Published : 12 Feb 2021 03:16 AM
Last Updated : 12 Feb 2021 03:16 AM

திமுக கூட்டணி எந்த நேரத்திலும் உடையலாம்! - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சிறப்பு பேட்டி

சென்னை கோயம்பேடு - மதுரவாயல் சாலையில் மெட்ரோ ரயில் அலுவலகம் எதிரில் தேர்தல் அலுவலகத்தை பாஜக அமைத்துள்ளது. நேற்று காலை வேத மந்திரங்கள் முழங்க தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. தேசியப் பொதுச் செயலாளர் சி.டி.ரவி, மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக தலைவர் எல்.முருகன், குஷ்பு, முன்னாள் எம்.பி. கே.பி. ராமலிங்கம் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். படம்: பு.க.பிரவீன்

திமுகவை ஆட்சிக்கு வர விடாமல் தடுப்பது ஒன்றே பாஜகவின் இலக்கு என்றும், திமுக கூட்டணி எந்த நேரத்திலும் உடையலாம் எனவும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ‘இந்து தமிழ் திசை' நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:

ஜனசங்கமாக இருந்தது முதல் தமிழகத்தில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் பாஜக போட்டியிட்டு வருகிறது. ஆனாலும், தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியவில்லையே?

தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியவில்லை என்ற வாதமே தவறானது. 1984-ல் ‘இந்து முன்னணி' சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் வென்றார். 1996-ல் திமுக - தமாகா கூட்டணி தமிழகம்முழுவதும் 99 சதவீத இடங்களில் வென்றபோதும், பத்மநாபபுரம் தொகுதியில் பாஜக சார்பில் சி.வேலாயுதன் வெற்றிபெற்றார். அப்போதே தமிழகத்தில் பாஜக காலூன்றிவிட்டது. அதனால்தான் 1998-ல் அதிமுகவும், 1999-ல் திமுகவும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க முன்வந்தன.

தமிழகத்தில் பாஜக காலூன்றி விட்டது என்கிறீர்கள். ஆனால், இதுவரை பாஜக 3 சதவீத வாக்குகளை தாண்டவில்லையே?

தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் கட்சி பாஜக. கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 30-க்கும்அதிகமான தொகுதிகளில் 2-வது இடத்தையும், 3-வது இடத்தையும் பெற்றோம். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களைப் பிடித்துள்ளோம். 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி 19 சதவீத வாக்குகளையும், 2 எம்.பி. இடங்களையும் பெற்றது. இவையெல்லாம் பாஜக வளர்ந்து வருவதையே காட்டுகிறது.

இப்போது பாஜகவில் பலரும் ஆர்வமுடன் இணைந்து வருகின்றனர். 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பாஜகவின் இலக்கு அல்ல. இந்தத் தேர்தலில்திமுக ஆட்சிக்கு வராமல் தடுப்பது ஒன்றே பாஜகவின் இலக்கு. தமிழகத்தைப் போலவே மேற்கு வங்கத்திலும் பாஜக இருந்தது. இப்போது அங்கு ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் இருக்கிறோம். ரவீந்திரநாத் தாகூரின் வங்கத்தை வெல்வதுபோல, சுப்பிரமணிய பாரதியாரின் தமிழகத்தையும் பாஜக வெல்லும்.

2019 முதல் கூட்டணியில் இருந்தாலும் அதிமுக – பாஜக இடையே இணக்கம் இல்லையே? பாஜகவின் வேல் யாத்திரையை கூட அதிமுக அரசு அனுமதிக்கவில்லையே?

அதிமுக – பாஜக இடையே நல்ல இணக்கமாக உறவு உள்ளது. எங்களுக்கு இடையே எந்த மோதலும் இல்லை. எங்கள் கூட்டணி மிக வலுவாகவே உள்ளது. கரோனாவைக் காரணம் காட்டி அதிமுக அரசுதான் வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்தது. பிறகு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தது. வேல் யாத்திரையை அதிமுக எதிர்க்கவில்லை. அதிமுக - பாஜக கூட்டணியை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவும், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் உறுதிப்படுத்தியுள்ளனர். எனவே, இதுதொடர்பாக யாருக்கும், எந்த சந்தேகமும் வேண்டாம்.

திமுக கூட்டணி 10 கட்சிகளுடன் உறுதியாக உள்ளது. ஆனால், அதிமுக கூட்டணி இன்னமும் இறுதி செய்யப்படவில்லையே? பாமக, தேமுதிக கட்சிகள் கூட்டணியில் தொடருமா?

அதிமுக – பாஜக கூட்டணியில் பாமக, தேமுதிக தொடரும். அதற்கான பேச்சு நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி இன்னும் உறுதியாகவில்லை. மதிமுக, விசிக உள்ளிட்ட சில கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக வற்புறுத்தி வருகிறது. திமுக கூட்டணியில் உள்ள பல கட்சிகள் கடும் அதிருப்தியில் உள்ளன. இதனால் எந்த நேரத்திலும், அதாவது தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாகவே திமுக கூட்டணி உடையலாம். ஆனால், அதிமுக – பாஜக கூட்டணி வலுவாக உள்ளது. வரும் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிப்பது உறுதி.

