Published : 11 Feb 2021 01:36 PM
Last Updated : 11 Feb 2021 01:36 PM

மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவரானார் கமல்ஹாசன்: முதல்வர் வேட்பாளராகவும் பொதுக்குழு தீர்மானம்

சென்னை

மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவராக கமல்ஹாசனை நியமித்து பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. முதல்வர் வேட்பாளராகவும் அவரை அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியைக் கடந்த 2017-ம் ஆண்டு கமல்ஹாசன் தொடங்கினார். அதன் தலைவராக கமல்ஹாசன் இருந்து வருகிறார். மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்ட சில ஆண்டுகளில் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்தது. அதில் மக்கள் நீதி மய்யம் சில தொகுதிகளில் 1 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகளும், சில தொகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளும் பெற்று அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

தமிழகத்தில் சுமார் 4 சதவீத வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பெற்றது. ஆனால், அடுத்த ஆண்டே நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என முடிவெடுத்தார் கமல்.

அதன் பின்னர் மக்கள் நீதி மய்யம் கூட்டங்களில் கூட்டணி அமைப்பது குறித்துப் பேசிய கமல் ஊழல் கறைபடியாத கட்சிகளுடன் கூட்டணி என்று பேசினார். ஒத்த கருத்துள்ள நல்லவர்கள் கூட்டணிக்கு வருவார்கள் என்று பேசினார். மேலும், திமுக கூட்டணிக்குச் செல்வீர்களா என்கிற கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் ஆரம்பித்த நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் அந்தக் கட்சியின் முதல் பொதுக்குழு, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் கூடியது. இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 800 பேர் வரை கலந்துக்கொண்டனர். இந்தக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் நிலைப்பாடு, கூட்டணி, தேர்தலை எதிர்க்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முக்கியமான தீர்மானமாக கமல்ஹாசன் டார்ச் லைட் சின்னத்தை மீண்டும் பெற்றதற்கு அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்படும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதேப்போன்று கமல்ஹாசனை நிரந்தர தலைவராக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்த கமல்ஹாசனுக்கு முழு அதிகாரமும், முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசனை தேர்வு செய்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெரும்பாலான தீர்மானங்கள் வழக்கமாக கமல்ஹாசன் நடத்திய கூட்டங்களில் சமீப காலங்களில் வாக்குறுதிகளாக அறிவித்தவைகள் மற்றும் ட்விட்டரில் அவர் வெளியிட்ட கருத்துகளே தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏழு தமிழர் விடுதலை, இந்தி சமஸ்கிருத திணிப்பு, தமிழக நிதி நிலை அறிக்கை வெள்ளை அறிக்கை, ஜெயலலிதா மரணம் விசாரணை, தமிழக சட்டம் ஒழுங்கு சீரழிவு, திராவிடக்கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுப்பது, மது நோயாளிகள் அதிகரிப்பு, யானைகள் உயிரிழப்பு, கிராமசபைகள் கூட்டப்படாதது குறித்த தீர்மானம் போன்றவை முக்கிய தீர்மானம் ஆகும்.

நாட்டை உலுக்கி வரும் 3 வேளாண் சட்டங்கள், விவசாயிகளின் தொடர் போராட்டம் குறித்து ஆதரவு, எதிர்ப்பு என்கிற எந்தவித தீர்மானமும் போடப்படவில்லை.

கமல்ஹாசனே மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவர் தீர்மானம்

தமிழ் மண்ணுக்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டுமென்பதற்காக தன் திறமை, தொழில், செல்வம், புகழ், அனுபவம் அனைத்தையும் பயன்படுத்தி இரவு பகல் பாராது உழைக்கும் நம் தலைவர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிரந்தரத் தலைவராக செயல்பட வேண்டும் என அனைத்துப் பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பாகவும் வைக்கப்பட்ட கோரிக்கையை தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளார். அதன்படி கமல்ஹாசன் இன்று முதல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிரந்தரத் தலைவராகச் செயல்படுவார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

கட்சித்தொடர்பான முடிவெடுக்க கமல்ஹாசனுக்கு முழு அதிகாரம்

கட்சி தொடர்பான எந்த முடிவையும் எடுப்பதற்குரிய அதிகாரம் தலைவர் கமல்ஹாசனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களாலும் ஏகமனதாக அளிக்கப்படுகிறது. தேர்தல்களுக்கான கூட்டணி அமைப்பது, தனித்துக் களம் காண்பது, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம், தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் தலைவர் கமல்ஹாசனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களாலும் ஏகமனதாக அளிக்கப்படுகிறது.

முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன்

* 2021 தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு உழைத்து மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களைப் பெருவெற்றி பெறச் செய்து நமது தலைவர் கமல்ஹாசனை தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கச் செய்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். ‘சீரமைப்போம் தமிழகத்தை’ எனும் நமது கனவினை நனவாக்க நாம் ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும்.

இவ்வாறு கமல்ஹாசனை முன்னிறுத்தி அனைத்து அதிகாரங்களும் கமல்ஹாசனுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x