Published : 12 Feb 2021 09:39 AM
Last Updated : 12 Feb 2021 09:39 AM
ஒரு சாலை போடுவதற்கு முதலில் மதிப்பீடு செய்ய வேண்டும், நிதி ஒதுக்க வேண்டும், டெண்டர் விட வேண்டும், இறுதி செய்ய வேண்டும். இந்தப் பணிகளை மேற்கொள்ளவே 6 மாத காலம் ஆகிவிடும். எப்படி ஸ்டாலின் 100 நாளில் மக்களின் பிரச்சனையைத் தீர்க்க முடியும் என முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (11.2.2021) திருப்பூர் மாவட்டம், காங்கேயம் மற்றும் தாரபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதாவது:
“ஜெயலலிதா 2011-ம் ஆண்டு பதவியேற்கும்போது 100-க்கு 32 சதவிகிதம் பேர்தான் உயர்கல்வி பயின்று வந்தார்கள். அவர் எடுத்த நடவடிக்கைகள் மற்றும் இந்த அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாகவும் தற்போது 100-க்கு 49 சதவிகிதம் பேர் உயர்கல்வி பயின்று வருகின்றனர். இன்றைக்கு இந்தியாவிலேயே உயர்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் உயர்ந்திருக்கிறது.
2011-ம் ஆண்டு பதவியேற்கும்போது 100-க்கு 32 சதவிகிதம் பேர்தான் உயர்கல்வி பயின்று வந்தார்கள். ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகள் மற்றும் அதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாகவும் தற்போது 100-க்கு 49 சதவிகிதம் பேர் உயர்கல்வி பயின்று வருகிறார்கள்.
அரசுப் பள்ளிகளில் 41 சதவிகித ஏழை, எளிய மாணவர்கள் படித்து வருகிறார்கள். ஏழை எளிய மாணவர்களும் மருத்துவப் படிப்பைப் பயில வேண்டும் என்பதற்காக அரசு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியுள்ளது. 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டைச் செயல்படுத்திய காரணத்தினாலே இந்த ஆண்டு 435 பேர் மருத்துவம் பயில வழிவகை செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
திமுக ஒரு அராஜக கட்சி, ஓட்டலில் ஓசி பிரியாணி கேட்டு திமுகவினர் சண்டை போடுகிறார்கள். அதற்கு ஸ்டாலின், கட்டப் பஞ்சாயத்து செய்கிறார். திமுக மாவட்ட கவுன்சிலர், பெண்கள் அழகு நிலையத்திற்குச் சென்று ஒரு பெண்ணைத் தாக்குகிறார். திமுக ஒன்றியச் செயலாளர் ஒருவர் ரயிலில் பயணம் செய்யும் கர்ப்பிணிப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றார். ஆட்சியில் இல்லாதபோதே இவ்வளவு அராஜகம் என்றால் ஆட்சிக்கு வந்தால், மக்களை நிம்மதியாக வாழ விடுவார்களா, பெண்களுக்குச் சுதந்திரம் கிடைக்குமா, நீங்களே எண்ணிப் பார்க்க வேண்டும்.
சட்டப்பேரவையிலே எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலகட்டத்திலே நான் சேவல் சின்னத்திலே வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக அமர்ந்திருந்தேன். அந்தக் காலகட்டத்திலே திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சேர்ந்து, ஒரு எதிர்கட்சித் தலைவர் என்றும் பாராமல், ஒரு பெண் என்றும் பாராமல் கடுமையாக ஜெயலலிதாவைத் தாக்கினார்கள் என்றால், ஒரு எதிர்க்கட்சித் தலைவருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாதாரண பெண்களுக்கு எவ்வாறு திமுகவினர் பாதுகாப்பு அளிப்பார்கள்.
ஸ்டாலின் மனு வாங்கும் நிகழ்ச்சியில் திருமலை என்பவர் தனக்கு கறவை மாடு வேண்டும் என்று கேட்கிறார். ஆனால் இவரோ, திருமலை என்ற சகோதரி தனது கணவரைக் காணவில்லை என்று மனு கொடுத்திருக்கிறார் என்று கூறுகிறார். அதற்கு அந்த நபர் இல்லை நான் கறவை மாடு வேண்டும் என்று கேட்டிருக்கின்றேன் என்றார். இவர் கையில் வாங்குகின்ற மனுவிற்கே இந்த நிலைமை என்றால், பெட்டியில் போடுகின்ற மனுவுக்கு என்ன நிலைமை என்று எண்ணிப் பாருங்கள்.
ஒரு சாலை போடுவதற்கு முதலில் மதிப்பீடு செய்ய வேண்டும், நிதி ஒதுக்க வேண்டும், டெண்டர் விட வேண்டும், இறுதி செய்ய வேண்டும் ஆகிய பணிகள் மேற்கொள்ளவே 6 மாத காலம் ஆகிவிடும். எப்படி அவர் 100 நாளில் மக்களின் பிரச்சனையைத் தீர்க்க முடியும்.
இனிமேல் உங்கள் குறைகளை அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று, அதிகாரிகளிடத்தில் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் வீட்டிலிருந்தே உங்கள் செல்போன் மூலம் அரசு அதிகாரிகளுக்கு உங்களது பிரச்சனையைத் தெரிவிக்கலாம். இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அந்தப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இன்னும் 10 நாட்களில் முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்க்கும் மேலாண்மைத் திட்டத்தைத் தொடங்க இருக்கின்றோம். இதற்கான உதவி மையம் எண் 1100. இந்த எண்ணில் உங்கள் பிரச்சினையை எந்தத் துறைக்கு அனுப்பினாலும் அந்தத் துறை தீர்த்து வைக்கும். இது ஒரு விஞ்ஞான உலகம், பெட்டியில் மனு போடுவது அந்தக் காலத்தோடு முடிந்துவிட்டது. குடிநீர் பிரச்சினை, சாலைப் பிரச்சினை உள்ளிட்ட எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுகவில் தலைவர் முதல் தொண்டர் வரை வாயைத் திறந்தாலே பொய்தான். 2000-ல் திமுக ஆட்சியில் 7 பேருக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தில் பொன்முடி, துரைமுருகன், கே.என்.நேரு ஆகியோர் கையெழுத்திட்டனர். அவர்களே இப்போது 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று பச்சைப் பொய் பேசுகிறார்கள்.
அதிமுக, 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென்று, உளப்பூர்வமாக மனசாட்சியோடு எனது தலைமையில் அமைச்சரவையைக் கூட்டி, ஒரு மனதாக அவர்களின் தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பினோம்.
ஸ்டாலின் சொல்கிறார்,10 ஆண்டு காலமாக அதைச் செய்திருக்கலாம் என்று. அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை என்று, 2000-ல் நீங்கள் தீர்மானம் நிறைவேற்றியிருந்தால் 21 வருஷம் அவர்கள் சிறையில் இருக்க வேண்டிய அவசியமே இல்லை.
என்னுடைய அரசாங்கம் குறித்து குறை சொல்ல எந்தத் தகுதியும் திமுகவுக்கும் இல்லை. எதிர்க்கட்சித் தலைவருக்கும் இல்லை. அந்தக் கட்சியில் இருக்கும் தலைவர்களுக்கும் இல்லை”.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT