Published : 12 Feb 2021 12:23 PM
Last Updated : 12 Feb 2021 12:23 PM

நிலப்பிரத்துவ காலத்து ‘மை லார்ட்’ வேண்டாம், சார் என்று அழையுங்கள்: தலைமை நீதிபதி பேச்சு

தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி

சென்னை

நாட்டின் வளர்சிக்காக விவசாய நிலங்களை அழிக்கக் கூடாது, அப்படி செய்தால் அது மக்களின் உணவைப் பறிக்கும் செயலாக அமைந்துவிடும், சமீபகாலங்களில் வளர்ச்சிக்காக எடுக்கப்பட்ட வன நிலங்களை திரும்ப ஒப்படைத்து, வன வழித்தடங்களை மீண்டும் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தலைமை நீதிபதி பேசியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருச்சுழியில் முன்சீப் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற திறப்புவிழா நேற்று நடைபெற்றது. காணொலி மூலம் சென்னையிலிருந்து தலைமை நீதிபதி நீதிமன்றத்தை திறந்து வைத்தார்.

திறப்பு விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், என்.ஆனந்த் வெங்கடேஷ், பி.புகழேந்தி, மாவட்ட முதன்மை நீதிபதி முத்து சாரதா உள்ளிட்ட நீதித்துறையை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.

காணொலி வாயிலாக விழாவில் பேசிய தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, விவசாய தேவை குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார், நாட்டின் வளர்சிக்காக விவசாய நிலங்களை அழிக்கக் கூடாது, அப்படிச் செய்தால் அது மக்களின் உணவைப் பறிக்கும் செயலாக அமைந்துவிடும் எனப் பேசினார்.

நிலம் மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து ஏராளமான பொது நல வழக்குகள் வருவதாகக் குறிப்பிட்ட தலைமை நீதிபதி, நிலம் ஒரு பற்றாக்குறையான பொருளாக மாறிவருவதாகவும் வேதனை தெரிவித்தார்.

ஏராளமான காடுகள் அழிக்கப்பட்டுள்ளது என வேதனை தெரிவித்த அவர், சமீபகாலங்களில் வளர்ச்சிக்காக எடுக்கப்பட்ட வன நிலங்களை திரும்ப ஒப்படைத்து, வன வழித்தடங்களை மீண்டும் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பேசினார்.

கண்ணுக்கு தெரியாத வைரஸ் பலரை மரணத்தில் தள்ளியுள்ள நிலையில், நம் மக்கள் இயற்கையோடு வாழக் கற்றுக்கொள்ள வேண்டும், வளர்ச்சி மீது அக்கறை கொள்ளும் அதே நேரத்தில், இயற்கை மற்றும் வனவிலங்குகள் மீதான மாண்பை காண்பித்து, இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

நீதிமன்றம் மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழுக்கள் மூலம் தீர்வை வழங்கும் நீதிபதிகள், சமூகத்தில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உள்ள அதிகாரம் மற்றும் சட்ட உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

நீதிமன்றத்தை திறந்து வைப்பது குறித்து தாம் பெருமைக் கொள்ளும் அதேவேளையில், இத்தகைய கட்டுமானங்கள் மட்டுமே சாமானியர்களுக்கு நீதியை வழங்காது, நீதியை நாடுபவர்களுக்கு உகந்ததாகவும், நாடுபர்கள் அதை அணுகுவதற்கு உகந்ததாக இருக்க வேண்டும், நீதிபதிகளின் அணுகுமுறையும் மாற வேண்டும் என அறிவுறுத்தினார்.

நீதிமன்றங்களில் இன்னும் காலனித்துவ மற்றும் நிலப்பிரபுத்துவ முறையை குறிக்கும் "லார்ட்ஷிப்" என நீதிபதிகளை அழைக்கும் நடைமுறை கைவிடப்பட வேண்டும், வேண்டுமானால் மரியாதை நிமித்தமாக அழைக்கக்கூடிய "சார்" என்று சொன்னாலே போதும் என தன் விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து மாற்றலாகி சென்ற தலைமை நீதிபதி சாஹி இந்தியாவிலேயே சென்னை உயர் நீதிமன்றத்திற்கு தனிப்பெருமை உண்டு, பெருமை மிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்பும், வழக்கறிஞர்களின் சிறப்பான பங்களிப்பையும் மறக்க முடியாது என்று தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் வழிகாட்டியாகவும், சமூக நீதியை பாதுகாக்கும் விதத்திலும் அமைந்துள்ளதை பல சந்தர்ப்பங்களில் பார்த்துள்ளோம், தற்போதைய தலைமை நீதிபதி நீதியின்பாலும், அதை சாமானிய மக்கள் எளிதில் அணுகி நியாயம் கிடைக்கும் வகையில் நீதிமன்றங்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று பேசியதும், நீர்நிலை, வன உயிரினங்கள், உணவு பாதுகாப்பு, விவசாயம் குறித்த அவரது தெளிவான பார்வையும் நீதிமன்றத்தை நாடுபவர்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது.

தான் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றதிலிருந்து பழைய வழக்குகளை, பொது நல வழக்குகளை உடனுக்குடன் விசாரித்து அதை விரைவாக முடித்து வைப்பது குறிப்பிடத்தக்கது. மைலார்டு குறித்து அவர் குறிப்பிட்டு பேசியதும் அனைவரையும் கவர்ந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x