Published : 11 Feb 2021 10:53 AM
Last Updated : 11 Feb 2021 10:53 AM
சசிகலா குறித்து நான் பேசமாட்டேன். டிடிவி தினகரன்தான் 18 எம்.எல்.ஏக்களைப் பிரித்துக்கொண்டு போனார். அதனால் அவரைத்தான் விமர்சிப்பேன். சசிகலா, இளவரசியின் சொத்து முடக்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என முதல்வர் பழனிசாமி பேசினார்.
சேலம் மாவட்டம் ஒமலூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அளித்த பேட்டி:
சசிகலா அடக்குமுறைக்கு அஞ்சமாட்டேன் என்று சொல்லியிருக்கிறாரே?
அதை அவரிடம்தான் கேட்க வேண்டும். இது என்ன வம்பாக இருக்கிறது? ஜனநாயக நாட்டில் யார் யாரைப்போய் அடக்குமுறை செய்ய முடியும். அவர்களிடம் கேட்கவேண்டிய கேள்வியை என்னிடம் கேட்டால் நான் என்ன சொல்ல முடியும்?
மறுபடியும் கட்சிப் பணியில் ஈடுபடுவேன், முடிந்தால் தலைமைச் செயலகத்துக்குச் செல்வேன் என சசிகலா சொல்கிறாரே?
நாங்கள் ஏற்கெனவே சொல்லிவிட்டோமே. அமைச்சர் ஜெயக்குமார் சொல்லிவிட்டார். கே.பி.முனுசாமியும் சொல்லிவிட்டார்.
இது அண்ணன் - தம்பி பிரச்சினை என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளாரே?
அது தவறான செய்தி. அவர் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் உள்ள மனத்தாங்கல் குறித்துப் பேசியதைத் திரித்துப் போட்டுள்ளார்கள்.
சசிகலா வருகை அதிமுகவில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
நான் திருப்பி திருப்பிச் சொல்ல முடியாது. நாங்கள் அதிமுகவை நடத்திக் கொண்டிருக்கிறோம். அதிமுகவில் யார் இருக்கிறார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெளிவுபடுத்திவிட்டார். அதன் பின்னர் அவர் வந்தால் தாக்கம் ஏற்படுமா? இவர் வந்தால் தாக்கம் ஏற்படுமா என்றால் நான் என்ன சொல்வது?
கட்சி நிர்வாகிகளைத் தொடர்ந்து நீக்கி வருகிறீர்களே?
ஆமாம். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் நீக்குகிறோம். மற்ற கட்சிகளில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டால் நீக்குவதுபோல் நாங்களும் நீக்குகிறோம்.
சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டு வருகிறதே?
மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்கவேண்டிய கேள்வியை என்னிடம் கேட்டால் என்ன சொல்வது? ஏற்கெனவே நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அரசாங்கத்துக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
கூட்டணிக் கட்சிகள், பாஜக முன்னணித் தலைவர்கள், பிரேமலதா உள்ளிட்டோர் சசிகலா வருகையை ஆதரிக்கிறார்களே?
ஆதரித்தால் அது அவர்கள் விருப்பம். அவர்களை நாம் என்ன கேட்க முடியும். அதில் நாங்கள் என்ன கருத்து சொல்ல முடியும். இப்படித்தான் இருக்கவேண்டும் என அடுத்த கட்சிகளை நாம் எப்படிக் கேட்க முடியும். அதிமுகவில் என்ன நிலைப்பாடு என்பதை அமைச்சர் ஜெயக்குமார், கே.பி.முனுசாமி ஆகியோர் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள்.
கூட்டணி இழுபறி உள்ளதே?
இழுபறி எங்கே உள்ளது, நீங்கள்தான் சொல்கிறீர்கள். இழுபறி என்று எப்படிக் கண்டுபிடித்தீர்கள். திமுகவில் என்ன பேச்சுவார்த்தை நடைபெற்றது என்று கேட்கிறீர்களா? பொதுவாக அனைத்துக் கட்சிகளிலும் கூட்டணிப் பேச்சுவார்த்தை பல கட்டங்களாக நடக்கும்.
