Published : 11 Feb 2021 02:56 PM
Last Updated : 11 Feb 2021 02:56 PM
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் முன் தினமும் காலை முதல் இரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நெரிசல் ஒத்தக்கடை வரை நீடிப்பதால் மாட்டுத்தாவணி முதல் ஒத்தக்கடை வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தென் தமிழகத்தின் தலைநகராக திகழும் மதுரையில் போக்குவரத்து நெரிசல் தீர்க்க முடியாத பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அது நகரின் வளர்சசிக்கும் தடையாக உள்ளது.
தற்போது போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளை அடையாளம் கண்டு, அதில் உயர்மட்ட மேம்பாலம், பறக்கும் பாலம் அமைக்கப்படுகிறது.
அந்த வகையில் நத்தம் சாலை, பைபாஸ் ரோடு, கோரிப்பாளையம், வைகை ஆறு உள்ளிட்டப்பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகளும், பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகளும் நடக்கின்றன.
ஆனால், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வழியாக செல்லும் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையான மதுரை - மேலூர் உயர் மட்ட மேம்பாலம் அமைக்கப்படவில்லை.
பேருந்து நிலைம் முன் தற்காலிகத் தீர்வாக போக்குரவத்து போலீஸார் சிக்னல் அமைத்துள்ளனர். ஆனால், சிக்னல் போடும்போது மதுரை -மேலூர் சாலைகளில் நீண்ட வரிசையில் இரு புறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
இதனால், தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள், பேருந்து நிலையத்திற்குள் திரும்ப முடியாமல் சிரமப்படுகின்றன. சிக்னல் போட்டதும், ஏற்கெனவே சிக்னலில் காத்திருக்கும் வாகனங்கள் கே.கே.நகர், ஒத்தக்கடையை நோக்கி நகருவதற்குள் அடுத்து சிக்னல் விழுந்து விடுவதால் பேருந்து நிலையத்திற்குள் பஸ்கள் செல்ல முடியாமல் தினமும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
அதுபோல், பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறும் வழியாக தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள், மதுரை-மேலூர் சாலையைக் கடந்து வெளியேற முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் மாயராஜ் கூறுகையில், ‘‘மதுரை-சென்னை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களை இணைக்கும் ‘ரிங்’ ரோடு, சிவகங்கை மாவட்டத்தை இணைக்கும் திருவாதவூர் சாலை, நத்தம் சாலை மற்றும் அழகர் கோயில் சாலையை இணைக்கும் நரசிங்கம்-ஒத்தக்கடை ரோடு போன்ற சாலைகள், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வரும் மதுரை-மேலூர் சாலையில் இணைகின்றன.
இந்த சாலையில் மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மட்டுமில்லாது உயர் நீதிமன்றக் கிளை, வேளாண் கல்லூரி, சென்ட்ரல் மார்க்கெட், பூ மார்க்கெட் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த அலுவலகங்கள், மார்க்கெட்டுகள் செயல்படுகின்றன.
தென் மாவட்டங்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் மட்டுமில்லாது காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட் செல்லக்கூடிய சரக்கு வாகனங்கள் கூட இந்த சாலை வழியாகதான் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கும், மதுரை நகர் பகுதிக்கும் வந்து செல்கின்றன.
இந்தச் சாலையில் மாட்டுத்தாவணி முதல் ஒத்தக்கடை வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாளாக உள்ளது. ஆனால், அதற்கான நடவடிக்கை தாமதமாவதால் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் முன்பும், ஒத்தக்கடை ஜங்ஷன் பகுதியிலும் இயல்பாகவே காலை முதல் இரவு வரை போக்குவரத்து நெரிசல் உள்ளது.
உயர்மட்ட பாலம் அமைந்தால் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வராமல் மேலூர் சாலைக்கும், ரிங்ரோட்டிற்கும் செல்லும் வாகனங்கள், பெரியார் பேருந்து நிலையம், கே.கே.நகர் செல்லும் வாகனங்கள் உயர்மட்ட மேம்பாலம் வழியாகச் செல்லலாம்.
அதனால், இந்த வாகனங்களால் ஏற்படும் நெரிசல் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் பகுதியில் குறையும். பாலம் அமைக்காததால் அனைத்து வாகனங்களும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வழியாகக் கடந்து செல்வதால் நெரிசல் நாளுக்குள் நாள் அதிகரித்து வாகன ஓட்டிகள், பேருந்து நிலையம் பகுதியை கடந்து செல்ல முடியாமல் சிரமம் அடைந்துள்ளனர். அதனால், பூ மார்க்கெட்டில் தொடங்கி ஒத்தக்கடை வரை மேம்பாலம் அமைக்க வேண்டும், ’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT