சென்னை விமான நிலையத்தில் காமராஜர், அண்ணா பெயர்கள் நீக்கம்; தமிழக மக்களை அவமதிக்கும் செயல்: கே.எஸ்.அழகிரி கண்டனம்

கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம்
கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து காமராஜர், அண்ணா ஆகியோரின் பெயர்களை அகற்றுவது தமிழக மக்களை அவமதிக்கிற செயல் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார் .

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (பிப். 11) வெளியிட்ட அறிக்கை:

"சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள உள்நாட்டு விமான முனையத்திற்கு காமராஜர் பெயரும், அயல்நாட்டு விமான முனையத்திற்கு அண்ணா பெயரும் சூட்டப்பட்டிருந்த நிலையில், தற்போது அப்பெயர்கள் அகற்றப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழகத்தின் தனிப்பெரும் தலைவர்களாக இன்றைக்கும் விளங்குகிற காமராஜர், அண்ணா ஆகியோரின் பெயர்களை விமான நிலையங்களிலிருந்து அகற்றுவது தமிழக மக்களை அவமதிக்கிற செயலாகும்.

தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டுக்காகவும் தமது வாழ்நாளை அர்ப்பணித்த இருபெரும் தலைவர்களின் புகழுக்குக் களங்கம் கற்பிக்கின்ற வகையில் அலட்சியப் போக்கோடு, சூட்டப்பட்ட பெயர்களை அகற்றிய மத்திய பாஜக அரசு, உடனடியாக அந்த பெயர்கள் இடம் பெறுகிற வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அப்படி திரும்ப பெயர்களை இடம் பெறச் செய்கிற வகையில் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கடுமையான போராட்டங்களை மத்திய பாஜக அரசு சந்திக்க நேரிடுமென எச்சரிக்கிறேன்".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in