Last Updated : 11 Feb, 2021 10:23 PM

5  

Published : 11 Feb 2021 10:23 PM
Last Updated : 11 Feb 2021 10:23 PM

அதிமுக - சசிகலா பிரச்சினையில் பாஜகவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை: இல.கணேசன் கருத்து

தூத்துக்குடி

அதிமுக - சசிகலா இடையேயான பிரச்சினையில் பாஜகவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் பாஜக சார்பில் சமுதாயத் தலைவர்கள், பெண்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினருடன் கலந்துரையாடல் மற்றும் கட்சியின் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் பாஜக மூத்த தலைவரான முன்னாள் மாநிலத் தலைவர் இல.கணேசன் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

தமிழக பாஜக கட்சி தனது தேர்தல் பிரசாரத்தை முறைப்படி இன்று (பிப்.11) தொடங்கியுள்ளது. மேலும், தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக தனியாக ஒரு அலுவலகத்தையும் பாஜக திறந்துள்ளது.

ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதி வாரியாக ஆய்வுக் கூட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளன. எனக்கு 14 சட்டப்பேரவை தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் முதல் தொகுதியாக தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் ஆலோசனை நடத்தியுள்ளேன். அடுத்ததாக நாங்குநேரி தொகுதிக்கு செல்கிறேன்.

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி வரவேண்டும் என்பது தான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசை. அதுபோல அதிமுக - பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.

அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் யார், யார் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது, எந்தத் தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து பின்னர் பேசி முடிவு செய்யப்படும். அதற்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன.

சசிகலா விவகாரம் அதிமுகவின் பிரச்சினை. சசிகலா சிறையில் இருந்து வந்த போது பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதை வைத்து தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அனைவரும் வரவேற்றார்கள் என்று எடுத்துக் கொள்ள முடியாது. அதிமுக- சசிகலா பிரச்சினையில் பாஜகவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. இது இருவருக்கும் இடையிலான பிரச்சினை. அவர்கள் இருவரும் விரும்பினால் சேர்ந்து கொள்ளலாம். எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது தான் எனது அபிப்பிராயம்.

ஆனால், அதில் சில பிரச்சினைகள் இருப்பதாக அதிமுக தரப்பில் கூறுகின்றனர். சசிகலாவின் குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேரும் ஆளுகைக்கு வந்து விடுவார்கள் என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது.

குடும்ப ஆட்சி என்ற முத்திரை அதிமுக மீது குத்தப்பட்டுவிடும். அதனை அதிமுக விரும்பவில்லை. இப்படி பல பிரச்சினை இருக்கிறது. இதனை தீர்த்து வைப்பது பொருத்தமல்லை. அதனை நாங்கள் செய்யவும் இல்லை. அவர்கள் எங்களை அணுகவும் இல்லை.

சசிகலாவின் பலம் என்ன, இதனால் எந்தளவுக்கு அதிமுகவுக்கு பாதிப்பு வரும் என்றெல்லாம் யோசிக்க வேண்டிய கட்சி அதிமுக தான். இந்த பிரச்சினையை அவர்கள் தான் சரி செய்ய வேண்டும். சரி செய்து கொண்டிருக்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக ஆட்சி கவிழ்க்க பல்வேறு முயற்சிகள் நடந்தும்கூட கவிழாமல் நிலையாக இருந்து தேர்தல் வரை ஆட்சியை கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது பாராட்டக்கூடிய விசயம்.

அந்தளவுக்கு கட்சியில் ஒற்றுமையை காப்பாற்றி ஆட்சியை முதல்வர் பழனிச்சாமி காப்பாற்றியிருக்கிறார். இதனால் மக்களுக்கு அவர் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

அதிமுக பாஜகவோடு கூட்டணி சேர்ந்திருப்பதால் பிரதமர் மோடி நாடு முழுவதும் மக்களுக்கு செய்து வரும் நன்மைகள் மற்றும் கூட்டணி பலம் நிச்சயம் வெற்றியை தரும். இந்த கூட்டணி வென்று ஆட்சியை நிச்சயம் பிடிப்போம். அதிமுக ஆட்சி தமிழகத்தில் தொடரும்.

கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட திமுக தற்போது வேல் வாங்குவது, ஆதிபராசக்தி கோயிலுக்குச் செல்வது மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தாது. திமுகவை மக்கள் நம்ப மாட்டார்கள். நிறைய தவறுகள் செய்துவிட்டு ஒரு நாளில் பாவ மன்னிப்பு கொடுக்கும் மதம் அல்ல இந்து மதம் என்றார் அவர்.

கூட்டத்தில் பாஜக தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ், முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா, மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், தொழில் பிரிவு மாவட்ட தலைவர் பொன்குமரன், ஓபிசி அணி மாநில செயலாளர் விவேகம் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x