Published : 11 Feb 2021 02:32 PM
Last Updated : 11 Feb 2021 02:32 PM

கிராம வங்கி அதிகாரி நேர்க்காணல், கிளார்க் நியமன தேர்வு; ஒரே தேதியில் இரண்டு தேர்வுகள், தேதி மாற்றம் வேண்டும்: சு. வெங்கடேசன் கோரிக்கை

சென்னை

கிராம வங்கிகளின் அதிகாரி நியமனங்களுக்கான நேர் காணலும், கிளார்க் நியமனங்களுக்கான இறுதித் தேர்வும் ஒரே நாளில் நடைபெறுவதால் தேர்வர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று வங்கிப் பணியாளர் தேர்வு ஆணையத்திற்கும், தமிழ்நாடு கிராம வங்கித் தலைவருக்கும் தேதிகளை மாற்றி அமைக்கும்படி சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்திக்குறிப்பு வருமாறு:

“கிராம வங்கிகளின் அதிகாரி நியமனங்களுக்கான நேர் காணலும், கிளார்க் நியமனங்களுக்கான இறுதித் தேர்வும் ஒரே நாளில் நடைபெறவுள்ளதை மாற்றி தேர்வர்களின் பாதிப்பைப் போக்குமாறு மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் வங்கிப் பணியாளர் தேர்வு ஆணையத்திற்கும், தமிழ்நாடு கிராம வங்கித் தலைவருக்கும் கடிதம் எழுதியுள்ளார்

சு. வெங்கடேசன் எம்.பி கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது.

"மண்டல கிராமவங்கிகளுக்கான அதிகாரிகள் நியமனங்களுக்கான நேர்காணல் பிப்ரவரி-19 ல் இருந்து 22 வரை வங்கிப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ளது என எனக்கு தெரிவிக்கப்பட்டது. மண்டல கிராம வங்கிகளின் எழுத்தர் இறுதித் தேர்வுகளும் பிப்ரவரி-20 அன்று நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அழைப்புக் கடிதங்களும் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த இரண்டு தேர்வுகளும் ஒரே தேதியில் இருப்பதால் அது நிறைய தேர்வர்களைப் பாதிக்கக் கூடும். அவர்களில் சிலர் என்னைத் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு கண்டு உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

தேதி மாற்றம் தேவை

ஆகவே அதிகாரிகள் நியமனத்திற்கான நேர் காணல் தேதியைப் பிறிதொரு நாளுக்கு மாற்றி இரண்டு தேர்வுகளிலும் பங்கேற்க வேண்டிய பலரின் பாதிப்பைத் தவிர்க்குமாறு வேண்டுகிறேன்"

பணி நியமனங்களுக்கான தயாரிப்புகளை மாதக் கணக்கில் செய்யும் இளைஞர்களின் சிரமத்தை கணக்கிற் கொண்டு தேதிகள் மோதாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும், கடிதங்களைத் தொடர்ந்து தேதி மாற்றத்திற்கான முயற்சிகளை செய்வேனென்றும் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்”.


இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x