Published : 11 Feb 2021 03:12 AM
Last Updated : 11 Feb 2021 03:12 AM
2011-ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்துக்காக மதுரை, கோவை, திருச்சி, சென்னை உள்ளிட்ட ஐந்து ஊர்களில் பெரிய மாநாடு போன்று அதிமுகவினர் ஏற்பாடு செய்திருந்த பிரம்மாண்டக் கூட்டத்துக்கு ஹெலிகாப்டரில் வந்து பேசினார்.
அப்போது இந்த நிகழ்ச்சிகளில் கட்சியினரும், பொதுமக்களும் மிகப்பெரியளவில் கூடியதாகப் பேசப்பட்டது. மதுரையில் ஜெயலலிதா பங்கேற்ற அந்தக் கூட்டம், விமானநிலையம் செல்லும் சுற்றுச்சாலையில் அக்கட்சியின் தற்போதைய எம்எல்ஏ ஒருவருக்குச் சொந்தமான இடத்தில் நடந்தது.
அக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசும்போது, மு.க.அழகிரி, அவரதுநண்பர்களைப் பட்டியலிட்டு கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததோடு ஆட்சிக்கு வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்றும் கூறினார். அவரது இந்தப் பேச்சு பெரும் விவாதப் பொருளாகவே மாறியது.
பின்னர் ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்து முதல்வரானார். அந்த சென்டிமென்ட்டால் அதன்பிறகு ஜெயலலிதா பங்கேற்ற கூட்டங்களும், அவர் இறந்த பிறகு தற்போது வரையும் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்கும் அதிமுக நிகழ்ச்சிகளும் அந்த இடத்தில்தான் நடக்கின்றன.
அந்த இடத்தை அதிமுகவினர் ஜெயலலிதா மீதான அன்பால் ‘அம்மா திடல்’ என்று அழைத்தனர். அந்த இடத்தில் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் வந்து இறங்குவதற்காக ஹெலிபேடும் அமைக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதா நினைவாக தற்போது வரை அந்த ஹெலிபேடு அழிக்கப்படாமல் உள்ளது. இதனால், மதுரையில் அந்த இடம் பிரபலமானது.
இந்நிலையில், கடந்த வாரம் பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா மதுரை வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இரவு பங்கேற்ற அவரது பொதுக்கூட்டத்துக்கு பாஜகவினர், அதிமுக நிகழ்ச்சிகள் வழக்கமாக நடக்கும் ‘அம்மா திடலை’ கூட்டணிக் கட்சி என்ற உரிமையோடு கேட்டனர். ஆனால், அந்த இடத்தின் உரிமையாளரான அதிமுக எம்எல்ஏ சற்று தயங்கினார். அவர், கட்சித் தலைமையிடம் கேளுங்கள், அனுமதித்தால் தருகிறேன் என்றார்.
பாஜக மாநில தலைமை, அதிமுகதலைமையிடம் பேசியது. அவர்கள் கொடுக்குமாறு கூறியதால் ஜேபி.நட்டா பங்கேற்ற பாஜக பொதுக்கூட்டம் திட்டமிட்டபடி ‘அம்மா திடலில்’ நடந்தது.ஆனால், பாஜகவினர் அந்தக் கூட்டத்துக்கான அழைப்பிதழில் தொடங்கி மற்ற விளம்பரங்களிலும் ‘வாஜ்பாய் திடல்’ என்று குறிப்பிட்டிருந்தனர். இது உள்ளூர் அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் மற்றும் கட்சியினர் மத்தியில் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. கூட்டணிக் கட்சி என்பதால் அவர்களால் எதிர்ப்புத் தெரிவிக்க முடியவில்லை.
உள்ளூர் அதிமுகவினரோ, ‘‘இதற்குத்தான் இடத்தைக் கொடுக்கத் தயங்கினோம்,’’ என்று கட்சி மேலிடத்தில் வருத்தத்தைப் பதிவு செய்தனர். அதனால், அந்த இடத்தை மாற்றுக் கட்சியினருக்குக் கொடுக்கக்கூடாது என்ற முடிவோடு அதிமுகவினர் உள்ளதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT