையாளர் விசாகன் பேசியதாவது: அனைத்து உயிரினங்களும் வாழ ஏற்ற இடம் பூமி மட்டுமே. தற்போது இயற்கை சூழலின் மாறுபாட்டால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.
இருக்கின்ற பனிகள் எல்லாம் உருக ஆரம்பித்தால் இந்த பூமியில் யாரும் வாழ முடியாமல் போய்விடும். எந்தவொரு வேலையும் முக்கியமான வேலைதான்.
ஏன் என்றால் நிறைய விஷயங்கள் நமக்கு தெரியாது. மனித குலத்தைக் காப்பாற்றுவதற்கு அறிவியல் முறைகளை பயன்படுத்துவது போன்று அனைத்து உயிரினங்கள் வாழ்வதற்கான வழிவகைகளை செய்வது பொதுவான கோட்பாடு ஆகும்.
முக்கியமாக மாநகராட்சிப் பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகம் இருப்பதாகப் புகார் வந்தால் அவற்றை எவ்வாறு கையாள வேண்டும். எந்த உயிரினங்களையும் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியாது. சட்டம் அதற்கு வழி வகுக்காது. உயிரினங்களை பாதுகாப்பதற்கு என்று பல்வேறு விலங்குகள் நல அமைப்பினர் உள்ளனர். எனவே உயிரினங்களைக் கையாள்வதில் தவறான நடவடிக்கை எடுக்கக்கூடாது.
குறிப்பாக தெரு நாய்களை அதிகமான அளவு துன்புறுத்தப்படுகிறது. தேவையில்லாமல் துன்புறுத்தக் கூடாது. எது செய்ய வேண்டும், எது செய்யக்கூடாது என்பதைப் புரிந்து செயல்பட வேண்டும். வள்ளலார் தெரிவித்தது போன்று அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும். ஒவ்வொரு நாட்டிற்கும் கலாச்சாரம் மாறுபடும்.
ஓவ்வொருவருடைய அணுகுமுறையிலும் வேறுபாடு இருக்கும். எனவே ஒவ்வொரு விலங்குகளையும் உரியமுறையில் பாதுகாப்பான அணுகுமுறையோடு கையாள வேண்டும். உயிரினங்களைப் பிடிக்கும்போது முறையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கும் கருத்துக்களை நல்ல முறையில் பயன்படுத்தி உங்களது அணுகுமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நகர்நல அலுவலர் குமரகுருபரன், நன்றி மறவேல் புறக்கணிக்கப்பட்டு வீதிகளில் வசிக்கும் நாய்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கான கூட்டமைப்பை சார்ந்த மாரிகுமார் மற்றும் குழுவினர், சுகாதார அலுவலர்கள் ராஜ்கண்ணன், சிவசுப்பிரமணியன், வீரன், சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT