Published : 22 Nov 2015 01:39 PM
Last Updated : 22 Nov 2015 01:39 PM
பல ஆண்டுகளாக ஆட்களே உள்ளே நுழைய முடியாத அளவுக்கு முட்புதர்களும் மனிதக் கழிவுகளுமாக இருந்த ஊர் பொது மயானம், விவசாயக் கூலி வேலை செய்யும் தனி மனிதரின் முயற்சியால் இன்று பூத்துக் குலுங் கும் பசுஞ்சோலையாக மாறியுள் ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அரங்கூரைச் சேர்ந்தவர் அர்ஜூனன். விவசாய கூலித் தொழி லாளி. இவரது மகன் கடந்த எட் டாண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதன் பின்னணியில் உருவானதுதான் இந்த பசுஞ் சோலை. இதுகுறித்து அர்ஜூனன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
“என் மகன் 17 வயசாக இருந்த போது வெளிநாட்டுக்கு வேலைக் குப் போகணும்னு ஆசைப்பட்டான். அதுக்கு லட்சம் ரூபாய்க்கு மேல செலவாகும்னு தெரிஞ்சது. உடனடி யாக அவ்வளவு பணம் புரட்ட முடியலை. ‘கொஞ்சம் பொறு மையா இருடா பணத்தை புரட்டி அனுப்புறேன்’னு சொன்னேன். ஆனா, அதுக்குள்ள அவசரப்பட்டு அவன் தற்கொலை பண்ணிக்கிட் டான். அழுது புரண்டுட்டு அவனை அடக்கம் செய்யத்தான் அந்த மயானத்துக்கு போனேன். ஆனா, மயானம் இருந்த நிலையை பார்த்து அதிர்ந்து போயிட்டேன். மயானத்துக்குள்ள ஆளுங்களே நுழைய முடியாத அளவுக்கு முட்புதர்கள் முளைச்சுக் கிடந்தது. காலே வைக்க முடியாத அள வுக்கு ஆங்காங்கே மலம் கழிச்சி ருந்தாங்க. அரிவாளால் முட்புதர் களை வெட்டி வழி ஏற்படுத்தி போய்த்தான் மகனை கொண்டுப் போய் புதைச்சேன். என் கால் முழுக்க யானை நெரிஞ்சி முள் ஏறி ஒரே ரத்தம்.
நாளைக்கு இங்கே இன்னொருத் தரை அடக்கம் செய்யறப்ப இந்த நிலையில இருக்கக் கூடாதுன்னு நினைச்சேன். அதேசமயம் மனு ஷங்க நிம்மதியாக உறங்குற ஒரே இடம் மயானம் மட்டும்தான். அது சுத்தமாக பசுஞ்சோலையாக இருக்கிறதுதான் நியாயம். தவிர, என் மகன் இறந்த சோகத்தைப் போக்க ஒரு வடிகாலும் தேவைப் பட்டுச்சு. உடனடியாக ஊர் பெரிய வர்களிடம் அந்த மயானத்தை சரி செஞ்சு சோலையாக மாத்த அனுமதி கேட்டேன். அவங்களும் தயக்கத்துடன் அனுமதி கொடுத் தாங்க.
உடனே களத்துல இறங்கினேன். கூலி ஆளுங்களை வெச்சு மொத்த முள்ளுப் புதர்களையும் வெட்டி எடுத்தோம். கல்லறைகளை தொந் தரவு செய்யாம மண்ணை உழவு செய்து, இயற்கை உரம் போட்டு சில நாட்கள் ஊறப்போட்டேன். பக்கத்து தனியார் தோட்டத்திலிருந்து பைப் லைன் கொண்டு வந்து தண்ணீர் பாய்ச்சினேன். 31 தென்னைக் கன் னுகளை மயானத்தை சுத்தி வரிசை யாக நட்டேன். இதுதவிர, நாவல், சப்போட்டா, பலா, மாதுளை, சீத்தா, கொய்யா, சாத்துக்குடி, மாமரம், எலுமிச்சை, நெல்லி, தேக்கு, செம்மரம், மருத மரம், வேம்பு இதுல எல்லாம் தலா ரெண்டு, மூணு செடின்னு மொத்தம் 60 மரக்கன்னுகளை நட்டேன். மூலிகைச் செடிகள், பூச்செடிகள்னு 100 செடிகளை நட்டேன். ஒரே மழைதான் பெஞ்சது. எல்லா செடிகளும் வேர் பிடிச்சி, நல்லா வளர ஆரம்பிச்சிடுச்சு.
தென்னை மரத்துல பூப்பூத்து முதல் பாளை விடறப்ப விவசாயிங்க பொங்கல் வெச்சு கும்பிடுவாங்க. நான் வெச்ச தென்னை மரங்களும் முதல் பாளை முளைச்சது. மத்த மரம் செடி கொடிகளும் நல்லா வளர்ந்து அந்த மயானமே பெரிய பசுஞ்சோலையாக மாறியிருந்தது. எனக்கு சந்தோஷம் தாங்கலை. ஊரைக் கூட்டி மயானத்துலயே பொங்கல் வெச்சு, எல்லோருக்கும் கறி விருந்து போட்டேன். ஊர்க் காரங்களுக்கு ரொம்ப சந்தோஷம். எல்லோரும் சேர்ந்து அரைப் பவுன் மோதிரம் போட்டு மயானத்துலேயே எனக்கு மரியாதை செஞ்சாங்க.
என் மகன் இறந்து எட்டு வருஷ மாச்சு. அவன் இல்லைன்னாலும் இங்கிருக்க ஒவ்வொரு மரம், செடி, கொடிகள்லேயும் பூப்பூத்து சிரிக்கிறான். ஊர்க்காரர்களும் பொழுதைப் போக்க இங்கே வந்து ரசிக்கிறாங்க. இங்கே விளையுறது பழங்கள், பூக்கள் எல்லாம் ஊருக்குதான் சொந்தம்.
நான் வேலைக்கு போய் தினமும் சம்பாதிக்கிறதை இந்தத் தோட்டதுக்கு செலவிடறேன். தனியார் தோட்டத்து தண்ணீர் என்பதால் மின்சாரத்துக்கும் சேர்த்து ஒருநாளைக்கு 500 ரூபாய் வரைக்கும் ஆகுது. வயசாகிட்டே போகுது.
அரசாங்கத்துக்கிட்டே ரெண்டே கோரிக்கை வைக்கிறேன். இப்போது இருக்கிற சுற்றுச்சுவரில் 30 அடி தூரத்துக்கு சுவர் கட்டாம பாதியில வேலை நிக்குது. ஆடு, மாடுங்க உள்ளே புகுந்து செடிகளை கடிச்சிடுதுங்க. சுற்றுச்சுவரைக் கட்டி, தண்ணீருக்காக ஒரு பைப் லைன் போட்டுக் கொடுத்தா நல்லாயிருக்கும்.” என்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT