Published : 12 Feb 2021 03:16 AM
Last Updated : 12 Feb 2021 03:16 AM
சிசிகலா பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையானதில் இருந்து அதிமுக அமைச்சர்களில் சிலரைத் தவிர, மற்ற அனைவரும் சசிகலா பற்றிய கேள்விகளை தவிர்த்து வருகின்றனர்.
மதுரையில் பள்ளி விழாவில் கலந்து கொண்ட கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூவிடம் செய்தியாளர்கள், “சில அமைச்சர்களைத் தவிர சசிகலா குறித்தான கேள்விகளுக்குப் பதில் அளிக்க மறுப்பது ஏன்?” என்று கேட்டபோது, “கோபமாக இது அரசு நிகழ்ச்சி. அரசு சம்பந்தப்பட்ட கேள்விகளை மட்டுமே கேளுங்கள்” என்று கூறினார். அதேநேரத்தில் ஸ்டாலின் பற்றிய கேள்விகளுக்கு மட்டும் தொடர்ந்து அமைச்சர் பதில் அளித்தார்.
அதேபோல, பழநியில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்பி. உதயகுமாரும் சசிகலா பற்றிய கேள்விகளுக்குப் பதில் அளிப்பதைத் தவிர்த்தார். அமைச்சர்களின் இந்த மவுனம், நழுவலின் பின்னணியில் எதுவும் இருக்கிறதா? என்ற கேள்வி தமிழக அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.
தென் மாவட்ட அமைச்சர்களைப் பொறுத்தவரையில் அதிமுகவில் முதல்வர் பழனிசாமியை தங்கள் தீவிர ஆதரவாளர்களாகக் காட்டிக்கொண்டாலும் அவர்கள் இதுவரை மறந்தும்கூட சசிகலாவை பற்றி விமர்சனம் செய்யவில்லை.
தற்போது போலவே முன்பும், சசிகலா பற்றிய கேள்விகளுக்கு தென்மாவட்ட அமைச்சர்கள் பதில் அளிக்காமல் தவிர்த்து வந்தனர். ஆனால், அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ராஜேந்திர பாலாஜி போன்றவர்கள் சசிகலா பற்றிய கேள்விகளை எதிர்கொண்டாலும் அவரை விமர்சனம் செய்யாமல் பவ்யமாகவே பதில் அளித்து வந்துள்ளனர்.
சசிகலா சிறைக்கு சென்ற சமயத்தில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, ‘சசிகலா எப்போதுமேஎங்களுக்கு சின்னம்மாதான், ஜெயலலிதாவுடன் 40 ஆண்டு காலம் உடனிருந்தவர் ’ என்றுசசிகலாவை பெருமையாகவே கூறி வந்தார்.
சசிகலா தற்போது சிறையில் இருந்து விடுதலையான நிலையில் செல்லூர் கே.ராஜூ கூட, சசிகலா பற்றிய கேள்விகளை தவிர்க்கிறார். அமைச்சர்களின் இந்த மவுன நிலையை அமமுகவினர் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், நிர்வாகிகள் பலர், எங்கள் பக்கம் விரைவில் வருவார்கள், அதிமுகவைக் கைப்பற்றுவோம் என்று கூறி வருகின்றனர்.
அதிமுகவினரிடம் விசாரித்தால், ‘‘சசிகலா பற்றி யாரும் கருத்துகள் தெரிவிக்க வேண்டாம், அதற்குப் பதில் அளிக்க குறிப்பிட்ட அமைச்சர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது, அவர்கள் கூறுவார்கள் என்று கட்சித் தலைமை தெரிவித்துள்ளது’’ என்று கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT