Published : 11 Feb 2021 04:22 PM
Last Updated : 11 Feb 2021 04:22 PM

கரோனா தடுப்பூசி, டெங்கு தடுப்பு நடவடிக்கை: சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் சுகாதாரத்துறைச் செயலர் ஆலோசனை

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சியில் கரோனா தடுப்பூசி போடும் பணி மற்றும் டெங்கு முதலான தொற்று நோய்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:

பெருநகர சென்னை மாநகராட்சியில் கரோனா தடுப்பூசி போடும் பணி மற்றும் டெங்கு முதலான தொற்று நோய்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து மருத்துவப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள், காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை முதலான பணியாளர்கள் அனைவருக்கும் விரைவில் கரோனா தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தினந்தோறும் குறைந்தபட்சம் 12,000 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரத்தினை குறுஞ்செய்தியாக மேற்குறிப்பிட்ட பணியாளர்களுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். IMA/IAP மூலம் தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி போடும் பணியினை துரிதப்படுத்த வேண்டும்.

சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் துப்புரவு அலுவலர்கள் மூலம் கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை முன்களப் பணியாளர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மாநகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி போதுமான அளவு இருப்பு வைத்து முன்களப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணிபுரியும் இடத்திற்கு அருகிலேயே தடுப்பூசி போடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கொசுப்புழு தடுப்பு பணியாளர்களை கொண்டு வீடு வீடாக சென்று கொசுப்புழு வளரும் இடங்களை கண்டறிந்து அழித்தல், மேல்நிலைத் தொட்டி மூடிய நிலையில் உள்ளனவா என ஆய்வு செய்தல் போன்ற பணிகளை தீவிரப்படுத்தி, முந்தைய காலக்கட்டங்களில் டெங்கு பாதித்த பகுதிகளை Hot Spot ஆக கருதி அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த வேண்டும்.

மேலும், நீரினால் பரவும் தொற்று நோய்களை கட்டுப்படுத்த குடிநீரில் குளோரின் அளவை சரிபார்த்தல், குடிசைப் பகுதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் கூட்டுப் பணியாக சுத்தம் செய்தல் போன்ற பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்”. என பேசினார்.

இக்கூட்டத்தில் இணை ஆணையாளர் (சுகாதாரம்) திவ்யதர்ஷினி உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பூச்சியியல் வல்லுநர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்”.

இவ்வாறு சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x