Published : 12 Feb 2021 03:17 AM
Last Updated : 12 Feb 2021 03:17 AM

வேளாண் சட்டங்களுக்கு வரவேற்பு தெரிவித்து விவசாயிகளை வஞ்சிக்கும் விவசாயி முதல்வர் பழனிசாமி: கனிமொழி எம்.பி. விமர்சனம்

திருப்பூர்

வேளாண் சட்டங்களுக்கு வரவேற்பு தெரிவித்து விவசாயிகளை வஞ்சிப்பவர்தான் விவசாயி முதல்வர் பழனிசாமி என்று, திமுக நாடாளுமன்றக் குழு துணைத் தலைவரும், கட்சியின் மகளிரணி செயலாளருமான கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

திருப்பூர் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட அவிநாசி, பல்லடம் ஆகிய சட்டப்பேரைவைத் தொகுதிகளின் கீழ் வரும் அன்னூர், பொகளூர், சேவூர், தத்தனூர், கருவலூர், திருமுருகன்பூண்டி, முருகம்பாளையம், ஆண்டிபாளையம், இச்சிப்பட்டி, காரணம்பேட்டை, பல்லடம், கள்ளிபாளையம் ஆகிய பகுதிகளில் கட்சியினர், விவசாயிகள், தொழில்துறையினர், நெசவாளர்கள், இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் கலந்துரையாடல் மற்றும் பிரச்சாரத்தில் கனிமொழி எம்.பி. நேற்று ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

தமிழகத்தில் நடைபெற்றுவரும் ஆட்சி யாருக்கும் பயனில்லாதது. முதல்வரான கே.பழனிசாமிக்கு, குடிமராமத்து நாயகன் என்ற பட்டத்தை அக்கட்சியினர் அளித்துள்ளனர். அவர்கள் உண்மையில் குடிமராமத்து செய்தது காகிதத்தில் மட்டுமே.வேறு எங்கும் குடிமராமத்து நடைபெறவில்லை. நீர்நிலைகள், நீர்வழித்தடங்கள் அனைத்தும் மேடுதட்டியே உள்ளன. தான் பார்க்கும் இடங்கள் எல்லாம் பசுமையாக இருப்பதாக முதல்வர் கூறுகிறார். உண்மையில், அது விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி கண்ணீரை வரவழைத்த பசுமையே ஆகும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதிமுக அரசு செய்தது என்ன? திமுக செய்வதாக அறிவிப்பதை (விவசாயக் கடன் தள்ளுபடி...) உட்பட அனைத்தையும் செய்துவிடுகிறார்கள்.

கடந்த 10 ஆண்டுகளில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைகூட உருவாக்கி தரவில்லை. நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை. நியாயவிலைக் கடைகள், அதிமுக ஆட்சியில் அநியாயவிலைக் கடைகளாக மாறிவிட்டன. இத்தகைய ஆட்சி தமிழகத்துக்கு தேவையா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

தேர்தல் வந்தால் சாதனைகளை கூறி பிரச்சாரம் செய்ய வேண்டும். ஆனால், மக்களிடம் எதைக் கூறி முதல்வர் பிரச்சாரம் செய்வார் என்று தெரியவில்லை. ஆட்சியில் இருப்பது மட்டுமே அதிமுகவினர் செய்த சாதனை. ஆட்சியை காக்க, தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் மத்திய அரசின் காலடியில் வைத்துவிட்டனர். தமிழகத்தின் உரிமை, அடையாளம் அனைத்தையும் டெல்லியில் அடகுவைத்து ஆட்சி நடத்துகின்றனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராடிவரும் நிலையில், அவற்றுக்கு வரவேற்பு தெரிவித்து விவசாயிகளை வஞ்சிக்கும் விவசாயி முதல்வர் பழனிசாமி. இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் நாள் வந்துவிட்டது. மக்களுக்கான உரிமைகளை பெற்றுத்தர திமுக ஆட்சிக்கு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பட விளக்கம்

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த தத்தனூர் பகுதியில் விவசாயிகள், பொதுமக்களை சந்தித்து பேசிய கனிமொழி எம்.பி. (அடுத்த படம்) மக்களோடு மக்களாக அமர்ந்து குறைகளை கேட்டறிந்த கனிமொழி எம்.பி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x