இட ஒதுக்கீடு கொடுக்க வாய்ப்பு உண்டா?
அது பகிரங்கமான கேள்வி கிடையாது. அது எந்தச் சூழ்நிலையில் எதைச் செய்ய வேண்டுமோ அந்த அந்தச் சூழ்நிலையில் அரசாங்கம் செயல்படும்.
டிடிவி தினகரன் அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்கிறார். அவர் கட்சியில் வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?
அமமுக ஒரு கட்சி என்று எப்படிச் சொல்ல முடியும். அதிமுக வேறு, அமமுக வேறு. அமமுக எப்படியோ மூக்கை நுழைத்துப் பார்க்கிறது. நிச்சயம் ஒன்றும் நடக்காது. அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் சேர விருப்பபட்டால் தலைமை முடிவு செய்யும்.
திமுக பொது எதிரி. சேர்ந்துதான் முறியடிக்க வேண்டும் என்று சசிகலா தெரிவித்துள்ளாரே?
இது அவர்களுடைய கருத்து. அதிமுகவைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர், திமுக ஒரு தீய சக்தி என்று கூறினார். அவர்களை எதிரிக் கட்சியாகப் பார்க்கிறோம். அவர்களை எதிர்த்தே போட்டியிட்டுத் தொடர்ந்து போராடி வெற்றி பெற்று வருகிறோம்.
உங்கள் பேட்டியில் சசிகலா குறித்து அதிகம் பேசுவதில்லை. டிடிவியைத்தான் அதிகம் விமர்சிக்கிறீர்களே?
கட்சியில் இல்லாதவர்கள் குறித்து ஏன் பேச வேண்டும். டிடிவி தினகரன் எங்கள் கட்சியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏக்களைப் பிரித்துகொண்டு சென்று ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும், கட்சியை உடைக்க வேண்டும், பிரிக்க வேண்டும் என்று செயல்பட்டார். ஆனால், கட்சியை உடைக்க முடியவில்லை. அமமுக என்று ஒரு கட்சியைத் தொடங்கினார். அதனால்தான் அவரைப் பற்றிப் பேசுகிறோம்.
திமுக ஆட்சி அமைத்தால் அமைச்சர்கள் ஊழல் குறித்து தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்கிறாரே?
உச்ச நீதிமன்றம் ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைத்துள்ளது. இது தெரியாமல் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார். திமுக முன்னாள் அமைச்சர்கள் 23 பேர் மீதான ஊழல் புகார் குறித்து வழக்கு நடைபெற்று வருகிறது
முதல்வர் மட்டுமே வெளியே வருகிறார். துணை முதல்வர் ஓபிஎஸ் வெளியில் வருவதில்லை என்று துரைமுருகன் சொல்கிறாரே?
அவர் அவருடைய கட்சியைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். மு.க.அழகிரி வெளியில் வந்துள்ளார். அதைப் பற்றி அவர் பேசட்டும். திட்டமிட்டு விஷமத்தனமான பிரச்சாரத்தை திமுகவினர் மேற்கொண்டு வருகின்றனர். ஒரு எள் மணி அளவு கூட எங்கள் கட்சியில் பிளவை ஏற்படுத்த முடியாது.
வேலூரில் துப்பாக்கியுடன் நபர் பிடிபட்டுள்ளார். தற்போது சென்னை மற்றும் சேலத்திற்கு மிரட்டல் வந்துள்ளது? அச்சுறுதல் உள்ளதா என்று நினைக்கிறீகளா?
அச்சுறுத்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் எதையும் சந்திக்கத் தயாராக இருக்கின்றேன். என்னைப் பற்றி உங்களுக்கெல்லாம் தெரியும். இந்தக் கேள்விக்கே இடமில்லை.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பதிலளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT