Published : 11 Feb 2021 11:10 AM
Last Updated : 11 Feb 2021 11:10 AM
மத்திய அரசு, தமிழகத்தின் பெரும் தலைவர்கள் காமராஜர் மற்றும் அண்ணா ஆகியோரை அவமதிக்கும் வகையில் அவர்களது பெயர்களை சென்னை விமான நிலைய முனையங்களில் நீக்கி இருப்பது தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் செயல் என ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா இன்று வெளியிட்ட அறிக்கை:
“சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முனையங்களில் இருந்த காமராஜர் உள்நாட்டு விமான முனையம் மற்றும் அண்ணா வெளிநாட்டு விமான முனையம் என்பதில் உள்ள காமராஜர் மற்றும் அண்ணா ஆகியோரின் பெயர்களை மத்திய அரசு அகற்றியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் தொடங்கி இன்றுவரை தமிழ் மொழி மீதும், தமிழ் இனம், கலை, கலாச்சாரம் மற்றும் தமிழினம் போற்றும் தலைவர்கள் மீதும் தொடர் தாக்குதல்களையும், அவமதிப்புகளையும் செய்துகொண்டே வருகிறது.
இதில் ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளில் தமிழ்நாட்டில் தமிழர்கள் புறக்கணிப்பு, ஜல்லிக்கட்டுக்குத் தடை, பொங்கல் பண்டிகை விடுமுறை ரத்து, செம்மொழித் தமிழாய்வு மையம் மூடும் முயற்சி, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு உள்ளிட்டவை சில எடுத்துக்காட்டுகளாகும்.
தற்போது மோடியின் பாஜக அரசு, கல்விக் கண் திறந்த காமராஜர் மற்றும் சமூக நீதிக்கும், சாதி ஒழிப்பிற்கும் தனது வாழ்நாளை அர்ப்பணித்த அண்ணா ஆகியோரை அவமதிக்கும் வகையில் இவர்களது பெயர்களை சென்னை விமான நிலைய முனையங்களில் நீக்கி இருப்பது தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கத் தோன்றுகிறது.
மத்திய அரசின் இந்த இருட்டடிப்புச் செயலானது தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவது மட்டுமின்றி தமிழ் இனத்தின் மீதான பாசிசத் தாக்குதல் ஆகும். இதுகுறித்து, நடைபெற்றுக் கொண்டுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் குரல் எழுப்பி, மீண்டும் இருபெரும் தலைவர்களின் பெயர்களை பழையபடியே சென்னை விமான நிலையத்தில் சூட்டுவதற்கு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT