Published : 12 Feb 2021 12:53 PM
Last Updated : 12 Feb 2021 12:53 PM
ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெறுப்புணர்வைத் தூண்டும், ஆபாச உணர்வைத் தூண்டும் கருத்துகளைக் கண்காணிக்க, வழிமுறைகளை உருவாக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் மத்திய அரசு மற்றும் ட்விட்டர் நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தியாவில் சமூக வலைதளங்களான ட்விட்டர், ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் பயன்பாட்டாளர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர்.
பயன்படுத்தும் ஆர்வம் அதிகரித்து வரும் அதே வேளையில் அதை தவறாகவும், சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலும், கருத்து சொல்கிறேன் என நாட்டுக்கு எதிராக, சமூகத்துக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் பதிவுகள், காணொலிகள் பரப்பப்படுகிறது.
இதுகுறித்த வழிகாட்டுதலோ, கண்காணிப்போ, சென்சார் முறையோ இங்கு இல்லை என்பதால் சமூக அமைதி கெடும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவைகள் கண்காணித்து நெறிப்படுத்தும் வழிகளை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க மத்திய அரசுக்கும், ட்விட்டர் நிறுவனத்துக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலும், ஆபாசக் கருத்துக்களை நீக்கவும், இதுபோன்ற கருத்துக்கள் இடம்பெறாத வகையில் கண்காணிக்கவும், வழிமுறைகளை உருவாக்கக் கோரி மும்பையைச் சேர்ந்த வினீத் கோயங்கா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், “ட்விட்டர் போன்ற சமூக வலை தளங்களைக் கண்காணிக்க உரிய வழிமுறை இல்லாததால், அதை ஒரு தளமாகக் கொண்டு நாட்டுக்கு எதிராக பல அவதூறுகளை பரப்பி வருகின்றனர் , வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் கருத்துக்கள் பரப்பப்படுகிறது
எனவே இதை கட்டுப்படுத்தவும், கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் ஏதுவாக இது தொடர்பாக ஒரு வழிமுறையை உருவாக்க உத்தரவிட வேண்டும்”. எனக் கோரப்பட்டிருந்தது
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கும், ட்விட்டர் நிறுவனத்துக்கும் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT