Last Updated : 18 Nov, 2015 10:36 AM

 

Published : 18 Nov 2015 10:36 AM
Last Updated : 18 Nov 2015 10:36 AM

மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து கடலுக்கு செல்லும் தண்ணீரை பாசனத்துக்கு திருப்பலாம்: மன்னார்குடி ரங்கநாதன் யோசனை

ஒருபுறம் வெள்ளம், மறுபுறம் வறட்சி என மாறுபட்ட சூழ்நிலை களால் இந்திய துணைக்கண்டம் தொடர்ச்சியான பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பே நாடு முழுவதும் உள்ள பெரிய நதிகளை இணைப்பதன் மூலம் இந்தியாவை வளம்மிக்க நாடாக மாற்ற முடியும் என்றார் ஆங்கிலேய பொறியாளர் சர் ஆர்தர் தாமஸ் காட்டன். நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வரும் இந்தத் திட்டம் நனவாகுமா அல்லது வெறும் கனவாகவே முடிந்து விடுமா என்று பலரும் கருதுகின்றனர்.

இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளி லிருந்து கடலை நோக்கிச் செல்லும் தண்ணீரை பாசனத்துக்கு திருப்ப லாம் என்கிறார் தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விளைபொருள் விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளரான மன்னார்குடி எஸ்.ரங்கநாதன். அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:

நதிநீர் இணைப்புத் திட்டம் குறித்து நீண்டகாலமாக பேசி வருகிறார்கள். நதிகளை இணைப்பது சாத்தியம்தானா?

இந்தியாவின் மேற்குப் பகுதிகள் முழுவதும் மலைகளாகவும், கிழக்குப் பகுதி நெடுகிலும் சமவெளி களாகவும் உள்ளன. ஆக, நாட்டின் மிகப் பெரும்பாலான பகுதி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சரிவாக உள்ள நிலையில் கங்கை - காவிரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவது என்பது மிகவும் கடினமானது.

கங்கை - காவிரி இணைப்பு என்பது, நீண்டகாலமாக விவாதிக்கப்படும் ஒரு திட்டம். இது சாத்தியமற்றது என்று எப்படி கூறுகிறீர்கள்?

ஏற்கெனவே முன்வைக்கப்படும் திட்டங்களின்படி கங்கை நதிநீரை தென்னகத்துடன் இணைக்க வேண்டுமானால், குறுக்கேயுள்ள விந்திய மலைத் தொடர்களை கடந் தாக வேண்டும். அது எளிதானது அல்ல. அதனால்தான் கங்கை - காவிரி இணைப்பு என்பது எளிதா னது அல்ல என்று கூறுகிறேன்.

அப்படியென்றால் நதிநீர் இணைப்பு திட்டமே சாத்தியமில்லாததா?

நான் அப்படிக் கூறவில்லை. இந்தியா முழுவதும் வடக்கு முதல் தெற்கு வரை உள்ள பெரிய நதி களை இணைப்பது சாத்தியமற்றது என்றுதான் கூறுகிறேன். அதே நேரத்தில் தென்னக நதிகள் இணைப்பு என்பது சாத்தியமானதே.

தென்னக நதிகளை எவ்வாறு இணைக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள்?

விஜயவாடா ஏற்கெனவே நீர்வளம் மிகுந்த பகுதி. ஆகவே, கோதாவரி - கிருஷ்ணா இணைப்பை விஜயவாடா பகுதி யில் மேற்கொள்வதால் பய னில்லை. மாறாக ஹைதராபாத் போன்ற வறண்ட பகுதிகள் வழியாக இணைத்தால் ஆந்திரம், தெலுங்கானா மாநிலங்களின் வறண்ட பகுதிகள் பாசன வசதி பெறும். அதன்பிறகு பெண்ணாறு, பாலாறு, காவிரியுடன் இணைக்கப் பட வேண்டும். அவ்வாறு செய்தால் தமிழகத்துக்கும் பெரும் பயன் கிடைக்கும். இது சாத்தியமானதே.

தமிழகத்துக்கு பயன் தரும் வேறு திட்டங்கள் ஏதாவது உள்ளதா?

ஆண்டுக்கு 200 டிஎம்சி தண்ணீர் கேட்டு கர்நாடகத்துடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால், கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்யும் மழையால் ஆண்டுக்கு 4 ஆயிரம் டிஎம்சி தண்ணீர் வீணாக கடலுக்குச் செல்கிறது. மலையைச் சுற்றிலும் தடுப்புகளை உருவாக்கி, மலையி லிருந்து கடலை நோக்கி உருண் டோடும் தண்ணீரை தேக்க முடியும். மேற்குத் தொடர்ச்சி மலையைச் சுற்றி தடுப்புகளை ஏற்படுத்தினால் புதிய கால்வாய் உருவாகும். நதிகளை இணைக்காமலே, புதிய நீராதாரங்களை உருவாக்க முடியும். இதனால் புதிய பாசனப் பகுதிகள், புதிய நீர்மின் திட்டங்கள் என பல வளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

இந்தத் திட்டத்துக்கு 3 மாநிலங்களும் ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லவா?

இப்படி ஒரு திட்டத்தை செயல் படுத்தினால் ஏற்கெனவே உள்ள மாநிலங்களின் நதிநீர் பங்கீடு எதுவும் பாதிக்கப்படமாட்டாது. இத்திட்டத்தால் தமிழகம், கர்நாட கம், கேரளம் ஆகிய 3 மாநிலங்களுக் குமே அதிக பயன்கள் கிடைக்கும்.

நீங்கள் கூறும் இந்தத் திட்டம் பெரும் மலைப்பாக உள்ளது. இது சாத்தியமா?

நிச்சயமாக சாத்தியம்தான். அரசியல் லாபத்தை ஒதுக்கிவிட்டு, மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்த வேண்டும். கர்நாடக மாநிலத்துக்கான ஆலோசகராக செயல்பட்ட மத்திய நீர்வளத் துறையின் முன்னாள் தலைமைப் பொறியாளர் பி.எஸ்.பவானிசங்கர், மேற்கே கடலை நோக்கி செல்லும் நீரை திருப்ப நடவடிக்கை மேற் கொண்டால், தமிழகம், ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களு டன் கர்நாடக மாநிலத்துக்கு இருந்து வரும் நதிநீர் பிரச் சினைகள் முடிவுக்கு வரும் என்று கூறியுள்ளார். ஆக, இதுபோன்ற திட்டங்கள் நிச்சயம் சாத்தியம்தான். திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசியல் துணிவு மட்டுமே தேவை.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x