Published : 11 Feb 2021 03:12 AM
Last Updated : 11 Feb 2021 03:12 AM
சட்டப்பேரவை தேர்தலில் புதிய அணியை உருவாக்க காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கள் நீதி மய்யம் கட்சியை கமல்ஹாசன் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கினார். கட்சி தொடங்கிய ஓராண்டில் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 3.69 சதவீதம் வாக்குகளை பெற்றது. ஒரு சில தொகுதிகளில் 3-வது இடத்தை பிடித்தது.
இதனை தொடர்ந்து, நடைபெற்ற தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை. வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் பணிகளில் ஈடுபட்டு வந்தது.
இந்தநிலையில், வரும் சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து புதிய அணியை உருவாக்க கமல்ஹாசன் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: காங்கிரஸ் உள்ளிட்ட ஒரு சில கட்சிகளை இணைத்து மக்கள் நீதி மய்யம் தலைமையில் புதிய அணியை உருவாக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். அதே நேரத்தில், திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்தை இணைத்து போட்டியிட வைக்க காங்கிரஸ் முயற்சிகளை மேற்கொள்கிறது.
இருப்பினும், திமுக கூட்டணியில் இணைவதற்கு கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு தற்போது விருப்பம் இல்லை.
இதனால்தான் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி "எங்கள் கூட்டணிக்கு கமல்ஹாசன் வர வேண்டும்" என்று அழைப்பு விடுத்தபோது கூட "என்னுடைய தந்தை காங்கிரஸ்காரர். நாங்களும் காங்கிரஸ் அன்பை பெற்றவர்கள்தான். அதிமுக, திமுகவுக்கு மாற்றாக மக்கள் புதிய மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்" என்று கமல்ஹாசன் கூறினார்.
இருப்பினும், இனி வரும் நாட்களில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகளை பொறுத்து கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முடிவு எடுக்க உள்ளார். கூட்டணி அமைத்து போட்டியிடுவதில்தான் தற்போதைக்கு ஆர்வம் காட்டி வருகிறார். கமல்ஹாசன் நினைத்த கூட்டணி அமையாவிட்டால் தனித்து போட்டியிடக் கூட வாய்ப்புள்ளது. அதற்கும் தயாராகத் தான் உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT