Last Updated : 11 Feb, 2021 04:51 PM

 

Published : 11 Feb 2021 04:51 PM
Last Updated : 11 Feb 2021 04:51 PM

தை அமாவாசை: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் பல்லாயிரக்கணக்கானோர் வழிபாடு

காவிரி ஆற்றில் திரண்டிருந்த பொதுமக்கள். படங்கள்:ஜி.ஞானவேல்முருகன்.

திருச்சி

தை அமாவாசை நாளான இன்று மறைந்த தங்களது முன்னோர்களுக்கு, பொதுமக்கள் நீர்நிலைகளில் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

மறைந்த முன்னோர்களுக்கு மகாளய அமாவாசை, ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுப்பது இந்து மக்களின் வழக்கம். இந்த நிகழ்வுகளுக்குத் திருச்சியைப் பொறுத்தவரை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை பிரத்யேக இடமாக விளங்கி வருகிறது. இந்த நாட்களில் இங்கு பல ஆயிரக்கணக்கானோர் திரள்வர்.

இதன்படி, தை அமாவாசை நாளான இன்று திருச்சியில் காவிரிக் கரையான அம்மா மண்டபம், கருட மண்டபம் உள்ளிட்ட படித்துறைகளிலும், கொள்ளிட ஆற்றங்கரைகளில் உள்ள படித்துறைகளிலும் ஏராளமான பொதுமக்கள் மறைந்த தங்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் அளித்தனர்.

காவிரியாற்றில் குறைந்த அளவே தண்ணீர் ஓடியதால், பெரும்பாலோனோர் ஆற்றுக்குள் இறங்கி மணல் திட்டுகளில் அமர்ந்து தர்ப்பணம் கொடுத்தனர். தொடர்ந்து, பிண்டங்களைத் தண்ணீரில் கரைத்துவிட்டு, புனித நீராடிவிட்டு கோயில்களுக்குப் புறப்பட்டனர். மேலும், படித்துறைகளில் காத்திருந்த ஏழை, எளியோருக்கு உணவுப் பொட்டலங்கள் மற்றும் காணிக்கைகளை வழங்கினர்.

அம்மா மண்டபம் படித்துறையில் தர்ப்பணம் அளிக்கும் குடும்பத்தினர்.

தை அமாவாசையை ஒட்டி, அம்மா மண்டபம் உட்பட காவிரி படித்துறை பகுதிகளில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அம்மா மண்டபத்தில் சேரும் வாழை இலை, பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை உடனுக்குடன் அகற்றும் பணியில் மாநகராட்சித் துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபட்டனர். தீயணைப்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். போலீஸார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

வீணாகிய உணவுப் பொட்டலங்கள்..

பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்துவிட்டு கோயில் அல்லது வீட்டுக்குப் புறப்படும் முன்பு ஏழை, எளியோருக்கு அன்னதானம் அளித்துச் செல்வது வழக்கம். இதன்படி, அம்மா மண்டபம் பகுதியில் அமர்ந்திருந்த ஆதரவற்றவர்களுக்குப் பலரும் உணவுப் பொட்டலங்களை வழங்கினர். தேவைக்கு அதிகமாக உணவுப் பொட்டலங்கள் குவிந்ததால், அவற்றை ஆதரவற்றவர்கள் குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x