

சுகாதாரப் பணியாளர்கள் தொடர் தயக்கத்தால் கரோனா தடுப்பூசியை புதுச்சேரி தலைமைச்செயலர் அஸ்வனிகுமார் இன்று போட்டுக்கொண்டார். "புதுச்சேரியில் உள்ள மருத்துவர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் அனைவரும் கரோனா தடுப்பு ஊசியை விரைந்து செலுத்தி கொள்ள முன்வர வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.
புதுச்சேரிக்கு கோவிஷீல்டு தடுப்பூசி 17,500 பாட்டில்கள் கடந்த ஜனவரி இரண்டாவது வாரம் வந்தன. புதுச்சேரியில் 8 மையங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணி நடக்கிறது. முதல்கட்டமாக புதுச்சேரியில் 24 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது. முதல் கட்டத்தில் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
நாளொன்றுக்கு 800 பேருக்கு கரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மிகவும் குறைவானோரே ஊசி போட்டு வருகின்றனர். இதுவரை 15 நாட்களில் 4770 பேர் மட்டுமே ஊசி போட்டுள்ளனர். தொடர்ந்து பலரும் ஊசி போட வருவதில்லை.
இதனால் முன் களப்பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தலைமை செயலர் அஸ்வனி குமார், அரசு செயலர் சுந்தரேசன் ஆகியோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தொடர்ந்து அவர்கள் 20 நிமிடம் தனிமைப்படுத்தப்பட்டு சோதனை செய்த பின்பு அனுப்பிவைக்கப்பட்டனர்.
தடுப்பூசி போட்ட பின்னர் தலைமைச்செயலர் அஸ்வனிகுமார் கூறுகையில், "கரோனா தடுப்பில் இருந்து பாதுகாக்க மத்திய அரசு கொண்டு வந்த தடுப்பூசி தற்போது தீவிரமாக செலுத்தப்பட்டு வருகின்றது. இதனை அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்பதற்காக நான் தற்போது இந்த தடுப்பூசி போட்டுக் கொண்டு உள்ளேன். முன் களப்பணியாளர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் அனைவரும் இதனை விரைந்து செலுத்தி கொள்ள முன்வர வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.