ராகுல் தமிழகத்தில் தீவிர பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அவரது பிரச்சாரம் பாஜகவுக்கு சவாலாக இருக்குமா?

தமிழகத்தில் செய்ததுபோன்ற பாணியில் ஏற்கெனவே உத்தரப்பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் ராகுல் காந்தி மேற்கொண்ட பிரச்சாரம் எடுபடவில்லை. ராகுல் காந்தி பிரச்சாரத்தால் காங்கிரஸுக்கு லாபத்தைவிட நஷ்டமே அதிகம் என்று அவரது கட்சியினரே பேசும் நிலைதான் இருக்கிறது. 3 நாட்கள் தமிழகத்தில் பல கூட்டங்களில் பேசிய ராகுல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக்குங்கள் என்று மக்களிடம் கேட்கவில்லை. கடைசி நாளில் ஊடகத்தினரிடம், "ஸ்டாலினை முதல்வராக ஏற்கிறோம்" என்பதோடு முடித்துக் கொண்டார். இதனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடருமா என்பதே சந்தேகமாக உள்ளது. அதனால்தான் திமுக கூட்டணி எந்த நேரத்திலும் உடையலாம் என்று கூருகிறேன்.

சசிகலா வருகையா அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் கூட்டணியின் வெற்றியை பாதிக்காதா?

நாட்டுக்கு எதிரான, நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான, இந்து மதத்துக்கு எதிரான, ஊழல்மயமான திமுக,வரும் தேர்தலில் ஆட்சிக்கு வராமல் தடுப்பது ஒன்றுதான் எங்களுக்கு ஒரே நோக்கம். அதற்காகத்தான் பெரிய கூட்டணியை அமைத்துள்ளோம். திமுகதான் எங்களின் பொது எதிரி என்று அதிமுகவும் கூறுகிறது.சசிகலாவும் கூறுகிறார். எனவே, பொது எதிரியான திமுகவை வீழ்த்த அனைவரும் உறுதியாக இருப்பதால் அதிமுக கூட்டணியின் வெற்றி பாதிக்காது. தனது நிலைப்பாட்டை சசிகலா இதுவரை அறிவிக்கவில்லை. சசிகலா விவகாரத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சு தொடங்கி விட்டதா? பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும்?

தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து இன்னும் பேசவில்லை. எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்பதைவிட, எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுகிறோம் என்பதுதான் எங்களுக்கு முக்கியம். சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர்கள் இரட்டை இலக்கத்தில் இருப்பார்கள். அதற்கான பணிகளைதான் செய்து வருகிறோம்.

2019 போல வரும் பேரவைத் தேர்தலிலும் மோடி எதிர்ப்பலை பாஜக கூட்டணியை வீழ்த்தும் என்று திமுக கூட்டணியினர் கூறுகிறார்களே?

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது காங்கிரஸ் அரசு. தடையை நீக்கியது மோடி அரசு. இதனை தமிழக மக்கள் உணர்ந்து கொண்டதால்தான், 2019 மக்களவைத் தேர்தலில் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற திமுகவால், அடுத்த சில மாதங்களில் நடைபெற்ற வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் வெறும் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெல்ல முடிந்தது. மோடி அரசின் திட்டங்களால் தமிழகம்தான் அதிகம் பலன்பெற்றுள்ளது. இதனை மக்கள் உணர்ந்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரச்சாரம் எடுபடாது.

தமிழை புறக்கணித்து இந்தி, சம்ஸ்கிருதத்தை திணிக்கிறது. இட ஒதுக்கீட்டு எதிரான கட்சி என்றெல்லாம் பாஜக மீது குற்றம்சாட்டப்படுகிறதே?

இது காலம் காலமாக செய்யப்படும் அவதூறு பிரச்சாரம். பாஜக இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான கட்சி. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு சட்ட அந்தஸ்து அளித்தது மோடி அரசுதான். வெளிநாடுகளில் பேசும்போது கூட தமிழின் பெருமைகளையும், திருவள்ளுவர், பாரதியாரை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேசுகிறார். நீட், ஜே.இஇ. போன்ற தேசிய அளவில் நடக்கும் தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளோம். திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கு காலையில் எழுந்ததும் பாஜகவை குறை சொல்லாவிட்டால் தூக்கம் வராது. அதனால்தான் அனைத்தையும் குறை சொல்கிறார்கள்.

நீங்கள் வரும் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவீர்களா? பொதுத் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதா?

கட்சி மேலிடம் உத்தரவிட்டால் பொது தொகுதியில்கூட போட்டியிட தயார். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x