Published : 11 Feb 2021 07:46 PM
Last Updated : 11 Feb 2021 07:46 PM

ஓசூர் அருகே ரூ.20 லட்சம் சொந்த செலவில் சாலை அமைத்த ஊராட்சிமன்றத் தலைவி: கிராம மக்கள் நெகிழ்ச்சி

ஓசூர் ஒன்றியம் பொம்மசந்திரம் கிராமத்திற்குச் செல்லப் போடப்பட்டுள்ள புதிய சாலை | படங்கள்: ஜோதி ரவிசுகுமார்.

ஓசூர்

ஓசூர் ஒன்றியம் கோபனப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட பொம்மசந்திரம் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி கேட்டுப் போராடி வந்த கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நனவாக்கும் வகையில் தனது சொந்த செலவில் சாலை அமைத்துக் கொடுத்த ஊராட்சி மன்ற தலைவர் கீதா சங்கரைக் கிராம மக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டினர்.

ஓசூர் - தேன்கனிக்கோட்டை சாலையில் நாகொண்டப்பள்ளி கிராமத்தை அடுத்து கோபனப்பள்ளி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சிக்குச் செல்லும் சாலையில் பொம்மசந்திரம் கிராமம் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகள் பழமையான இந்த கிராமத்தில் இடையில் குடிநீர், சாலை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் தங்களுடைய சொந்த வீடு மற்றும் நிலங்களை விட்டு வேறு கிராமங்களுக்கு இடம்பெயர்ந்து வசித்து வந்துள்ளனர்.

இதனால் நாளடைவில் இந்த கிராமத்தில் மக்கள் வசித்து வந்ததற்கான அடையாளம் இன்றி, இடிந்து விழுந்த வீடுகளின் சுவர்கள் மட்டுமே இருந்ததாகவும், ஊர்ப் பெயர் கூட வழக்கத்தில் இருந்து மறைந்து விட்டதாகவும், பின்பு நிலப்பத்திரங்களை பார்த்துத்தான் இந்த ஊருக்கு மீண்டும் பொம்மசந்திரம் என்ற பெயர்ப் பலகை வைக்கப்பட்டதாகவும் இங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாகத்தான் இங்கு மீண்டும் மக்கள் வீடுகட்டி வசிக்கத் தொடங்கி உள்ளனர். தற்போது 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. பொம்மச்நதிரம் கிராமத்துக்குச் சாலை வசதி கோரி 10 ஆண்டுகளுக்கும் மேலாக இங்குள்ள கிராம மக்கள் போராடி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவராக போட்டியிட்ட கீதா சங்கர், தேர்தலில் வெற்றி பெற்றால் பொம்மசந்திரம் கிராமத்துக்குச் சாலை வசதி செய்து கொடுப்பதாக உறுதியளித்திருந்தார். அதைத் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்ற கீதா சங்கர் தான் கிராம மக்களுக்கு வாக்குக் கொடுத்தபடி பொம்மசந்திரம் கிராமத்துக்கு தனது சொந்த செலவில் 1 கி.மீ. தொலைவுக்கு சாலை வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

பொம்மசந்திரம் கிராமத்துக்கு சாலை அமைக்கும் பணியில், இடையே ஒரு கி.மீ. தொலைவுக்குப் பட்டா நிலம் இடையூறாக இருந்ததால் சாலை அமைப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சாலை அமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ஊராட்சி மன்றத் தலைவர் கீதா சங்கர் ரூ.20 லட்சம் சொந்த பணத்தில் சாலைக்குத் தேவையான நிலத்தை வாங்கி சாலை அமைக்கப் பெரும் முயற்சி மேற்கொண்டார். அதன்படி பொம்மசந்திரம் கிராமத்துக்குச் சாலை அமைக்க நிலம் வாங்கப்பட்டு 1 கி.மீ. தொலைவுக்கு மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் சமயத்தில் வாக்குறுதி அளித்தபடி புதிய சாலை அமைத்துக்கொடுத்த ஊராட்சி மன்றத் தலைவர் கீதா சங்கரைக் கிராம மக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டினர்.

இதுகுறித்து பொம்மசந்திரம் கிராமத்தில் வசிக்கும் ராமலட்சுமி (54) என்பவர் கூறும்போது, ''முன்பு பொம்மசந்திரம் கிராமத்து மக்கள் சென்று வர ஒற்றையடிப் பாதை மட்டுமே இருந்தது. உடல் நலமில்லாத நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கூட இந்த கிராமத்துக்குள் வர முடியாது. ஒரு கிலோமீட்டர் தூரத்துக்குத் தூக்கிச் சென்றுதான் ஆம்புலன்ஸில் கொண்டு செல்ல முடியும்.

சாலை முகப்பில் கிராம மக்கள்

எந்த வண்டியும் எங்கள் ஊருக்குள் வராததால் மிகவும் சிரமப்பட்டு வந்தோம். தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவருக்குப் போட்டியிட்ட கீதா சங்கரிடம், சாலை வசதி, மின்விளக்கு வசதி , குடிநீர் வசதி மற்றும் கோயில் கட்டி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம்.

அவரும் செய்து கொடுப்பதாகக் கூறியிருந்தார். வெற்றி பெற்ற பிறகு முதலில் கிராமத்துக்கு மின்விளக்கு வசதி செய்து கொடுத்தார். பின்பு கால்நடைகளுக்காகத் தண்ணீர்த் தொட்டி கட்டிக் கொடுத்தார். தற்போது அவர் கூறியபடி சாலை வசதியும் செய்து கொடுத்துள்ளார். காடு போல் இருந்த எங்கள் கிராமத்தை ஊராக மாற்றியுள்ளார். மேலும் கோயில் இல்லாத எங்கள் ஊருக்குக் கோயிலும் கட்டிக் கொடுப்பதாகக் கூறியுள்ளார். அவருக்கு எங்களுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்'' என்று ராமலட்சுமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x